மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 4 ஜுன் 2020

சபரிமலை போராட்டத்திற்கு பின்னணியில் பாஜக!

சபரிமலை போராட்டத்திற்கு பின்னணியில் பாஜக!

சபரிமலை போராட்டம் பாஜகவின் திட்டப்படிதான் நடப்பதாக கேரள மாநில பாஜக தலைவர் கூறிய நிலையில், முதல்வர் பினராயி விஜயன் இப்பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாஜக கேரள மாநிலத் தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை நேற்று முன்தினம் யுவ மோர்ச்சா அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில், “சபரிமலை போராட்டம் என்பது பாஜகவுக்கு மிகப்பெரிய வாய்ப்பு. இதனை சரியான முறையில் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பாஜகவின் திட்டப்படிதான் இந்த போராட்டம் நடைபெறுகிறது. அக்டோபர் மாதம் சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டு, சில பெண்கள் அங்கு சென்றபோது நடையை அடைக்கப் போவதாக தந்திரி கண்டரரு ராஜீவரு அறிவித்தார்.

அவ்வாறு அவர் அறிவிக்கும் முன்பு என்னுடன் ஆலோசித்தார். இவ்வாறு அறிவித்தால் அது நீதிமன்ற அவமதிப்பு ஆகுமா என கேட்டார். அதற்கு நான் ‘‘அவ்வாறு அறிவிப்பது நீதிமன்ற அவமதிப்பு ஆகாது. அது நீதிமன்ற அவமதிப்பு என்றால் அது எனக்கும் பொருந்தும், பாஜக தொண்டர்கள் அனைவருக்கும் பொருந்தும். எனவே நீங்கள் கவலைப்பட வேண்டாம். பாஜக உங்கள் பின்னால் இருக்கிறது’’ எனக் கூறினேன். அதன் பிறகு தான் அவர் தைரியமாக அதனை அறிவித்தார். தந்திரியின் அறிவிப்புக்குப் பிறகு தான் போலீஸார் பின் வாங்கினர். கோயிலுக்குள் பெண்கள் வராமல் தடுக்கப்பட்டனர்” என்று பேசியிருந்தார். அவரது பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று (நவம்பர் 6) தனது ட்விட்டர் பக்கத்தில், “பாஜகவின் அருவருப்பான அரசியல் மற்றும் பரிதாபகரமான வழிகள் அம்பலமாகியுள்ளன. சபரிமலை விவகாரத்தில் சிக்கலை உருவாக்க கேரளாவில் உள்ள பாஜக தலைவர்கள் முயன்றதற்கான ஆதாரங்கள் வெளிவந்துள்ளன. பாஜக மாநில தலைவரே இதில் ஈடுபட்டுள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது” என்று பதிவிட்டுள்ளார்.

செவ்வாய், 6 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon