மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 4 ஜுன் 2020

பாஜகவை வீழ்த்துவதே நோக்கம்: கே.பாலகிருஷ்ணன்

பாஜகவை வீழ்த்துவதே நோக்கம்: கே.பாலகிருஷ்ணன்

திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “வரும் 13ஆம் தேதி ஸ்டாலினை, சீதாராம் யெச்சூரி சந்தித்துப் பேசவுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் ஆகியோர் இன்று (நவம்பர் 6) நேரில் சந்தித்தனர். நிலவேம்பு குடிநீர் வழங்கி அவர்களை ஸ்டாலின் வரவேற்றார். சந்திப்பில் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா மற்றும் பொன்முடி ஆகியோர் உடனிருந்தனர்.

சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.பாலகிருஷ்ணன், “ ஒரகடம் பகுதியில் யமஹா, என் பீல்டு தொழிற்சாலைகளில் ஊழியர்கள் நடத்தும் போராட்டம் தொடர்பாகவும் சந்தித்துப் பேசினோம். இந்த விவகாரத்தில் சிஐடியு, தொமுச ஆகியவை இணைந்து போராடிவருகின்றன. இதுகுறித்து அரசாங்கத்தை வலியுறுத்தப் போராடுவது குறித்துக் கலந்துபேசி முடிவெடுக்கலாம் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

வரும் 13, 14 தேதிகளில் எங்களது மாநிலக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் கலந்துகொள்ள சீதாராம் யெச்சூரி வரவுள்ளார். அவர் இந்தியா முழுவதுமுள்ள மாநிலக் கட்சிகளின் தலைவர்களை சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கிறார். அதன்படி திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க விரும்புகிறார். தமிழகத்தில் பாஜகவையும் அதிமுகவையும் வீழ்த்துவோம் என்று திமுக அறிவித்துள்ளது. மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவிவருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

தேசிய அளவில் காங்கிரஸுடனான கூட்டணி குறித்து மார்க்சிஸ்ட் எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி நீடித்துவருகிறது. இதனால் திமுகவுடன் மார்க்சிஸ்ட் கூட்டணி வைக்குமா என்ற கேள்வி எழுந்தது.

தற்போது திமுக தலைவர் ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் சந்தித்து வருவதையும், சீதாராம் யெச்சூரி சந்திக்கவுள்ளதையும் பார்க்கும்போது, தேசிய அளவில் காங்கிரஸ் கூட்டணியில் மார்க்சிஸ்ட் இடம்பெறாவிட்டாலும், தமிழகத்தில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் திமுக கூட்டணியில் இருந்து தேர்தலை சந்திக்கத் தயாராகி வருவதாகவே தெரிகிறது.

செவ்வாய், 6 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon