மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 4 ஜுன் 2020

புளூவேல்: தற்கொலைக்கு முயன்ற சிறுவன்!

புளூவேல்: தற்கொலைக்கு முயன்ற சிறுவன்!

பெங்களூரை சேர்ந்த சிறுவன் சென்னையில் புளூவேல் விளையாட்டால் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

கடந்த ஆண்டு புளூவேல் விளையாட்டால் உலகம் முழுவதும் 100க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்துகொண்டார்கள். விளையாட்டின் ஆரம்பத்தில் எளிதான கட்டளைகளை கொடுத்து,இறுதியில் தற்கொலை செய்து கொள்ளத் தூண்டும் விளையாட்டுதான் புளூவேல். இதனால், மாணவர்கள் தற்கொலைக்கு முயற்சி செய்வதால் கடந்த ஆண்டு,இந்தியாவில் புளூவேல் தடை செய்யப்பட்டது. ஆனாலும் இணைய தளத்தில் இன்றும் இந்த விளையாட்டு உலா வந்தபடியே இருக்கிறது.

இந்நிலையில், பெங்களூரு சிறுவன் தற்கொலை செய்து கொள்வதற்காக கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சென்னைக்கு வந்தார். வீட்டில் அச்சிறுவன் காணாமல் போனதை அறிந்த அவனது பெற்றோர் இதுகுறித்து காவல் துறையில் புகார் அளித்தனர். காவல்துறையும், பெற்றோரும் சிறுவனை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். சிறுவன் பயன்படுத்தி வந்த கணினியை சோதனையிட்டதில் சிறுவன் புளூவேல் விளையாட்டிற்கு அடிமையானது தெரியவந்தது. அதில், பாலத்தின் மீது பயணிக்கும் காரில் விழுந்து தற்கொலை செய்ய வேண்டும் என பிறப்பிக்கப்பட்ட கட்டளையை பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

சென்னையிலிருந்து பெங்களூர் வருவதற்காக கோயம்பேட்டிலிருந்து இரவு புறப்படும் பேருந்துக்கு முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டின் நகல் சிறுவனின் இமெயிலில் இருந்திருக்கிறது. இதன்மூலம் சிறுவன் சென்னையில் இருப்பதை உறுதி செய்த பெற்றோர், சிறுவன் குறித்து சென்னையிலுள்ள தனது நண்பர் மணிகண்டனுக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மணிகண்டன் காத்து கொண்டிருந்தார். அப்போது, அந்த சிறுவனை ஒருவர் அழைத்துக்கொண்டு வந்தார்.

அவரிடம் விசாரித்த போது, அம்பத்தூர் மேம்பாலத்தில் அவர் காரில் சென்று கொண்டிருக்கையில் சிறுவன் அவரது காரில் விழுந்து விட்டதாகவும், அதனால் ஏற்பட்ட விபத்தில் முகத்திலும், காலிலும் பலமான காயங்கள் ஏற்பட்டதாகவும் கூறினார். சிறுவனுக்கு வானகரத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவனிடம் பணமும் இல்லை, முகவரியும் இல்லை என்பதால் அவரே பேருந்திற்கு முன்பதிவு செய்ததாக கூறியுள்ளார்.

இந்த விவரங்களை மணிகண்டன் சிறுவனின் பெற்றோருக்கு தெரிவித்தார். “பேருந்தில் அனுப்ப வேண்டாம், சிறுவனை காவல் துறையிடம் ஒப்படைத்து விடுங்கள், நாங்கள் நாளை வந்து சிறுவனை அழைத்துச் செல்கிறோம்” என்று சிறுவனின் பெற்றோர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து, கோயம்பேடு காவல் நிலையத்தில் சிறுவன் ஒப்படைக்கப்பட்டான். நேற்று (நவம்பர் 5) காலை அவனது பெற்றோர் சென்னை வந்தனர். சிறுவனுக்கு காவல்துறையினர் அறிவுரை சொல்லி பெற்றோரோடு அனுப்பி வைத்துள்ளனர்.

செவ்வாய், 6 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon