மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 4 ஜுன் 2020

திரிபுராவில் மே தின விடுமுறை ரத்து!

திரிபுராவில் மே தின விடுமுறை ரத்து!

பாஜக ஆளும் திரிபுராவில் மே தின விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற திரிபுரா சட்டமன்றத் தேர்தலில் கம்யூனிஸ்ட் ஆட்சியை வீழ்த்தி பாஜக - பூர்வகுடி மக்கள் கட்சி கூட்டணி ஆட்சியைப் பிடித்தது.

அதன் முதலே பாஜக, மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் அதன் சித்தாந்தத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளை மிக தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தேர்தல் முடிவுகள் வெளியான உடனேயே மார்க்சிஸ்ட் தொண்டர்கள், அலுவலகங்கள் தாக்கப்பட்டு சூறையாடப்பட்டன.

பின்னர் பிலோனியாவில் நிறுவப்பட்டிருந்த ரஷ்ய முன்னாள் அதிபரும் கம்யூனிஸ்ட் தலைவருமான லெனின் சிலை தகர்க்கப்பட்டது. இச்செயல் இந்தியா முழுவதும் சர்ச்சையைக் கிளப்பி, பலரது கண்டனங்களை எதிர்கொண்டது.

திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ நாளேடாக வங்க மொழியில் வெளிவந்து கொண்டிருந்த தேசார் கதா மீது நிர்வாகக் காரணங்களை சொல்லி மாவட்ட நிர்வாகம் தடை செய்தது. 40 வருடங்களாக திரிபுராவில் தொடர்ந்து வெளிவந்த இதழ் தடை செய்யப்பட்டது பெரும் சர்ச்சையானது.

10 நாட்கள் முடக்கத்துக்குப் பின்னர் தடையை உடைத்து மீண்டும் அந்நாளிதழ் வெளிவரத் தொடங்கியது.

இப்படியாக மார்க்சிஸ்டுகளின் அடையாளமும், உரிமையும் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் தற்போது மே மாத அரசு விடுமுறையையும் தளர்த்தப்பட்டுள்ளது.

கம்யூனிஸ்ட்களின் அடையாளங்களில் ஒன்றாக இருப்பது தொழிலாளர் தினம். 18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 19ஆம் நூற்றாண்டின் முதலிலும் ஒரு நாளைக்கு 12 முதல் 18 மணி நேரம் தொழிலாளர்கள் உழைக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. இறுதியாக 1890ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி தொழிலாளர்கள் இயக்கங்கள் சார்பாக காரல் மார்க்ஸ் தலைமையில் 8 மணி நேரம் மட்டுமே உழைப்பு என்ற கோரிக்கையுடன் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதையடுத்து 8 மணி நேர வேலை நேரம் நடைமுறைக்கு வந்தது.

இதனை நினைவுகூரும் விதமாக மே ஒன்றாம் தேதி உலகம் முழுவதும் தொழிலாளர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் அரசு விடுமுறையும் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், திரிபுரா அரசு கடந்த நவம்பர் 3ஆம் தேதி வெளியிட்ட 2019ஆம் ஆண்டிற்கான அரசு விடுமுறை பட்டியலில் மே தினம் விடுவிக்கப்பட்டுள்ளது. மே தினம் போன்று மேலும் 11 பண்டிகைகளும் நீக்கப்பட்டுள்ளது. திரிபுரா அரசின் இந்தச் செயலுக்கு கண்டனங்கள் வலுத்துள்ளன.

இதுகுறித்து திரிபுரா தொழிலாளர் நலத் துறை முன்னாள் அமைச்சர் மாணிக் கூறுகையில், “இந்த முடிவு முழுக்க முழுக்க தொழிலாளர்களுக்கு எதிரான ஒன்று. தொழிலாளர்களை எப்படி நடத்த வேண்டும் என்ற அவர்களது பார்வை எப்படி இருக்கிறது என்பதை இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம். உலக தொழிலாளர் தினம் என்பது உலகில் உள்ள அனைத்து விதமான வேலைகளுக்கும் பொருந்தும். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இது போன்ற நடவடிக்கைகளை நான் பார்த்தது இல்லை” என்று வேதனையோடு குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், திரிபுரா கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சங்கர் பிரசாத் தத்தா செய்தியாளர்களிடம் கூறுகையில், “திரிபுராவின் முதல் இடது முன்னணி அரசானது 1978ஆம் ஆண்டில் மே 1ஆம் தேதியை சம்பளத்துடன் கூடிய விடுமுறை நாளாக அறிவித்தது. ஆனால், தற்போதுள்ள பாஜக அரசானது எந்தக் காரணமும் இல்லாமல் அதை ரத்து செய்துள்ளது.

மே தினம் தொடர்பாக எந்த நிகழ்வுகளும் அன்று நடைபெறுவதைத் தடுக்கும் விதமாக இந்த அரசு எடுத்துள்ள முயற்சிக்கு எதிராக, சிஐடியு சார்பில் சர்வதேச தொழிலாளர் ஆணையத்திடம் முறையிட உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 6 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon