மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 7 ஜுன் 2020

ரயில் கொள்ளை: கைதானவர்கள் காவல் நீட்டிப்பு!

ரயில் கொள்ளை: கைதானவர்கள் காவல் நீட்டிப்பு!

சேலம் - சென்னை ரயில் கொள்ளை வழக்‍கில் கைதான கொள்ளையர்களை, வரும் நவம்பர் 26ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.

2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதியன்று, சேலம் - சென்னை எக்ஸ்பிரஸில் சென்னை ரிசர்வ் வங்கிக்குக் கொண்டுசெல்வதற்காக வைக்கப்பட்டிருந்த 323 கோடி ரூபாயில் இருந்து 5.78 கோடி ரூபாய் திருடப்பட்டது. ரயிலின் மேற்கூரையில் துளையிட்டு நடத்தப்பட்ட இந்தக் கொள்ளை சம்பவம் தொடர்பாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த மாதம், இந்த வழக்கு தொடர்பாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஏழு பேரைக் கைது செய்தனர் சிபிசிஐடி போலீசார். இவர்களில் ஐந்து பேரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் எடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

கொள்ளையடித்த பணத்தைப் பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்கு முன்பே தாங்கள் பங்கு பிரித்துச் செலவழித்து விட்டதாக, விசாரணையின்போது கொள்ளையர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, கைது செய்யப்பட்ட ஐந்து கொள்ளையர்களிடமும் தனித்தனியாக வாக்குமூலம் பெற்றுள்ளனர் சிபிசிஐடி போலீசார். எப்படி கொள்ளை நடைபெற்றது என்பது குறித்து செயல்முறை விசாரணையும் நடைபெற்றது. இந்த விசாரணையின்போது வீடியோ எடுக்கப்பட்டது.

கைதானவர்களின் காவல் முடிவடைந்த நிலையில், நேற்று (நவம்பர் 12) சைதாப்பேட்டை 11ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் பிரகாஷ் முன்னிலையில் ஐந்து குற்றவாளிகளையும் ஆஜர்படுத்தினர் சிபிசிஐடி போலீசார். அப்போது, ரயில் கொள்ளை தொடர்பான ஆதாரங்களை நீதிமன்றத்தில் அதிகாரிகள் தாக்கல் செய்தனர். இதையடுத்து, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை வரும் 26ஆம் தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஐந்து பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

செவ்வாய், 13 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon