மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 7 ஜுன் 2020

டிஜிட்டல் திண்ணை: ரஜினியை மிரட்டியது யார்?

டிஜிட்டல் திண்ணை: ரஜினியை மிரட்டியது யார்?

மொபைலில் டேட்டா ஆன் செய்துவிட்டுக் காத்திருந்தோம். தயாராக வைத்திருந்த ஸ்டேட்டஸுக்குப் போஸ்ட் கொடுத்தது.

“ஒருவரை 10 பேர் சேர்ந்து எதிர்க்கிறார்கள் என்றால் இதில் யார் பலசாலி? 10 பேர் சேர்ந்து ஒருவருக்கு எதிராக யுத்தத்துக்குப் போனால் பலசாலி அந்த 10 பேரா, இல்லை ஒருவரா? ‘ இப்படித்தான் பிஜேபி பற்றிய கேள்விக்குத் தெளிவாகக் குழப்பியிருக்கிறார் ரஜினி.

ரஜினியின் ஆதரவு கேட்டு பாஜக தரப்பிலிருந்து தொடர்ந்து ரஜினியிடம் பேசப்பட்டது. பேசவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுவந்தது. ஆனால், ரஜினி பிடி கொடுக்காமல் பேசிவந்தார். அதுவும் ஆடிட்டர் குருமூர்த்தி தொடர்ந்து ரஜினிக்கு அழுத்தம் கொடுத்துவந்தார். சில நாட்களுக்கு முன்பு, ரஜினியைத் தொடர்புகொண்டு பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி, ‘உங்களை சந்திக்க டெல்லியிலிருந்து முக்கியத் தலைவர் ஒருத்தர் வருவதாக சொல்றாரு. அவரு இங்கே வந்தால் அது தேவையில்லாமல் அரசியலாகிடும். அதனால நீங்களே ஒருமுறை டெல்லிக்குப் போய்ட்டு வாங்க. யாருக்கும் தெரியாமல் பேசிட்டு வாங்க...’ என்று சொன்னதாகச் சொல்கிறார்கள். அதற்கு ரஜினியோ, ‘நான் உங்ககிட்ட ஏற்கெனவே சொல்லிட்டேன். இப்போ இருக்கும் சூழ்நிலையில் கூட்டணி பற்றியெல்லாம் பேசுற நிலையில் நான் இல்லை. நான் இன்னும் அரசியல் கட்சி தொடங்கவே இல்லை. அதுக்குள் எதுக்கு என்னை ஒரு வட்டத்துக்குள் கொண்டு வர நினைக்கிறாங்க. அவங்களும் இங்கே வர வேண்டாம். நானும் அங்கே போகலை. யாரையும் பார்க்கவும் இல்லை. அதனால இந்த முயற்சிகளை இத்தோடு நிறுத்திட சொல்லுங்க..’ என்று வெளிப்படையாகவே சொல்லி விட்டாராம்.

ரஜினி சொன்ன விஷயங்களை டெல்லிக்கும் சொல்லிவிட்டாராம் குருமூர்த்தி. அதன் பிறகு டெல்லியில் இருந்து பாஜகவின் முக்கிய தலைவர் ஒருவர் ரஜினியைத் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். ‘நீங்க தப்பு பண்றீங்க. உங்க நல்லதுக்குதான் நாங்க சொல்றோம். தனியாக நீங்க களத்துல நின்றால் காணாமல் போய்டுவீங்க..’ என்று ரஜினியை எச்சரிக்கும் தொனியில் பேசியதாகச் சொல்கிறார்கள். அதன் பிறகே இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் பிஜேபி ஆட்சி பற்றிய கேள்விக்கு அவர் சொன்ன பதில்தான் இந்த ஸ்டேட்டஸின் தொடக்கத்தில் உள்ளது. அதாவது 10 பேர் சேர்ந்து எதிர்த்தாலும் ஒற்றை நபராக நின்று சமாளிக்கும் பலசாலி மோடி என்பதை நேரடியாகச் சொல்லாமல் மறைமுகமாகச் சொல்லியிருக்கிறார் ரஜினி.

ரஜினியின் இந்தப் பேச்சு பிஜேபியின் மிரட்டலுக்கு பயந்துதான் என்று சொல்கிறார்கள். ரஜினியோடு டெல்லியில் இருந்து பேசிய அந்தத் தலைவர் யார் என்பதுதான் இப்போது அரசியல் வட்டாரத்தில் பேச்சாக இருக்கிறது.” என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ்.

அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்தது வாட்ஸ் அப். தொடர்ந்து மெசேஜ் ஒன்றை டைப்பிங் செய்ய ஆரம்பித்தது வாட்ஸ் அப்.

”முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்றும் தலைமை செயலகத்தில் முக்கிய அமைச்சர்கள் சிலரை மட்டும் அழைத்து ஆலோசனை நடத்தியிருக்கிறார். அந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வர், ‘சபரிமலை ஐய்யப்பன் விவகாரத்தில் இதுவரைக்கும் நாம எந்தக் கருத்தும் சொல்லாமல் இருக்கோம். இனியும் அப்படியே இருந்துடலாம். சபரிமலைக்குப் பெண்கள் போகலாம்னு நாம சொன்னாலும் அது இன்னொரு தரப்பு மக்களிடம் அதிருப்தியை உண்டாக்கும். போக வேண்டாம்னு சொன்னாலும் அதுவும் சிக்கலாகும். அதனால எந்த சூழ்நிலையிலும் யாரும் எந்த கருத்தும் சொல்ல வேண்டாம். குறிப்பாக தொலைக்காட்சி விவாதங்களுக்குப் போகும் நம்ம செய்தி தொடர்பாளர்களிடம் உடனடியாக இதை சொல்லிடுங்க. சபரிமலை விவகாரம் தொடர்பாக விவாதங்கள் வந்தால் அதில் பங்கேற்க வேண்டாம். ஏன்னா இது மதம், மக்களோட நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயம். அதுல நாம விளையாட வேண்டாம்’ என்று சொல்லியிருக்கிறார். அமைச்சர் ஜெயகுமார் அங்கிருந்தபடியே செய்தித் தொடர்பாளர்களை தொடர்புகொண்டு முதல்வர் சொன்ன விஷயங்களை அவர்களுக்குச் சொல்லியிருக்கிறார்” என்ற மெசேஜ்க்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப்லைனில் போனது வாட்ஸ் அப்.

செவ்வாய், 13 நவ 2018

அடுத்ததுchevronRight icon