மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 7 ஜுன் 2020

கிட்ஸ் கார்னர்!

கிட்ஸ் கார்னர்!

நீச்சலடிக்க சொன்னது யார்?

பரி தண்ணீர்ல திணறி, ரொம்ப தூரம் நீந்திப் போய் ஒரு கரை ஓரமா வந்து சேர்ந்தான். கரையில் விழுந்த பரியைத் தூக்கிவிட்டுப் பேச ஆரம்பிச்சான் நீலன்.

"இப்போ ஆத்துல இருந்து உன் உயிரை காப்பாத்துனது யாரு?" கேட்டான் நீலன்.

பரிக்குப் பயங்கரமா கோபம் வந்துச்சு. ஆனா, தொடர்ச்சியா நடக்குற பல அதிசயங்களைப் பார்த்து அவனுக்கு இந்த உணர்வுகள் எல்லாம் பழகிருச்சு.

"நானேதான் என்னைக் காப்பாத்திக்கிட்டேன்" - வேண்டா வெறுப்பா பதில் சொன்னான் பரி.

"நீ அப்டினா என்ன? உன் உடம்பா, அறிவா, மனசா?" கேட்டான் நீலன்.

குழம்பிப்போனான் பரி. தப்பிச்சி வந்ததே பெரிய விஷயம். இதுல எதனால தப்பிச்சேன்னு எப்படி சொல்ல? சரி, இதுக்குப் பதில் சொன்னா உலகத்தோட எல்லா பிரச்சினையும் தீர்ந்திடுமா?இப்படியெல்லாம் பல கேள்விகள். ஆனா, இப்போ ஏதாவது ஒரு பதில் சொல்றதைத் தவிர பரிக்கு வேறு வழியில்லை.

"என் உடம்புதான் நீச்சலடிச்சு என்ன காப்பாத்துச்சு.." பதில் சொன்னான் பரி.

"உன் உடம்பு ஏன் நீச்சலடிச்சது? நீச்சலடிக்க சொல்லி யார் சொன்னா?"னு கேட்டான் நீலன்.

பரி இதே கேள்வியை தனக்குள்ளேயே கேட்டுக்கிட்டான். நம்மள யார் நீச்சலடிக்க சொன்னது? ஏன் ஆத்துக்குள்ள விழுந்த உடனே நீச்சலடிக்க ஆரம்பிச்சோம்? நம்ம டாமிகூட (பரியோட நாய்குட்டி) தண்ணிக்குள்ள தூக்கி போட்டா தானா நீச்சல் அடிக்குது. இப்படி தண்ணிக்குள்ள விழுங்கும்போது நீச்சலடிக்க சொல்றது யாரு?

பரி தனக்குள்ளேயே பல கேள்வி கேட்டான்.

"ரொம்ப யோசிக்கிற. திரும்ப ஒரு தடவை தண்ணிக்குள்ள போயிட்டு வா"னு சொல்லி, திரும்ப ஆத்துக்குள்ள பரியைத் தள்ளிவிட்டான் நீலன்.

இந்தத் தடவை ஆத்துல ஒரு பெரிய முதலை இருந்துச்சு. அது பரியைத் துரத்த ஆரம்பிச்சது.

- நரேஷ்

திங்கள், 12 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon