மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 25 ஜன 2021

சிறப்புக் கட்டுரை: ரிசர்வ் வங்கியுடன் அரசின் மோதல் தீருமா?

சிறப்புக் கட்டுரை: ரிசர்வ் வங்கியுடன் அரசின் மோதல் தீருமா?வெற்றிநடை போடும் தமிழகம்

அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினைகளையடுத்து ரிசர்வ் வங்கியின் ஆளுநரான உர்ஜித் படேல் பதவி விலகுவார் என்று சில தரப்புகளில் செய்திகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தின. பின்னர், ரிசர்வ் வங்கிக்குத் தன்னாட்சி என்பது அவசியம்தான் என்பதைச் சுட்டிக்காட்டி மத்திய அரசும் அக்டோபர் 31ஆம் தேதியன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. தற்காலிகமாகக் குழப்பங்களைத் தீர்ப்பதற்கு இது போதுமானதாக இருக்கலாம்.

மத்திய அரசு ரிசர்வ் வங்கிச் சட்டம் பிரிவு 7ஐ செயலாக்கம் செய்துவிட்டதாக சில செய்திகள் பரவியதும் சந்தையில் நிச்சயமற்ற நிலை உருவாகிவிட்டது. இச்சட்டப்பிரிவின் கீழ், ரிசர்வ் வங்கியின் ஆளுநருடன் ஆலோசனை நடத்திய பிறகு பொதுநலன் கருதி ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியும்.

சுதந்திரத்துக்குப் பிறகு இதுவரையில் இச்சட்டப்பிரிவு செயலாக்கம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆளுநருடன் ஆலோசித்த பிறகே உத்தரவுகள் வழங்கலாம் எனச் சட்டப் பிரிவு கூறினாலும் கூட, இச்சட்டப்பிரிவை செயலாக்கம் செய்வது ரிசர்வ் வங்கியின் தன்னாட்சியில் கைவைப்பதாகவே கருதப்படும். இதனால்தான் வரலாற்றிலேயே இச்சட்டப்பிரிவு பயன்படுத்தப்படவில்லை. இந்தப் பிரச்சினை சுமுகமாக முடிவுக்கு வருமா அல்லது மேலும் பெரிதாகிவிடுமா? ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு எந்த அளவுக்கு அழுத்தம் கொடுக்க விரும்புகிறதோ அதன் அடிப்படையிலேயே அதைத் தீர்மானிக்க முடியும்.

வட்டி விகிதங்கள் மட்டுமல்லாமல் பல்வேறு விவகாரங்களில் அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உண்டு. எடுத்துக்காட்டாக, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஏற்பட்ட பெரும் மோசடியைத் தவிர்ப்பதற்கு ரிசர்வ் வங்கி போதிய முயற்சி எடுக்கவில்லை எனவும், வங்கிகள் அதிகளவில் கடன்களை வழங்கியதாலேயே நிதி நெருக்கடி அதிகரித்துள்ளதாகவும் மத்திய அரசு ரிசர்வ் வங்கி மீது பழி சுமத்தியுள்ளது.

ரிசர்வ் வங்கிக்கு இதில் பொறுப்பு உள்ளது என்றாலும், ரிசர்வ் வங்கி மட்டுமே பொறுப்பு எனக் கூறி பழி சுமத்துவது சரியல்ல. பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஏற்பட்ட மோசடிக்கு அவ்வங்கியின் நிர்வாகக் குறைபாடே காரணம். பொதுத் துறை வங்கிகளை ஒழுங்குபடுத்துவதற்குக் கூடுதல் அதிகாரம் வேண்டும் என ரிசர்வ் வங்கி கேட்டுள்ளது. வங்கிகளில் அதிகளவில் கடன் வழங்கப்பட்டதற்கு ஒட்டுமொத்த அமைப்புமே காரணம்தான். வளர்ச்சியில் வேகக் குறைவு ஏற்பட்டதால் செயல்படா சொத்துகள் அதிகரித்துவிட்டன.

கடந்த வாரம், ரிசர்வ் வாங்கியின் சுதந்திரம் குறித்து ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநரான வீரல் ஆச்சார்யா பேசியபிறகு அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையேயான நல்லுறவு பெரிதளவில் சீர்குலைந்தது. ரிசர்வ் வங்கிக்கு அரசு தரும் அழுத்தத்தையும், இருதரப்புக்கும் இடையே தொடர்பு முறிவையுமே இது காட்டுகிறது. மற்ற விவகாரங்களோடு, பொதுத் துறை வங்கிகளை ஒழுங்குபடுத்துவது. ரிசர்வ் வங்கியிடமிருந்து இருப்புகளைப் பரிமாற்றுவது, பரிவர்த்தனைகளை ஒழுங்குபடுத்துவதற்கு புதிய ஆணையம் அமைப்பது குறித்தும் வீரல் ஆச்சார்யா பேசியிருந்தார். பரிவர்த்தனைகளுக்கு ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்படுவது குறித்து ரிசர்வ் வங்கி எதிர்ப்பு அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டிருந்தது.

பொதுத் துறை வங்கிகளை ஒழுங்குபடுத்துவது குறித்து கூடுதல் கவனம் தேவை. மேலும், இருப்புகளைப் பரிமாற்றுவதும் ரிசர்வ் வங்கிக்கும், அரசுக்கும் அறிவற்ற செயலாக இருக்காது. போதிய மூலதனமின்றி ரிசர்வ் வங்கியால் குறிக்கோள்களை எட்ட முடியாது என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநரான ராகேஷ் மோகனும் தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் நிதி இருப்புகளை நிதிப் பற்றாக்குறையைச் சரிசெய்ய மத்திய அரசு பயன்படுத்தினால் அரசின் மீது நம்பிக்கை குறைந்துவிடும். மேலும், இருப்புகளைப் பெருமளவில் பரிமாற்றினால் ரிசர்வ் வங்கியின் இருப்பு நிலை கடுமையாக சுருங்கி எதிர்காலத்தில் லாபத்தைப் பாதிக்கும்.

இதுமட்டுமல்லாமல், உடனடி நடவடிக்கை செயல்திட்டத்திலும் அரசுக்குத் தளர்வுகள் வேண்டுமென்று சில செய்திகள் வெளியாகியுள்ளன. இத்திட்டத்தின்படி, வங்கி சாரா நிதி நிறுவனங்கள் நிதி நெருக்கடியைச் சந்திக்கும்போது வலுவற்ற வங்கிகளால் கடன் வழங்க முடியாது. வங்கி அமைப்பில் போதிய ரொக்கம் இருப்பதை உறுதி செய்வதாக ரிசர்வ் வங்கி உறுதியளித்துள்ள போதிலும் அரசுக்கு விருப்பம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

வலுவற்ற வங்கிகள் தங்களது தொழிலை வழக்கம்போல தொடர்வதற்கு முன்பு அவர்களது இருப்பு நிலையைச் சரிசெய்வது மிக அவசியமாகும். இதுபோன்ற சமயத்தில் ஒழுங்குமுறைகளைத் தளர்த்துவதால் வாராக் கடன்கள் மேலும் வந்து குவிந்துவிடும். வாராக் கடன் பிரச்சினையைக் கண்டறிந்து, சரிசெய்ய முயற்சி செய்ததில் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் நல்ல முன்னேற்றத்தைக் கண்டுள்ளன. விதிமுறைகளையும், ஒழுங்குமுறைகளையும் தளர்த்துவதால் பிரச்சினைகள் மேற்கொண்டு அதிகரித்து, பொருளாதாரம் காலப்போக்கில் பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் வருவது இந்தியாவில் இது முதன்முறையல்ல. அதுமட்டுமல்லாமல் இதுபோன்ற கருத்து வேறுபாடுகள் இந்தியாவில் மட்டும் நடப்பதல்ல. இருந்தாலும், ரிசர்வ் வங்கியின் செயல்பாட்டு தன்னாட்சிக்கு மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டும். தீர்மானங்களை எடுப்பதற்கான ரிசர்வ் வங்கியின் அதிகாரங்களைச் சீர்குலைப்பதால் சந்தையில் நம்பிக்கை குறைவு ஏற்பட்டு கொள்கைகளில் கோளாறு ஏற்படும். இப்பிரச்சினையில் பதற்றத்தைத் தணிப்பதற்கு மத்திய அரசு நல்ல நடவடிக்கையையே எடுத்துள்ளது. இதையே பின்பற்றி ரிசர்வ் வங்கியுடன் தேவையில்லாத பிரச்சினைகளை ஏற்படுத்துவதை மத்திய அரசு தவிர்க்க வேண்டும். நல்ல போக்கில் பயணிப்பதற்கான எல்லா வாய்ப்புகளும் அரசிடம் உள்ளன.

நன்றி: லைவ் மின்ட்

தமிழில்: அ.விக்னேஷ்

நேற்றைய கட்டுரை: இந்தியப் பொருளாதார மாற்றங்களும் வேலைவாய்ப்புகளும்! - பாகம் 2

திங்கள், 12 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon