மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 7 ஜுன் 2020

இந்தியா வரும் மலாவி மாம்பழங்கள்!

இந்தியா வரும் மலாவி மாம்பழங்கள்!

மலாவி நாட்டிலிருந்து முதன்முறையாக மாம்பழங்களை இந்தியா இறக்குமதி செய்யவுள்ளது.

அக்டோபர் - டிசம்பர் மாதங்களில் வழக்கமாக இந்தியாவில் மாம்பழ சீசனாக இருக்காது. ஆனால் இந்த ஆண்டில் சுவைமிக்க மாம்பழங்களை இந்தியர்கள் வாங்கி ருசிக்கலாம். இந்தியாவின் அல்போன்சா வகை மாம்பழங்களின் சுவையைப் போன்று ஒருமித்த சுவைகொண்ட மலாவி மாம்பழங்கள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. மலாவி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இந்த மாம்பழங்கள் அடுத்த வாரம் முதல் மும்பை, புனே ஆகிய நகரங்களில் விற்பனைக்கு வருவதாக வர்த்தகர்கள் கூறுகின்றனர். ஒரு டஜன் மாம்பழங்கள் ரூ.1,500 முதல் ரூ.1,800 வரையில் விலைபோகும் என்று மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பழ வியாபாரியான பி.என்.கைரே, எகனாமிக் டைம்ஸ் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

இந்த மலாவி மாம்பழங்கள் சந்தைகளில் விற்பனைக்கு வந்தாலும் ரத்னகிரி அல்போன்சா மாம்பழங்களும் சந்தைகளில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மலாவி நாட்டிலிருந்து இந்த ஆண்டில் மட்டும் 150 டன் அளவிலான மாம்பழங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. சென்ற ஆண்டிலேயே மலாவி மாம்பழங்களை இந்தியாவில் இறக்குமதி செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், தரச் சோதனைகளில் பின்னடைவு ஏற்பட்டதால் இறக்குமதி செய்ய முடியாமல் போனதாக பி.என்.கைரே கூறுகிறார். தற்போது இரு நாடுகளும் மாம்பழ இறக்குமதிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்தியாவில் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையில் மாம்பழ சீசன் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 13 நவ 2018

chevronLeft iconமுந்தையது