மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 4 ஜுன் 2020

சிறப்புக் கட்டுரை: சொர்க்கமும் நரகமும்!

சிறப்புக் கட்டுரை: சொர்க்கமும் நரகமும்!

சி.முருகேஷ் பாபு

புதிய நிதிக் கதைகள் – 02

பஞ்சுப் பொதி போன்ற மேகங்களுக்கு இடையே பயணித்துக்கொண்டிருந்தது அந்தப் பேருந்து. அரைத் தூக்கத்தில் இருந்த கணேசமூர்த்தி கண்விழித்துப் பார்த்தார். இது என்ன… மதுரையில் கம்பெனி மீட்டிங்கை முடித்துவிட்டு ஆம்னி பஸ்ஸில் ஏறினோமே… வழியில் திருச்சி, பெரம்பலூர், திண்டிவனம்தானே வரும்… ஊட்டியோ, கொடைக்கானலோ வராதே… இது எந்த மலைப் பகுதி… வண்டி ஏன் இந்தத் திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறது என்ற கேள்வியோடு நன்றாகக் கண்களை விரித்துப் பார்த்தார். அது மலைப்பகுதியே அல்ல… மொத்தமாக சுத்தமாக மேகங்கள் படர்ந்திருக்கும் வான் பகுதி.

இப்போது கணேசமூர்த்திக்கு நன்றாக விழிப்பு வந்துவிட்டது. முந்தைய நாள் இரவில் நடந்த விஷயங்கள் நன்றாக பளிச்சென்று நினைவுக்கு வந்தன. நேற்று இரவு வேலையெல்லாம் முடித்து அவர் அறைக்கு வந்து சேரவே எட்டு மணிக்கு மேலாகிவிட்டது. அவருக்கும் செல்வ ரத்தினத்துக்கும் ஒரே அறை. கணேசமூர்த்திக்கு முன்னதாகவே அறைக்கு வந்துவிட்ட செல்வ ரத்தினம் அன்றைய கணக்குகளை எழுதிக் கொண்டிருந்தார்.

இருவருக்கும் ஒரே அலுவலகத்தில்தான் வேலை. இதுபோன்ற மீட்டிங்குகளுக்கு வந்தாலும் ஒன்றாகத்தான் வருவார்கள். அப்போதெல்லாம் இப்படித்தான், பைசா சுத்தமாக கணக்கு எழுதிவிடுவார்.

“ஏன் செல்வா… ஆபீஸ்ல குடுக்கற கணக்குகளை எழுதி வைக்கிறீங்க சரி… இது என்ன… டீ குடிச்சது, மோட்டல்ல பாத்ரூம் போனது எல்லாமா எழுதறது… ஏன், வீட்ல சிஸ்டர் கணக்கு கேட்பாங்களா..?” என்றுகூடக் கிண்டலாகக் கேட்டிருக்கிறார் கணேசமூர்த்தி.

“அப்படி இல்ல கணேசா… எதுவானாலும் கணக்கு வேணும்ல… சின்னதுல இருந்து அப்படியே பழகிடுச்சு… ஒருகாலத்துல கணக்கு எழுதி எவ்வளவு தேவைனு தெரிஞ்சுகிட்டு கடன் வாங்கற நிலைமைல இருந்துச்சு குடும்பம்… இப்ப கடவுள் புண்ணியத்துல அப்படி இல்லனாலும் கணக்கு எழுதாம இருக்க முடியுமா என்ன..?” என்பார்.

இருவரும் ஒன்றாகத்தான் புறப்பட்டார்கள். வழியில் மோட்டலில் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று சொன்ன கணேசமூர்த்தியை மடக்கி ரோட்டோட சிறு கடை ஒன்றில் இட்லி சாப்பிட வைத்தார் செல்வரத்தினம்.

“மதுரைல எல்லாமே வீட்டு சாப்பாடு மாதிரி இருக்கும்… இதை விட்டுட்டு அரைகுறையா வேக வெச்ச மோட்டல் சாப்பாட்டை ஏன் சாப்பிடணும்” என்று சொன்ன செல்வரத்தினம், இருவருக்குமான பில்லைக் கொடுத்தார். வழக்கம் போல கணக்கு எழுதிக் கொண்டார்.

இருவரும் ஏறிய பஸ்ஸில் பெரிதாக கூட்டமில்லை. பர்த் பஸ் என்பதால் டிவி தொல்லை இல்லை. ஏறியதும் படுத்துவிட்டார்கள்.

நெடுஞ்சாலைதான் என்றாலும் பஸ்ஸின் வேகம் டிரைவரின் கட்டுக்குள் இருக்கிறதா என்ற சந்தேகம் வரும் அளவுக்கு காற்றாகப் பறந்தது பேருந்து. திருச்சியைத் தாண்டும்போது அரைக் கண் விழித்துப் பார்த்தார் கணேசமூர்த்தி. அதன்பிறகு டொம் என்ற சத்தம் மட்டும் கேட்டது.

அந்த சத்தத்துக்குப் பிறகு இப்போதுதான் மேக மூட்டத்துக்கு நடுவில் மிதந்து செல்லும்போதுதான் கண் விழிக்கிறார். திரும்பி பக்கத்தில் பார்த்தால் செல்வரத்தினமும் கண்களை மூடி படுத்திருந்தார். தன் கையை நீட்டி அவரை எழுப்ப முயன்ற போதுதான் தன் உருவம் திடமாக இல்லாமல் ஆவியாக இருப்பதை உணர்ந்தார்.

அப்படியென்றால்…

“ஆமா… டொம்முனு ஒரு சத்தம் கேட்டுதுல்ல… அது நம்ம வண்டி முன்னே போயிட்டிருந்த லாரி மேல இடிச்ச சத்தம்… ஒரே செகண்ட்தான்… டிரைவர், க்ளீனர், முன் வரிசைல இருந்த நீ, நான் உட்பட எட்டு பேர்… எல்லாரும் காலி…” என்றார் செல்வரத்தினம் கண்களை திறக்காமலே!

கணேசமூர்த்திக்குத் தூக்கி வாரிப் போட்டது.

“செல்வா… என்ன சொல்றே… என் பொண்ணுக்கு அடுத்த மாசம் டெலிவரி… என் பையனுக்கு இன்னமும் படிப்பு முடியலை… அதுக்குள்ளே ஏண்டா இப்படி ஆச்சு..?” என்று கணேசமூர்த்தி அழ முயற்சித்தார். உருவமே இல்லை… கண்ணீர் மட்டும் எப்படி இருக்கும்.

“டேய்… என் மகளும்தான் டெலிவரிக்கு வந்திருக்கா… மகன் கூட படிச்சுகிட்டுதான் இருக்கான்… இன்னொரு பொண்ணுக்குக் கல்யாணம் பேசியிருக்கேன் தெரியுமா… விதிப்படி நடக்கறதை நாம என்ன செய்ய முடியும்… அந்த பஸ்ல ஏறுனது நம்ம விதி..!” என்றார் செல்வரத்தினம்.

“அப்ப இந்த பஸ்..?”

“இது பஸ் இல்லை… எமலோக வாகனம்…” செல்வரத்தினம் இன்னும் கண்களைத் திறக்கவில்லை.

“எழவெடுத்த பய… நூத்தி இருபதுலயும் நூத்தி முப்பதுலயும் போனானே… அந்த பஸ்ஸு.. அதுதான் எமலோக வாகனம்… நீ எப்படிடா புலம்பாம இருக்கே..?” என்றார் கணேசமூர்த்தி.

எமலோகம் வந்துவிட்டது.

எல்லோரும் வரிசையாக இறங்கினார்கள். சில வெள்ளைக்காரர்கள் எல்லாம் வண்டியில் இருந்தார்கள். அன்றைய தேதியில் உலகில் இறந்தவர்கள் எல்லோரையும் ஒன்றாக அழைத்து வந்துவிடுவார்கள் போல.

கணேசமூர்த்திக்கு இறப்பு உறுதியாகத் தெரிந்துவிட்டதால் அடுத்த கவலை வந்துவிட்டது. இறந்ததை இனி மாற்ற முடியாது. அடுத்து நாம் சொர்க்கத்துக்குக் கொண்டு செல்லப்படுவோமா அல்லது நகரகத்துக்கா என்ற கவலை அவரைச் சூழ்ந்து கொண்டது.

ஆனால், எமலோகத்தில் எல்லோருக்கும் ஒரே மாதிரியான உபசரிப்புதான் நடந்தது. உள்ளே நுழைந்த எல்லோருக்கும் வெல்கம் ட்ரிங்க் மாதிரி ஏதோ கொடுத்தார்கள். ஒருவேளை சொர்க்கம் என்றால் இனிப்பாகவும் நரகம் என்றால் கசப்பாகவும் இருக்குமோ என்று எண்ணினார். ஆனால், ஒரே குழாயில் இருந்துதான் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டது.

சரி, இனிமேல்தான் பிரிப்பார்களாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டார். எல்லோரையும் வரிசையில் நிறுத்தினார்கள். சரியான ஆளைத்தான் சரியான நாளில்தான் கொண்டு வந்திருக்கிறோமா என்ற செக்கிங் நடைபெற்றது. அதில் ஏதும் குழப்பம் இல்லை என்றானதும் அங்கிருந்த அதிகாரி ஒருவர் பொதுவான அறிவிப்பை வெளியிட்டார்.

“எல்லோருக்கும் அறைகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இனி நீங்கள் அங்குதான் இருக்கப் போகிறீர்கள். இரண்டு பேருக்கு ஓர் அறை என்ற அடிப்படையில் ஒதுக்கீடு இருக்கும்” என்றார்.

அந்த அதிகாரி தோற்றத்தில் இருந்தவரிடம் கணேசமூர்த்தி கேட்டார்.

“சார்… இந்த சொர்க்கம், நரகம்னு நிறைய படிச்சிருக்கேன்… ஆனா, இங்கே அப்படி ஏதும் இல்லையே… எல்லாருக்கும் ஒரே மாதிரி ரூம்தான் கொடுக்கறீங்க… சிஸ்டம் ஏதும் மாறிடுச்சா..?” என்றார்.

அவர் அமைதியாகப் புன்னகைத்துவிட்டு கணேசமூர்த்தியிடம் அறைச் சாவியைக் கொடுத்தார். இங்கேயும் செல்வரத்தினத்தையும் கணேசமூர்த்தியையும் ஒரே அறையில்தான் போட்டார்கள்.

அறைக்குள் நுழைந்ததும் ஆளுக்கொரு கம்ப்யூட்டர் இருந்ததைப் பார்த்தார்கள். ஆன் பண்ணினார்கள். “உங்கள் பெயர்தான் பாஸ்வேர்டு…” என்று சொல்லப்பட்டிருந்தது.

கணேசமூர்த்தி தன் கம்ப்யூட்டரில் பாஸ்வேர்டைப் போட்டு லாகின் பண்ணினார். செல்வரத்தினமும் அப்படியே செய்தார். சில நொடிகளில் திரை ஒளிர டிவி திரை போல காட்சிகள் தெரிந்தன.

கணேசமூர்த்தியின் கம்ப்யூட்டர் திரையில் அவருடைய வீடு தெரிந்தது. அவருடைய சடலத்தை எடுத்துச் சென்று எரியூட்டிவிட்டு வந்து சில நாட்கள் ஆகியிருக்கும் போல தெரிந்தது. நெருங்கிய உறவினர்கள் எல்லோரும் சென்றிருக்க மனைவி, மகள், மகன் மட்டும் இருந்தார்கள்.

“அய்யய்யோ… குடும்பத்தைப் பிரிஞ்சு வந்துட்டோமே… அவங்க மூஞ்சிய கடைசியா ஒரு தடவை பார்க்க முடியலையேனு வருத்தப்பட்டேன்… இந்த சிஸ்டம் பரவாயில்லை…” என்று ரிலாக்ஸான கணேசமூர்த்தி, செல்வரத்தினத்தின் கம்ப்யூட்டர் திரையை எட்டிப் பார்க்க அதில் அவருடைய குடும்பக் காட்சி தெரிந்தது.

கணேசமூர்த்தி தன் குடும்பத் திரைப் பக்கம் கண்ணைத் திருப்பினார். மனைவி அழுதபடி படுத்திருக்க, மகள் அறைக்குள் போனாள். உள்ளே மருமகன் துணிகளை பெட்டியில் எடுத்து வைத்துக்கொண்டிருந்தார்.

“நான் கிளம்பறேன்… காரியத்துக்குச் சொல்லு… வந்துடறேன்… அப்புறம் முக்கியமான விஷயம்… அப்பா செத்துட்டாரு… எங்கம்மாவால டெலிவரி பார்க்க முடியாதுனு அங்கே கிளம்பி வந்துறாத… புரியுதா…” என்று சொல்லிவிட்டு பெட்டியை மூடினார்.

மகள் அழத் தொடங்க கணேசமூர்த்திக்கு கண்கள் கலங்கின. இப்போது அவருக்குக் கண்ணீர் வந்தது.

மருமகன் புறப்பட்டுப் போய்விட, வாசலில் சத்தம் கேட்டது. நாலைந்து பேர் வீட்டினுள் நுழைந்தார்கள். வீட்டில் இருந்த யாருக்குமே அவர்களை அடையாளம் தெரியவில்லை. ஆனால், கணேசமூர்த்திக்கு அவர்களை நன்றாகத் தெரிந்தது.

அவர் தன்னுடைய செலவுகளுக்காகக் கடன் வாங்கிய நிதி நிறுவன ஆட்கள். மனைவியின் எதிரே உட்கார்ந்து கடன் வாங்கியதற்காக பேப்பர்களைக் காட்டிவிட்டு, புதிதாக அந்தக் கடனை எல்லாம் மனைவி பெயரில் மாற்றியதையும் காட்டி அவற்றில் கையெழுத்து வாங்கிக் கொண்டார்கள். “உன் புருஷன் செட்டில்மெண்ட் பணம் வந்ததும் காசைக் குடுத்துட்டு இந்த டாகுமெண்ட்டை வாங்கிக்கோ” என்று சொல்லிவிட்டுப் போனார்கள்.

“அவர் செட்டில்மெண்ட் பணத்தை வெச்சு உன் படிப்பை முடிச்சுடலாம்… நீ குடும்பத்தைக் காப்பாத்துவேனு நினைச்சேனே…” என்று மனைவி அழுதபோது கணேசமூர்த்திக்கும் அழுகை பொங்கியது.

மெதுவாகத் திரும்பி செல்வரத்தினத்தைப் பார்த்தார். அவருடைய திரையைப் பார்த்தார். கணேசமூர்த்தி வீட்டுக்கு வந்தது போலவே நாலைந்து பேர் அவர் வீட்டிலும் நுழைந்தார்கள். அவர் மனைவி முன்னால் போய் அமர்ந்தார்கள்.

“அம்மா… உங்க வீட்டுக்காரர் ஆயுள் காப்பீடு எடுத்திருந்தார். சின்ன மகளை நாமினியாகப் போட்டு ரெண்டு லட்ச ரூபாய், உங்களை நாமினியாகப் போட்டு ரெண்டு லட்ச ரூபாய், உங்க மகனின் படிப்புக்காக ரெண்டு லட்ச ரூபாய், தவிர அவனை நாமினியாகப் போட்டு ரெண்டு லட்ச ரூபாய் பாலிசி எடுத்திருந்தார். அதுக்கான காசோலைகளை நாங்க கொண்டு வந்திருக்கோம். இந்தாங்க… உங்கக் குடும்பத்தைத் தவிக்க விட்டுடலை உங்க கணவர்… உங்க வாழ்க்கை அவர் இருந்தபோது எப்படி இருந்ததோ அது போலவே தொடர ஏற்பாடு செய்திருக்கார்… நல்ல விஷயம்… நாங்க வர்றோம்மா…” என்று புறப்பட்டார்கள்.

செல்வரத்தினத்தின் மனைவி கண்களிலும் கண்ணீர்… அது ஆனந்த கண்ணீர்!

இவர்கள் இருந்த அறைக்கதவு தட்டப்பட்டது. எட்டிப் பார்த்த ஓர் அதிகாரி கேட்டார்.

“சார்… இங்கே யாரோ சொர்க்கம், நரகம் பத்தி கேட்டாங்களாம்.. நான் எக்ஸ்ப்ளைன் பண்ணட்டுமா..?” என்றார்.

கணேசமூர்த்தி வேண்டாம் என்று தலையாட்டினார்.

“என் கம்ப்யூட்டர் திரை நரகம்… என் நண்பனோட கம்ப்யூட்டர் திரை சொர்க்கம்… இதுக்கு மேல என்ன விளக்கம் வேண்டியிருக்கு… என் குடும்பம் ஆயுள் முழுக்க கஷ்டப்படப் போறதைப் பார்த்து நான் நொந்து போவதைவிட பெரிய தண்டனை ஏதும் இல்லை…”

கணேசமூர்த்தி தரையில் சரிந்து குலுங்கிக் குலுங்கி அழத் தொடங்கினார்.

ஆயுள் காப்பீடு

1) இன்ஷூரன்ஸ் என்பது முக்கியம். குடும்பத்தில் உழைக்கும் நபரின் இழப்பின்போது அந்தக் குடும்பம் திகைத்து நின்றுவிடாமல் பொருளாதார ரீதியாக நிலைகொள்வதற்கு உதவி செய்வதுதான் ஆயுள் காப்பீடு. அதனால் எல்லோரும் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும்.

2) ஒருவர் தன்னுடைய வருமானத்தைப் போல பத்து மடங்கு அளவுக்கு பாலிசி எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது உழைக்கும் உறுப்பினரை இழந்த சூழலில் அந்தக் குடும்பம் கொஞ்சகாலத்துக்கு தாக்குப் பிடித்து தன்னை நிலைநிறுத்திக்கொள்வதற்கு இன்ஷூரன்ஸ் நிச்சயம் உதவி செய்யும்.

3) இன்றைய சூழலில் இன்ஷூரன்ஸ் என்பது வரி சேமிப்புக்கான வழியாகப் பார்க்கப்படுகிறது. இன்ஷூரன்ஸ் என்பது நம் அடிப்படை என்பதை உணர வேண்டும். ஆனால், குறைந்தபட்சம் இன்ஷூரன்ஸே எடுக்காமல் இருப்பதைவிட வரி சேமிப்பு என்ற பெயரிலாவது எடுத்துக் கொள்வது நல்லது.

4) காலையில் வீட்டை விட்டுப் புறப்படும்போதே மாலையில் ஒருவேளை மழை வரலாம் என்ற எண்ணத்தோடு குடை எடுத்துச் செல்வது போலத்தான் இன்ஷூரன்ஸும். வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று நினைப்பதைவிட வருமுன் காப்போம் என்ற எண்ணமே சரி! ஆனால், இன்னமும் நம் நாட்டில் இன்ஷூரன்ஸ் எடுத்தவர்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தைத் தொடவில்லை என்பதே நிலை!

5) இன்ஷூரன்ஸில் பல வகைகள் இருக்கின்றன. டேர்ம், எண்டோவ்மெண்ட், மணிபேக், யூலிப் என பல வகைகள் இருந்தாலும் அடிப்படை பாதுகாப்பு என்பதுதான். எல்லாவற்றிலுமே ப்ளஸ், மைனஸ் இரண்டும் இருக்கின்றன. ஏதோ ஒருவகையில் பாதுகாப்பைத் தேடிக் கொள்ளுங்கள்.

6) டேர்ம் இன்ஷூரன்ஸ் என்பதன் பிரிமியம் தொகை மிக மிகக் குறைவு என்பது இதன் ப்ளஸ். மிக அதிகமான பாலிசி தொகைக்கு பாலிசி எடுத்தாலும் மிகக் குறைவான பிரிமியமே செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், பாலிசி முதிர்வடையும்போது பாலிசிதாரருக்கு அசம்பாவிதம் ஏதும் நிகழாதபோது பாலிசி தொகை கிடைக்காது என்பது இதில் உள்ள மைனஸ். ஆனால், இப்போது கட்டிய தொகையைச் சிறு லாபத்தோடு கொடுக்கும் வகையில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. ஆனாலும் மக்கள் மத்தியில் இதற்கு ஈர்ப்பு இல்லை. லாபம், ரிட்டர்ன் என்றெல்லாம் யோசிக்காமல் பாதுகாப்பு என்ற அடிப்படையில் யோசிக்கும்போது குறைந்த பிரிமியம், பெரிய பாலிசி என்ற கொள்கை கொண்ட டேர்ம் பாலிசி சிறந்ததுதான்.

7) அடுத்ததாகச் சொல்லப்படும் எண்டோவ்மெண்ட் மணிபேக் பாலிசிகள்தான் இன்றைக்கு இன்ஷூரன்ஸ் என்ற வகையில் பிரபலமாக இருக்கிறது. பாலிசிதாரருக்கு பாலிசி காலத்துக்குப் பிறகு கட்டும் பிரிமியத்துக்கு நல்ல ரிட்டர்னும் கிடைக்கிறது. அதேநேரத்தில் பாலிசிதாரருக்கு ஏதும் அசம்பாவிதம் நடந்துவிட்டால் குடும்பத்துக்குப் பாதுகாப்பாகவும் இருக்கிறது என்பதால் பலரும் இதைத் தேர்வு செய்கிறார்கள். இது இந்த பாலிசியின் ப்ளஸ். முந்தைய டேர்ம் பாலிசியில் உள்ள மைனஸான முதிர்வில் ஏதும் கிடைக்காது என்பதை இது சரி செய்கிறது. அடுத்து சொல்லப் போகும் யூலிப் பாலிசியில் உள்ள மைனஸான முதலீட்டு அபாயமும் இதில் இல்லை என்பதால் பலரும் இதைத் தேர்வு செய்கிறார்கள்.

8) அடுத்த பாலிசி வகை யூலிப். முதலீட்டில் கவனம் செலுத்தும் ஆசாமிகளுக்கு கொஞ்சமாவது பாதுகாப்பு வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டும் பாலிசி இது. இதில் உள்ள மைனஸ் என்னவென்றால் பாதுகாப்பை இரண்டாம் இடத்துக்கு தள்ளிவிட்டு முதலீட்டுக்கு, அதிலும் ரிஸ்கான பங்குச் சந்தை முதலீட்டில் கவனம் செலுத்தும் பாலிசி இது. நாம் கட்டும் பிரிமியத்தைப் பிரித்து பாதுகாப்புக்கும் பங்குச் சந்தை முதலீட்டுக்கும் கொண்டு செல்லும் பாலிசி இது. இன்ஷூரன்ஸ் என்பதே பாதுகாப்புக்குதான் என்பதால் இதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டாம் என்பது ஆலோசகர்களின் கருத்து.

9) குடும்பத்தில் உழைக்கும் உறுப்பினரின் இழப்பைக் கணக்கிடுவது போலவே குடும்பத்தின் நிலையையும் கணக்கில்கொள்ள வேண்டும். நம் இழப்பில் குடும்பம் அல்லாடக் கூடாது என்பது போலவே குடும்பத்தின் தேவை என்ன என்பதும் முக்கியம். திருமணமான புதிதில் தன் இணையின் பாதுகாப்புதான் முக்கியம். ஆனால், குழந்தை வந்த பிறகு குடும்பத்தின் எண்ணிக்கை கூடுதலாகிறது. அதைக் கவனத்தில்கொண்டு இன்ஷூரன்ஸ் அளவை அதிகப்படுத்த வேண்டும். இல்லை என்றால் இன்ஷூரன்ஸ் எடுத்தும் பயனில்லை. அதை அண்டர் இன்ஷூரன்ஸ் என்பார்கள். எனவே சரியான அளவில் இன்ஷூரன்ஸ் இருக்கிறதா என்பதும் முக்கியம்.

10) சம்பாதிக்கும் நிலை வந்தவுடனே சேமிப்பது நல்ல பழக்கம். வருமானத்தில் பத்து சதவிகிதமாவது சேமிப்பாக மாற வேண்டும் என்பது அடிப்படையான கணக்கு. ஆனால், அதற்கும் முன்னதாக பாதுகாப்பு வேண்டும். அதனால் எல்லோரும் இன்ஷூரன்ஸ் எடுங்கள்!

(அடுத்த கதை, அடுத்த செவ்வாய் அன்று…)

(கட்டுரையாளர் சி.முருகேஷ் பாபு முதுகலை பொருளாதாரப் பட்டதாரி. பத்திரிகைத் துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம். நிதி தொடர்பான கட்டுரைகளைப் பல்வேறு பத்திரிகைகளில் எழுதிவருபவர். நிதித் திட்டமிடல் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து பல நூல்கள் எழுதியிருக்கிறார். பல சிறுகதைகளை எழுதியிருக்கும் இவர், தற்போது திரைத்துறையில் எழுத்துப் பணியில் ஈடுபட்டுவருகிறார்.)

கதை 1

திங்கள், 12 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon