மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

குடும்ப வன்முறை: மூன்றில் ஒரு பெண் பாதிப்பு!

குடும்ப வன்முறை: மூன்றில் ஒரு பெண் பாதிப்பு!

குஜராத்தைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வொன்றில், திருமணமான பெண்களில் மூன்றில் ஒருவர் தனது கணவரால் வன்முறைக்கு உள்ளாவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் வதோதராவிலுள்ள சகஜ் எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனமானது ‘2030இல் சமத்துவ அளவீடுகள்’ என்ற தலைப்பில் வேறு சில அமைப்புகளுடன் இணைந்து ஆய்வொன்றை மேற்கொண்டது. தேசிய குடும்ப சுகாதாரக் கருத்துக்கணிப்பில் இருந்து, 15 முதல் 49 வயதுக்கு உட்பட்ட திருமணமான பெண்களில் 27 சதவிகிதம் பேர் குடும்ப வன்முறைக்கு உட்படுவதாகத் தெரிவித்துள்ளது சகஜ். இவர்களில் பெரும்பாலானோர் 15 வயதில் இருந்தே அடி உதை வாங்குவதாகவும் கூறியுள்ளது.

“ஒருபக்கம் இந்தியா பொருளாதார வளர்ச்சியில் வலுப்பெறுகிறது; மறுபக்கத்தில் சாதி, வகுப்பு, பாலின வேறுபாடுகளால் வளர்ச்சி பெறாமல் பின்தங்குகிறது. குறிப்பாக, இந்தியாவிலுள்ள திருமணமான பெண்களில் மூன்றில் ஒரு பங்கு பேர் தங்கள் கணவனிடம் அடி வாங்குகின்றனர். இவ்வாறு மனைவியைக் கணவன் அடிப்பதைப் பல பெண்கள் ஏற்றுக்கொள்கின்றனர். அந்த அளவுக்கு, இந்திய சமுதாயத்தில் ஆணாதிக்க மனப்பான்மை வேரூன்றியுள்ளது” என்று இந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களைக் குழந்தை பெறுபவர்களாக மட்டுமே சமுதாயத்தில் பெரும்பாலானோர் கருதுவதாகவும் இதில் கூறப்பட்டுள்ளது. சிறுவர்களை ஒப்பிடும்போது, இந்தியச் சிறுமிகள் குறைந்த கல்வியையும் சத்துணவையும் மருத்துவக் கண்காணிப்பையும் பெறுவதாகத் தெரிவித்துள்ளது சகஜ் நிறுவனம் நடத்திய ஆய்வு.

பெண்கள் முன்னேற்றத்துக்கான கொள்கைத் திட்டங்கள் வலுவாக அமல்படுத்தப்பட்டாலும், நாட்டின் பல பகுதிகளில் பெண்களுக்கு சமத்துவம் கிடைக்காத நிலையே தொடர்வதாக இதில் கூறப்பட்டுள்ளது.

திங்கள், 12 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon