மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

ராகுல், சோனியா ஜாமீனில் இருக்கிறார்கள்: பிரதமர்!

ராகுல், சோனியா ஜாமீனில் இருக்கிறார்கள்: பிரதமர்!

“நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுலும், சோனியாவும் ஜாமீனில் இருந்துவரும் நிலையில், அவர்கள் எப்படி எனக்கு நேர்மைச் சான்றிதழ் கொடுக்க முடியும்” என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.

பணமதிப்பழிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு கடந்த 8ஆம் தேதியுடன் இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், இதுதொடர்பாக மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டுமென வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இதுதொடர்பாக பிரதமரை காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சித்துப் பேசிவருகின்றனர்.

இந்த நிலையில் நேஷனல் ஹெரால்டு விவகாரத்தைக் குறிப்பிட்டு காங்கிரஸுக்குப் பதிலடி கொடுத்துள்ளார் பிரதமர். சத்தீஸ்கரில் வரும் 20ஆம் தேதி இரண்டாம் கட்ட சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள பகுதிகளில் பிரதமர் மோடி, நேற்று (நவம்பர் 12) தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிலாஸ்பூரில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பேசிய நரேந்திர மோடி, “ராகுலும் அவரது தாயார் சோனியாவும் ஜாமீனில் வெளியே இருந்து வருகிறார்கள். அவர்கள்தான் பணமதிப்பழிப்பால் ஏற்பட்ட பலன்கள் குறித்து கேள்வி எழுப்புகிறார்கள். ஜாமீனில் இருக்கும் அவர்கள்தான் எனக்கு நேர்மை குறித்த சான்றிதழை வழங்குகிறார்கள். பணமதிப்பழிப்பு நடவடிக்கையினால்தான் அவர்கள் ஜாமீன் கேட்க வேண்டி இருந்தது என்பதை அவர்கள் மறந்திருக்க மாட்டார்கள்” என்று விமர்சித்தார்.

“எப்படி இத்தனை சாலைகள், வீடுகளுக்கு மின் இணைப்புகள், ரயில்வே கட்டமைப்பை மேம்படுத்தினீர்கள் என்று மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். பணமதிப்பழிப்புக்கு முன்னர் மெத்தைகளுக்கு அடியிலும், கப்போர்டுகளிலும், சாக்கு மூட்டைகளிலும் பணம் இருந்தது” என்று குறிப்பிட்ட பிரதமர், ஆனால் பணமதிப்பழிப்புக்குப் பின் அவையெல்லாம் வெளிவந்துவிட்டது. இந்தப் பணத்தின் மூலமே பணிகள் நடைபெற்று வருகிறது” என்றும் தெரிவித்தார்.

திங்கள், 12 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon