மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 4 ஜுன் 2020

நிகழ்களம்: பொய்ச் செய்திகளின் ஆபத்தான பயணம்!

நிகழ்களம்: பொய்ச் செய்திகளின் ஆபத்தான பயணம்!

நரேஷ்

நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அரங்கில் அமர அங்கும் இங்கும் நகர்ந்துகொண்டிருந்தனர். அப்போதே காட்சி தொடங்கப்பட்டது. நிலோத்பல் தாஸ் என்ற நீளமான பெயரும் நீளமான முடியும் கொண்ட வசீகரமான இளைஞர் ஒருவர், இசைக் கருவி ஒன்றை வாசித்துக் கொண்டிருக்கிறார். திறமையான இசைக் கலைஞர் அவர். மத்தளம் போன்ற அந்த இசைக் கருவியை அவர் வாசிக்கும்போது அவரின் முகம் பூத்துச் சிவந்தது திரையில் பார்க்கும்போதுகூடத் தெளிவாகத் தெரிந்தது.

திரை கருமையானது. அடுத்த காட்சியில் அந்த இளைஞரின் முகம் மிகவும் சிவந்திருந்தது. இம்முறை ரத்தத்தால். அவர் தன்னை உயிருடன் விடுமாறு மன்றாடிக்கொண்டிருந்தார். அவர் பேசப் பேச உதைக்கப்படுகிறார், குத்தப்படுகிறார், கடுமையாகத் தாக்கப்படுகிறார். காரணம் குழந்தையைக் கடத்த வந்தவர்கள் என்னும் நவீன வதந்தி (Fake news). கூடவே அவரது நண்பர் அபிஜித் நாத்தும் கொல்லப்பட்டிருக்கிறார்.

அரங்கம் அமைதியாய் அடங்கியது. ஒரு சிலரின் கண்கள் கலங்கி உறைந்திருந்ததைக் காட்சிப்படுத்திக் காட்டினார். அந்த இளைஞர்களைப் பெற்றவர்களின் கண்ணீரும் நண்பர்களின் விவரிப்பும் மேலும் கனத்தைக் கூட்டின.

நேற்று (நவம்பர் 12) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஹயாத் ரெசிடென்சி ஓட்டல் (Hyaat Residency) அரங்கில் பொய் செய்திக்கு அப்பால் (Beyond the Fake news) என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்கிறது பிபிசி செய்தி நிறுவனம்.

முக்கியத்துவத்தின் அழுத்தம்

இந்தத் தொடக்கமே, அந்த நிகழ்ச்சி எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்த்தியது. ஆனால், நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டவர்கள் இந்நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை இன்னும் கூடுதலாக உணர்ந்திருந்தால் உன்னதமாக இருந்திருக்கும். வந்தவர்கள் தேவையானவற்றைத் தவிர்த்துத் தங்களின் தனிப்பட்ட கருத்துகளை அதிகமாக முன்வைத்துப் பேசியதைப் பார்க்க முடிந்தது. ஊடக அரசியல் ஆளுமைகளையும், பத்திரிகை ஆசிரியர்களையும் தாங்கிய அம்மேடையில் முன்வைக்கப்பட்ட கருத்துகள் நிகழ்ச்சியின் கனத்தைத் தாங்கவில்லை. எனவே, அவர்களின் கருத்துகளை ஒவ்வொன்றாக வெளிப்படுத்துவதைவிட, தேவையான தகவல்களை மட்டும் தெரிந்துகொள்வது சிறப்பாக இருக்கும்.

Lynching அல்லது mob killing எனப்படும் கூட்டுக் கொலைகள் மிக அதிகமானதற்குக் காரணம் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தவறான தகவல்கள். குறிப்பாக வாட்ஸ் அப்பில் கன்னாபின்னாவென்று பகிரப்படும் வதந்திகள்தான் இதுபோன்ற கொலைகளுக்கு மிக முக்கியக் காரணம். அன்புள்ளம் கொண்டவர்கள் தொடர்ந்து தவறான தகவல்களினால் கொல்லப்பட்டதை அன்றாட செய்திகளாக செய்தித்தாள்கள் வெளியிட்டன.

சமூகம் இவ்வளவு மூடத்தனமாக மாறியதற்குக் காரணம் செய்திப் பரிமாற்றத்தின் மீதிருந்த மோகம். இரண்டு நிமிடம் இடைவெளி கிடைத்தால்கூட, சமூக வலைதளங்களில் கருத்துகளை படிப்பதும் பகிர்வதும் தவிர்க்க முடியாத வியாதியாக மாறிவிட்ட இந்நவீன காலத்தில், அதற்கான மருத்துவம் தேவை. இதுபோன்ற தகவல்களைப் பகிர்வதை சமூகக் கடமையாக நினைத்துப் பணியாற்றுகின்றனர் பெரும்பான்மை மக்கள். அந்தச் செய்தியின் மூலத்தையும் உண்மைத் தன்மையையும் ஆராய்வதில் அவர்கள் அதிகம் கவனம் செலுத்துவதில்லை.

பொய் செய்திகளின் வேர்களும் கிளைகளும்

இந்தப் 'பொய் செய்திகள்' குறித்து நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் இந்நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டன. அவற்றுள் முக்கியமானவை வருமாறு:

* இந்த ஆய்வில் ஆச்சரியமான தகவல் ஒன்று கிடைத்தது. இந்தியா, கென்யா, நைஜீரியா ஆகிய நாடுகளில் செய்திகளைப் பகிர்வதன் மூலம் அது உண்மையா என்பதை வேறு யாராவது பரிசோதித்துச் சொல்வார்கள் என்று கருதி மக்கள் பகிர்கிறார்கள். இதன் மூலம் போலிச் செய்தி பரவுவதற்குத் தங்களை அறியாமலே அவர்கள் உதவுகிறார்கள். ஆனால் ஆப்பிரிக்காவில் உள்ளவர்கள் செய்தியின் மூலத்தை அறிந்துகொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதாவது கல்வியறிவு அதிகம் இல்லாதவர்கள் என்று கருதப்படும் ஆப்பிரிக்க மக்கள் பகுத்தறிவுடன் செயல்படுகின்றனர். படித்தவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில்தான் பகுத்தறிவுக்குப் பஞ்சம்.

* வன்முறையைத் தூண்டும் என்று தாங்கள் கருதும் தகவல்களைப் பகிர்வதற்கு மக்கள் தயங்குகிறார்கள். ஆனால் தேசப்பற்று தொடர்பான தகவல்களைப் பகிர்வது தங்களின் கடமை என்று நினைக்கிறார்கள். இந்தியாவின் வளர்ச்சி, இந்து வலிமை, இந்து மதம், இழந்த பெருமையின் மீட்சி ஆகியவை குறித்த போலிச் செய்திகளை அவற்றின் உண்மைத் தன்மையை ஆராய்வதற்குச் சிறு முயற்சியும் செய்யாமல் பகிர்கிறார்கள். இத்தகவல்களைப் பகிர்வதன் மூலம் தேசக் கட்டுமானத்தில் ஈடுபடுவதாக அவர்கள் நினைக்கிறார்கள்.

* கென்யாவிலும், நைஜீரியாவிலும் போலிச் செய்திகளைப் பரப்புவதற்குப் பின்னால் ஒரு கடமை உணர்ச்சி இருக்கிறது. ஆனால், அது தேசக்கட்டுமானம் செய்யும் கடமை உணர்ச்சி அல்ல. திடீர்ச் செய்திகளை, அவை உண்மையாக இருக்கும்பட்சத்தில், தங்கள் தொடர்பில் இருப்பவர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றால் அவற்றைப் பகிர்வது தங்கள் கடமை என்று அங்குள்ள மக்கள் நினைக்கிறார்கள். தகவல்களை அணுகுவது ஜனநாயகமயமாக வேண்டும். அதாவது, தகவல்கள் அனைவரையும் சென்று சேர வேண்டும் என்ற கடமை உணர்ச்சியும் இந்த நாடுகளில் போலிச் செய்திகள் பரவுவதில் ஒரு காரணியாக இருக்கிறது.

* இந்தியாவில் போலிச் செய்தியும் , நரேந்திர மோடிக்கு ஆதரவான அரசியல் நடவடிக்கையும் ஒன்றுடன் ஒன்று கலந்திருப்பதாக இந்த ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. இந்தியாவில் இடதுசாரி சார்புடைய போலிச் செய்திகளைப் பரப்புவோர், அப்படி யாரும் இருக்கும்பட்சத்தில், சரிவர ஒருங்கிணைக்கப்படாதவர்களாக இருக்கிறார்கள். ஆனால், வலதுசாரி சார்புடைய போலிச் செய்தி பரப்புவோர் நெருக்கமாக ஒருங்கிணைக்கப்பட்டவராக இருக்கிறார்கள். இதனால் இடதுசாரி சார்புடைய போலிச் செய்திகளைவிட வலதுசாரி சார்புடைய செய்திகள் வேகமாகப் பரவுகின்றன.

தீர்வுகளாக முவைக்கப்பட்ட தகவல்கள்:

* தனிமனித கவனமும், பொறுப்பும் மிகவும் அவசியம். ஒரு செய்தியைப் பகிரும்போது அதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்து பகிர வேண்டும். முடியவில்லை என்றால் அச்செய்தியைப் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும். நவீன கால மனிதர்களின் நவீனக் கடமை செய்திகளைப் பகிர்வதல்ல, வதந்திகளைத் தவிர்ப்பதேயாகும்.

* அதிகமான வதந்திகள் பரவும் வாட்ஸ் அப்பில், செய்தி உருவான 'Source'ஐக் கண்டுபிடிக்க வழிவகைகள் செய்ய வேண்டும். உதாரணமாக, எந்த எண்ணிலிருந்து தகவல் தயாரிக்கப்பட்டதோ, அந்தத் தகவல் பகிரப்படும்போது அந்த எண்ணும் சேர்ந்தே பகிரப்பட்ட வேண்டும்.

*சமூக வலைதளத்தில் பதிவிடப்படும் ஒரு செய்தி, அது பகிரப்படும்போது அதன் தேதியையும் நேரத்தையும் தாங்கி வர வேண்டும். ஒரு செய்தி பகிரப்படும்போது அதன் தேதியாவது இடம்பெற்றிருக்க வேண்டும்.

* செய்திகள் விஷயத்தில் மனிதர்களின் மனநிலை மாற வேண்டும். எந்நேரமும் செய்திகளை நோக்குவதும் தேடுவதுமாக இல்லாமல் சுற்றியிருக்கும் மனிதர்களைப் பற்றிய புரிதலைப் பெற மின்னணு சாதனங்களின் பிடியிலிருந்து வெளியேற வேண்டும்.

* இதுபோன்று பகிரப்படும் பொது செய்திகளுக்குக் கட்டணம் விதிக்கப்பட வேண்டும். அப்படிச்செய்தால், மக்கள் தேவையில்லாததைப் பகிர்வதை முற்றிலும் தவிர்க்கமுடியும்.

*அரசியல் தலைவர்கள் மற்றும் அவர்களைப் பின்தொடர்பவர்களும்தான் அதிகமாகப் பொய் செய்திகளைப் பரப்பி வருகிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே அரசியல் தலைவர்கள், தங்கள் சொந்த ஆதாயங்களுக்காக (Intentional Fake news) பொய் செய்திகளை ஆதரிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

* youturn.in, snopes.com, check.org போன்ற வலைதளங்கள் செய்திகளின் உண்மைத் தன்மையை அறியப் பெரிதும் உதவும். இதுபோன்ற வலைதளங்களில் சந்தேகத்துக்கிடமான செய்திகளைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.

* அனைத்துக்கும் மேலாக, தவறான செய்திகளைப் பகிர மாட்டேன் என்று ஒவ்வொரு தனிமனிதரும் உறுதிகொள்ள வேண்டும்.

உங்கள் உறுதி பல உயிர்களைக் காப்பாற்றும்!

திங்கள், 12 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon