மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 4 ஜுன் 2020

மீண்டும் இணைந்த ‘சுப்ரமணியபுரம்’ டீம்!

மீண்டும் இணைந்த ‘சுப்ரமணியபுரம்’ டீம்!

சசிகுமார் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடர்பான முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

இயக்கம், நடிப்பு, தயாரிப்பு என தனது தொடக்க காலத்தில் பிசியாக வலம்வந்த சசிகுமார், தான் கால்வைத்த துறைகளிலெல்லாம் தொடர் வெற்றிக்கொடி நாட்டிவந்தார். இதன் விளைவாக முன்னணி நடிகர்களுக்கு இணையாக இவரது படங்கள் கவனம் பெற்றன. தொடர்ந்து நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட இவரது படங்களும் ஸ்பெஷல் கவனத்தைப் பெற்றன.

பின்னர் திடீரென தொடர் சறுக்கலைச் சந்தித்த அவர், அதன் பின்னர் பெரிய அளவிலான எந்த வெற்றியையும் குவிக்கவில்லை. கிடாரி போன்ற சில படங்கள் மட்டுமே கவனம் பெற்றன. இந்த நிலையில் கோலிவுட்டில் இழந்த ஃபார்மை மீட்டெடுக்கும் விதமாகத் தனக்கு சுந்தரபாண்டியன் எனும் வெற்றிப் படத்தை கொடுத்த இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரனுடன் மீண்டும் இணைந்து கொம்பு வச்ச சிங்கமடா எனும் படத்தில் நடிக்க கமிட் ஆனார் சசிகுமார்.

இயக்குநருக்கும்கூட கடைசியாக இயக்கப்பட்ட உதயநிதியின் கதிர்வேலன் காதல், விக்ரம் பிரபுவின் சத்ரியன் ஆகிய படங்கள் பெரிய அளவு வரவேற்பைத் தரவில்லை எனும் விஷயம் குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் சசிகுமாருடன் இணைந்து மடோனா செபாஸ்டியான், கலையரசன், பிக் பாஸ் புகழ் ஆரவ், சூரி, யோகி பாபு, இயக்குநர் மகேந்திரன், ஹரீஷ் பெரடி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, திபு நைனன் தாமஸ் இதற்கு இசை அமைக்கிறார்.

இந்தப் பட நடிகரும் இயக்குநரும் இணைந்து ஏற்கெனவே வெற்றிப்படத்தைக் கொடுத்திருந்திருப்பதால் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் நேற்று (நவம்பர் 12) இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதை க்ளாப் அடித்துத் தொடங்கியிருக்கிறார் சசிகுமாரின் முதல் இயக்கமான சுப்ரமணியபுரம் படத்தில் நடித்திருந்த இயக்குநர் சமுத்திரக்கனி. நிகழ்ச்சியில் படக்குழுவினர் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையங்களில் வெளியாகிக் கவனம் பெற்று வருகின்றன.

இந்தப் படம் தவிர, ரஜினியின் பேட்ட படத்தில் அவருடன் இணைந்து நடித்துள்ள சசிகுமார், இயக்குநர் சுசீந்திரன் இயக்கும் கென்னடி ரேஸ் க்ளப் எனும் படத்திலும் நடிக்கவுள்ளார்.

செவ்வாய், 13 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon