மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 4 ஜுன் 2020

திருநங்கைகள் வழக்கு: விசாரணைக்கு மறுப்பு!

திருநங்கைகள் வழக்கு: விசாரணைக்கு மறுப்பு!

திருநங்கைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைத் தண்டனைக்குரியது என உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தனியார் தொண்டு நிறுவனமான இந்திய குற்றவியல் நீதிச் சங்கமானது, திருநங்கைகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்தது. அதில், “திருநங்கைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைக் குற்றமாகக் கருத வேண்டும். இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு எண் 375ஐ பொதுவானதாக மாற்ற வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (நவம்பர் 12), தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த மனு மீதான விசாரணை நடந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது என்று தெரிவித்தனர் நீதிபதிகள்.

“சட்டப் பிரிவு 375இன்படி, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குற்றவியல் தண்டனையாகக் கருதப்பட்டு, தண்டனை வழங்கும் நடைமுறை அமலில் உள்ளது. இது பெண்களுக்கு மட்டுமே பொருந்தும். நாடாளுமன்றத்தால் மட்டுமே சட்டப்பிரிவு எண் 375ஐ மாற்ற முடியும். புதிய சட்டத்தை உருவாக்கவோ, ஏற்கனவே இருக்கும் சட்டத்தை மாற்றவோ, உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. நாடாளுமன்றம் மட்டுமே இந்தச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவர இயலும்” என்று தெரிவித்துள்ளது உச்ச நீதிமன்ற அமர்வு.

திங்கள், 12 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon