மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

70% வாக்குப்பதிவு: முதற்கட்ட தேர்தல் முடிவு!

70% வாக்குப்பதிவு: முதற்கட்ட தேர்தல் முடிவு!

சத்தீஸ்கரில் நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவில் 70 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சத்தீஸ்கரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. மாவோயிஸ்ட்டுகள் ஆதிக்கம் மிகுந்த 18 தொகுதிகளுக்கு நேற்று, நவம்பர் 12ஆம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெற்றது. மீதமுள்ள 72 இடங்களுக்கு நவம்பர் 20ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும். வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 11ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி கைராகர், டோங்கர்கர், ராஜ்நந்த்கான், டோங்கர்கான், குஜ்ஜி, மோஹ்லா-மான்பூர், அண்டாகர், பானுபிரதாப்பூர், கங்கேர், கேஷ்கால், கோண்டாகான், நாராயண்பூர், பஸ்தர், ஜக்தால்பூர், சித்ரகோட், தண்டேவாடா, பிஜப்பூர், கோண்டா, ஆகிய 18 தொகுதிகளில் நேற்று காலை 7 மணி தொடங்கி மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெற்றது.

இந்த முதற்கட்ட வாக்குப்பதிவில் 70 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையத்தின் மூத்த துணைத் தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா டெல்லியில் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார். இது தொடர்பான முழு விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும், முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும் நேற்று தேர்தலை சீர்குலைக்கும் வகையில் பல்வேறு இடங்களில் மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல் நடத்தினர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் தாக்குதல்களில் இரு பாதுகாப்புப் படையினர் காயமடைந்தனர், 6 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த எழுபது சதவிகித வாக்குப்பதிவில், அதிகபட்சமாக குஜ்ஜியில், 72 சதவிகித வாக்குகளும், குறைந்தபட்சமாக தண்டேவாடாவில் 49 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன. கோண்டாகான் தொகுதியில் 61.47 சதவிகிதம், கேஷ்கால் 63.51 சதவிகிதம், கங்கேர் 62 சதவிகிதம், பஸ்தார் 58 சதவிகிதம், கைராகர் 70.14 சதவிகிதம் மற்றும் டோங்கர்கான் 71 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2013ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் 49 இடங்களில் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைத்தது. அடுத்ததாக காங்கிரஸ் 39 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி ஓர் இடத்திலும், சுயேச்சை ஓர் இடத்தையும் பிடித்தன என்பது நினைவுகூரத்தக்கது.

திங்கள், 12 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon