மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 7 ஜுன் 2020

இலங்கை நாடாளுமன்றம்: நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு?

இலங்கை நாடாளுமன்றம்: நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு?

இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்த அதிபரின் உத்தரவுக்கு எதிராக அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் நேற்று (நவம்பர் 12) 13 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றின் மீதான விசாரணை நேற்று தொடங்கிய நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிபர் மற்றும் அதிபரால் நியமிக்கப்பட்ட பிரதமர் ராஜபக்‌ஷே ஆகியோருக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் வழக்குகள் இலங்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவின் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் கபீர் காசிம், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவுஃப் ஹக்கீம், இடதுசாரி கட்சியான ஜே.வி.பி. கட்சியின் அனுரா குமார திசநாயகே, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும், மூத்த வழக்கறிஞர்களான லால் விஜயநாயகே, அனுரா லக்ஸ்ரி, ஜி.டி.சி. பெரைரா ஆகியோரும், மாற்றுக் கொள்கைக்கான மையம் என்ற சமூக அமைப்பு சார்பாகவும் என 12 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விட மிகவும் முக்கியமானதாக, இலங்கையின் தேர்தல் கமிஷன் சார்பிலேயே உறுப்பினர் ஒருவராலும் அதிபர் சிறிசேனாவின் நாடாளுமன்றக் கலைப்பு உத்தரவுக்கு எதிராக ஒரு மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதுவரை இலங்கை வரலாற்றில் அதிபரின் உத்தரவுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் இருந்து வழக்குத் தொடுத்ததில்லை.

கடந்த நவம்பர் 10 ஆம் தேதி நாடாளுமன்றத்தைக் கலைக்க உத்தரவிட்ட அதிபர் சிறிசேனா ஜனவரி 5 ஆம் தேதி தேர்தல் நடத்த உத்தரவிட்டார். ஆனால் தேர்தலை நடத்த வேண்டிய பொறுப்பு மிக்க தேர்தல் ஆணையம் இதுபற்றி விவாதிப்பதற்காக கூடியது. .

தேர்தல் ஆணையர்கள் மகிந்த தேசப்ரியா, பேராசிரியர் ரத்னஜீவன் ஹூலே, நளின் அபய்சேகரா ஆகியோர் அடங்கிய தேர்தல் ஆணையத்தின் கூட்டம் கடந்த சனிக்கிழமையன்று கூடியபோது அதிபரின் உத்தரவினை ஹூலே கடுமையாக எதிர்த்தார். ஆனால் மற்ற இரு உறுப்பினர்களும் அதிபரின் முடிவை ஆதரித்தனர்.

இந்த நிலையில்தான் நேற்று திங்கள் கிழமை உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையத்தின் மூன்று உறுப்பினர்களில் ஒருவரான ஹூலே அதிபரின் நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிராக வழக்குத் தொடுத்தார். இதில் ஆச்சரியம் என்னவெனில், எதிர்மனுதாரர்களாக தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர் நளின் ஆகியோரையும் சேர்த்துள்ளார் ஹூலே.

இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த 13 வழக்குகளும் நேற்று பகல் 2 மணியளவில் உச்ச நீதிமன்றத்தின் 502 ஆம் எண் மன்றத்தில், தலைமை நீதிபதி நளின் பெரைரா, நீதிபதிகள் ப்ரியந்த ஜெயவர்தன, பிரசன்ன ஜெயவர்தனா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இலங்கை செய்தியாளர்கள் மட்டுமல்லாமல் சர்வதேசத்தைச் சேர்ந்த ஏராளமான செய்தியாளர்களும் வழக்கறிஞர்களும் கூடியிருந்தனர்.

சட்டமா அதிபர் என்று இலங்கையில் அழைக்கப்படும் அட்டர்னி ஜெனரல் ஜெயந்த ஜெயசூரியா, “மனுக்கள் தொடர்பான ஆவனங்கள் இப்போதுதான் கிடைத்தன. அவற்றைப் படிப்பதற்கும் ஆய்வதற்கும், அது தொடர்பான பதில் அளிப்பதற்கும் போதுமான நேரம் வேண்டும். அதனால் வழக்கை ஒத்தி வைக்க வேண்டும்” என்று கோரினார்.

ஆனால் நீதிமன்றமோ மனுக்கள் விசாரணை இன்றே (நேற்றே) நடக்கும் என்று தெரிவித்தது.

அதன்படி முதலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கனக ஈஸ்வரன் தனது வாதங்களை முன் வைத்தார். “நாடாளுமன்றத்தை முடக்குவது என்கிற அதிபரின் உத்தரவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது. மேலும் அரசமைப்பு சட்டம் 19 வது திருத்தத்தின் படி நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் நாலரை வருடங்கள் முடிவுற்ற நிலையிலோ, நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் கலைக்குமாறு தீர்மானம் நிறைவேற்றிய நிலையிலோதான் கலைக்க முடியும். இந்த இரு வகையிலும் இப்போது நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியாது” என்று வாதிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சர்பாக வாதிட்ட மூத்த வழக்கறிஞர் திலக் மாரப்பன, “அதிபரின் நாடாளுமன்றக் கலைப்பு அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. 19 வது சட்டத் திருத்தத்தின்படி நாடாளுமன்றத்தைக் கலைக்க அதிபருக்கு அதிகாரம் இல்லை” என்று வாதாடினார்.

மேலும் பல வழக்கறிஞர்களும் பல்வேறு சட்ட நுணுக்கங்களை வைத்து அதிபரின் உத்தரவுக்கு எதிரான வாதாடினார். பின் அட்டர்னி ஜெனரல் ஜெயந்த ஜெயசூரியா, “இதுபற்றி நாளை வரை பதிலளிக்க அவகாசம் வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

அதன்படி வழக்கு விசாரணை இன்று (நவம்பர் 13) காலை 10 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

அனேகமாக இன்று இலங்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாடாளுமன்றம் தொடர்பாக முடிவெடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செவ்வாய், 13 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon