மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 7 ஜுன் 2020

கடனில் மூழ்கும் ஜெட் ஏர்வேஸ்!

கடனில் மூழ்கும் ஜெட் ஏர்வேஸ்!

ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்துக்கு நாள் ஒன்றுக்கு ரூ.14.4 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

தனியார் துறை விமானப் போக்குவரத்துச் சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸ், சமீப காலமாகவே கடுமையான வருவாய் இழப்பைச் சந்தித்து வருவதோடு, பெரும் கடன் சுமையிலும் இருக்கிறது. இதனால் தனது ஊழியர்களுக்கான சம்பளத்தை வழங்குவதிலும் கடந்த சில மாதங்களாகவே தாமதித்து வருகிறது. இந்நிறுவனம் ஜூலை - செப்டம்பர் மாதங்களுக்கான வருவாய் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி இக்காலாண்டில் ஜெட் ஏர்வேஸுக்கு ரூ.1,297.5 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. சென்ற ஆண்டின் இதே காலாண்டில்கூட இந்நிறுவனம் ரூ.49.6 கோடி வருவாய் ஈட்டியிருந்தது. இதன் மூலம் தொடர்ந்து மூன்றாவது காலாண்டாக ரூ.1,000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாதங்களில் மட்டும் ஜெட் ஏர்வேஸ் ரூ.2,630 கோடியை இழந்துள்ளது. அதாவது நாள் ஒன்றுக்குச் சராசரியாக ரூ.14.4 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்புகளுக்குக் காரணம் சந்தையில் நிலவும் கடினமான சூழல்கள் மற்றும் விமான எரிபொருள் விலையேற்றம் ஆகியவைதான் என்று ஜெட் ஏர்வேஸ் கூறுகிறது. இந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் எரிபொருள் விலை 50 சதவிகிதம் வரையில் உயர்ந்துள்ளது. உள்நாட்டுச் சந்தையில் மற்ற நிறுவனங்கள் வழங்கிவரும் சிறப்புச் சலுகைகள் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவையும் இந்நிறுவனத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளன.

செவ்வாய், 13 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon