மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 7 ஜுன் 2020

அக்பருக்கு ஆதரவாகப் பெண் பத்திரிகையாளர்!

அக்பருக்கு ஆதரவாகப் பெண் பத்திரிகையாளர்!

பத்திரிக்கையாளர் பிரியா ரமணியின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அக்பரை காயப்படுத்தும் உள்நோக்கத்துடனே இருப்பதாக சண்டே கார்டியன் இதழின் ஆசிரியர் ஜோயிதா பாசு நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார்.

பெண்களுக்கு எதிரான பாலியல் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வர மீ டூ பிரச்சாரம் இணையதளத்தில் தொடங்கப்பட்டது. இதில் பல பெண்கள் முன்னாள் மத்திய அமைச்சர் அக்பர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தினர். பத்திரிக்கையாளர் பிரியா ரமணி, தான் 20 வருடங்களுக்கு முன்னர் எம்.ஜே.அக்பரால் கற்பழிக்கப்பட்டதாக குற்றச்சாட்டை முன்வைத்தார். இதனை தொடர்ந்து எழுந்த அரசியல் அழுத்தத்தால் அமைச்சர் பதவியிலிருந்து விலகி, பிரியா ரமணி மீது பட்டியாலா நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்கை அக்பர் தொடர்ந்தார்.

ரமணியை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் சண்டே கார்டியன் இதழின் ஆசிரியர் ஜோயிதா பாசு முதல் சாட்சியாக இணைக்கப்பட்டார். மாஜிஸ்திரேட் சமர் விஷால் அமர்வில் நேற்று (நவம்பர் 12) சாட்சியம் அளித்த அவர், தான் அக்பருடன் நீண்ட காலம் பணியாற்றியதாகவும், அந்த காலங்களில் தன்னுடன் பணியாற்றிய ஊழியர்கள் எவரும் அக்பர் மீது பழி கூறியது இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த சாட்சியத்தில், "அக்பர் என்னிடம் மிக நாகரிகமாகப் பழகினார். அவர் சிறந்த பண்பாளர். அந்த வகையில் நான் அவரை மிகவும் மதிக்கிறேன். ஆனால் ரமணியின் பாலியல் குற்றச்சாட்டுகள் அக்பர் மீது திணிக்கப்பட்ட போது எனக்கு சங்கடமாக இருந்தது. பிரியா ரமணியின் ட்விட் எனக்கு அதிர்ச்சியை அளித்தது. மீ டு புகாருக்குப் பின்னர் அக்பர் குறித்து என்னிடம் பலரும் விசாரித்தனர். இந்த குற்றச்சாட்டுகளால் அவருடைய நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கப்பட்டுள்ளது" என கூறியுள்ளார்.

இதனையடுத்து வழக்கின் விசாரணையை டிசம்பர் 7ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

செவ்வாய், 13 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon