மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 4 ஜுன் 2020

சிபிஐ: வழக்கு விசாரணை தள்ளி வைப்பு!

சிபிஐ: வழக்கு விசாரணை தள்ளி வைப்பு!

சிபிஐ முன்னாள் இயக்குநர் அலோக் வர்மா மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில்,மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் அறிக்கை தாமதமாக சமர்ப்பி்க்கப்பட்டதால் உச்ச நீதிமன்றத்தின் விசாரணையானது வரும் 16ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டதாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நேற்று(நவ-13) தெரிவித்தார்.

சிபிஐயின் சிறப்பு இயக்குநர் ராக்கேஷ் அஸ்தானா, லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டு தொடர்பாக கட்டாய விடுப்பில் அனுப்பப் பட்டார். இவர் மீதான வழக்கின் விசாரணையை முன்னாள் சிபிஐயின் இயக்குநர் அலோக் வர்மா நடத்தி வந்தார். ஆனால் சிபிஐயின் இயக்குநர் அலோக் வர்மாவும் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு அவரும் கட்டாய விடுப்பில் பதவியிலிருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டார். ராக்கேஷ் அஸ்தானவின் வழக்கை நடத்தி வந்த அலோக் வர்மாவின் ஆதரவு அதிகாரிகளும் பதவி மாற்றம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், அலோக் வர்மாவின் வழக்கை மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் நடத்தி வந்தது. இவ்விசாரணையின் அறிக்கையை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப் படி ஞாயிறன்று(நவ-11) உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்க வேண்டும். ஆனால் ஞாயிறன்று சமர்ப்பிக்காமல் . ஒரு நாள் தாமதமாக நேற்றுதான் லஞ்ச ஒழி்ப்பு ஆணையம் விசாரணை அறிக்கையை உறையிலிட்டு சமர்ப்பித்தது. இந்த தாமதத்திற்காக அதிருப்தி தெரிவித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கூறுகையில், உச்ச நீதிமன்றத்தின் பதிவுத்துறை லஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் அறிக்கைக்காக ஞாயிறன்றும் அலுவலகத்தை திறந்து வைத்து காத்திருந்தது. ஆனால் அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை. தாமதமாவது குறித்த தகவலும் நீதிமன்றத்தின் பதிவுத்துறைக்கு தெரிவிக்கப்படவில்லை என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து தாமதமாக சமர்ப்பித்ததற்கு லஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் சார்பாக ஆஜரான அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா மன்னிப்புக் கேட்டார். இதை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி வழக்கின் விசாரணையை வரும் 16 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

செவ்வாய், 13 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon