மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 7 ஜுன் 2020

சூப்பர் ஹீரோக்களின் பிதாமகன் மறைவு!

சூப்பர் ஹீரோக்களின் பிதாமகன் மறைவு!

உலகம் முழுவதும் பிரபலமான ஸ்பைடர் மேன், ஹல்க், அயர்ன் மேன் உள்ளிட்ட சூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய ஸ்டேன் லீ முதுமையின் காரணமாக நேற்று (நவம்பர் 13) அமெரிக்காவில் உயிரிழந்தார். அவருக்கு வயது 95.

ரோமானியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்த யூத தம்பதிக்கு 1922ஆம் ஆண்டு பிறந்தார் ஸ்டேன் லீ. எழுத்தாளரான ஸ்டேன் லீ டைட்டன் காமிக் புத்தகத்திற்காக ஜேக் கிர்பி, ஸ்டீவ் டிக்கோ ஆகியோரோடு இணைந்து சூப்பர் ஹீரோக்களை 1960ஆம் ஆண்டு முதல் உருவாக்கத் தொடங்கினார். இளம் தலைமுறையை அவரது கதாபாத்திரங்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கின. இப்போதுவரை அந்த கதாபாத்திரங்களுக்கான வரவேற்பு குறையாமல் அதிகரித்துவருகிறது.

சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் மனித உணர்வுகள் சார்ந்த சிக்கல்களையும் சேர்த்து உருவாக்கியவர் ஸ்டேன் லீ. காதல், பொருளாதார பிரச்சினைகள் உள்ளவர்களாகவே அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை அமைந்திருக்கும். இது பற்றி 2010ஆம் ஆண்டு என்.பி.ஆர் செய்திகள் நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவரே கூறியுள்ளார். “அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் ஆளுமை குறித்தும் அறிவது ரசிக்க தக்கவையாக இருக்கும். சூப்பர் சக்திகளைக் கொண்ட மனிதர்கள் தான் அவர்கள்” என்று கூறினார்.

காமிக்ஸ் கதைகள் பின் நாட்களில் திரைப்படமாக வெளியாகிப் பல நூறு கோடிகளை குவிக்கத்தொடங்கின. உலகின் பிரபலமான ஸ்பைடர் மேன், அவெஞ்சர்ஸ், கேப்டன் அமெரிக்கா, ஹல்க், தோர், பென்டாஸ்டிக் ஃபோர், எக்ஸ் மேன் உள்ளிட்ட மார்வெல்லின் பல காமிக்ஸ் கதாபாத்திரங்களையும், சூப்பர் மேன், அக்குவா மேன், பேட்மேன், சான்ட்மேன், வொன்டர்வுமன் உள்ளிட்ட டிசி காமிக்ஸ்ஸின் பல்வேறு கதாபாத்திரங்களையும் ஸ்டேன் லீ உருவாக்கியிருக்கிறார்.

அவரது மறைவு உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சூப்பர் ஹீரோக்களின் வேடம் அணிந்து அவருக்கு ரசிகர்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

செவ்வாய், 13 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon