மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

புதிதாக 21 தடுப்பணைகள்: அன்புமணி கண்டனம்!

புதிதாக 21  தடுப்பணைகள்: அன்புமணி கண்டனம்!

ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தொகுதியான சித்தூர் மாவட்டம் குப்பம் தொகுதியில், பாலாற்றில் 21 தடுப்பணைகள் கட்ட அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி குப்பம் தொகுதியில் உள்ள குப்பம், வி.கோட்டா, சாந்திபுரம், ராமகுப்பம் ஆகிய 4 மண்டலங்களுக்கு இடையே செல்லக்கூடிய பாலாற்றின் மீது 21 தடுப்பணைகளை கட்ட நீர்ப்பாசனத் துறை சார்பில் ரூ.41.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தமிழக விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவின் இந்த முடிவுக்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (நவம்பர் 13) வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆந்திர அரசு கட்டுவதற்கு திட்டமிட்டுள்ள 21 தடுப்பணைகளும் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சொந்தத் தொகுதியான குப்பத்தில் தான் அமையவுள்ளன. இதற்காகவும், ஏற்கெனவே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளை வலுப்படுத்தும் பணிகளுக்காகவும் ஆந்திர அரசு ரூ.41.70 கோடியை ஒதுக்கீடு செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆந்திர மாநிலத்தில் வெறும் 33 கிலோ மீட்டர் தொலைவுக்கு மட்டுமே பாலாறு பயணிக்கும் நிலையில், ஆற்றின் குறுக்கே 22 இடங்களில் அம்மாநில அரசு தடுப்பணைக் கட்டியுள்ளது. அதுமட்டுமின்றி, ஏற்கெனவே கட்டப்பட்ட பல தடுப்பணைகளின் உயரத்தையும் 18 அடி உயரத்திற்கு உயர்த்தியிருக்கிறது. இதனால் பாலாற்றில் தமிழகத்திற்கு தண்ணீர் வருவது அரிதானதாகவும், அதிசயமானதாகவும் மாறியுள்ளது.

இத்தகைய சூழலில் புதிய அணை கட்டப்பட்டால் தமிழகத்தில் பாலாறு பாலைவனமாக மாறிவிடும். 2014 ஆம் ஆண்டில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு பதவியேற்ற பின்னர் கடந்த நான்கரை ஆண்டுகளில் மட்டும் பாலாற்றிலும், அதன் துணை ஆறுகளிலும் ஏராளமான புதிய தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் முதல்வர்களாக இருந்த ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய மூவருமே இதை வேடிக்கை மட்டும் தான் பார்த்துக் கொண்டிருந்தார்களே தவிர, அவற்றை தடுத்து நிறுத்த ஆக்கப்பூர்வமாக எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என்று விமர்சித்துள்ள அன்புமணி, “பாலாற்று நீரை பயன்படுத்துவது குறித்து அப்போதைய சென்னை மாகாணத்திற்கும், மைசூர் ராஜதானிக்கும் இடையே 1892 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் கடைமடை பாசன மாநிலத்தின் ஒப்புதல் இல்லாமல் புதிய அணைகளைக் கட்டக்கூடாது என்று தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. அதற்கு மாறாக ஆந்திர அரசு புதிய தடுப்பணைகளைக் கட்டுவதும், ஏற்கெனவே கட்டப்பட்ட அணைகளின் உயரத்தை அதிகரிப்பதும் சட்டவிரோதமாகும்.

ஆந்திர மாநிலம் திட்டமிட்டபடி புதிய தடுப்பணைகளை கட்டி முடித்து விட்டால் அம்மாநிலத்தில் 33 கிமீ மட்டுமே பாயும் பாலாற்றின் குறுக்கே 43 தடுப்பணைகள் இருக்கும். இதனால் ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழகத்திற்கு கிடைக்காது. இதனால் பாலாற்றை நம்பியுள்ள 4.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனத்திற்கு தண்ணீர் இல்லாமல் தரிசாக மாறும். பாலாறு பாலைவனமாக மாறும்” என்று அச்சம் தெரிவித்துள்ளார்.

பாலாற்றில் தமிழகத்துக்கு உள்ள உரிமைகளை தாரை வார்த்தது யார்? என்பது குறித்து இரு திராவிடக் கட்சிகளும் வார்த்தைப் போரை நடத்தி வருகின்றன. அதில் காட்டிய வேகத்தில் நான்கில் ஒரு பங்கை களத்தில் காட்டியிருந்தால் ஆந்திரம் கட்டிய தடுப்பணைகளை தடுத்து இருந்திருக்கலாம் என்று விமர்சித்துள்ள அவர் “ஆந்திர அரசின் சதித்திட்டத்தை தமிழ்நாடு முறியடிக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

செவ்வாய், 13 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon