மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 7 ஜுன் 2020

எந்தக் கட்சிக்காகவும் பணியாற்றவில்லை!

எந்தக் கட்சிக்காகவும் பணியாற்றவில்லை!

தாங்கள் இந்தியாவுடன் பணியாற்றி வருவதாகவும் எந்தக் கட்சிக்காகவும் பணியாற்றவில்லை என்றும் டசால்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ. எரிக் ட்ராபியர் தெரிவித்துள்ளார்.

ரஃபேல் விவகாரத்தில் தான் பொய் கூறவில்லை என்று டசால்ட் சி.இ.ஓ. எரிக் தெரிவித்துள்ளார்.

ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. கடந்த நவம்பர் 2ஆம் தேதி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “ ரபேல் ஒப்பந்தத்தில் அனில் அம்பானி நிறுவனத்திற்கு டசால்ட் நிறுவனம் லஞ்சம் வழங்கியதாகவும், பிரதமர் மோடியை காப்பாற்ற டசால்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொய் சொல்வதாகவும் தெரிவித்தார். ரஃபேல் முறைகேடு தொடர்பான விசாரணை தொடங்கப்பட்டால் மோடியால் அவற்றை எதிர்கொள்ள முடியாது” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், ரஃபேல் விவகாரத்தில் தான் பொய் கூறவில்லை என்று டசால்ட் சி.இ.ஓ. எரிக் ட்ராபியர் விளக்கமளித்துள்ளார்.

ஏ.என்.ஐ. ஊடகத்திற்கு எரிக் இன்று (நவம்பர் 13) அளித்துள்ள பேட்டியில், “நான் பொய் கூறவில்லை. நான் கூறியவை அனைத்தும் உண்மையே. பொய் கூறுவதால் எனக்கு எந்தப் புகழும் கிடையாது. என்னுடைய சி இஓ பதவியில் நீங்கள் இருந்தாலும் பொய் கூற மாட்டீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “காங்கிரஸ் கட்சியுடன் எங்களுக்கு நீண்ட கால அனுபவம் உள்ளது. இந்தியாவுடனான எங்களின் முதல் ஒப்பந்தம் 1953இல் நேரு இருக்கும்போது போடப்பட்டது. பிற பிரதமர்களுடனும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. நாங்கள் இந்தியாவுடன் பணியாற்றிவருகிறோம். எந்தக் கட்சிக்காகவும் பணியாற்றவில்லை” என்றும் எரிக் தெரிவித்துள்ளார்.

ரிலையன்ஸுடனான ஒப்பந்தம் குறித்து பேசுகையில், “ரிலையன்ஸ் நிறுவனத்தில் நாங்கள் பணத்தைப் போடவில்லை. அந்தப் பணம் ரிலையன்ஸ் – டசால்ட் இணைந்த கூட்டு நிறுவனத்திற்கே செல்கிறது. டசால்ட் நிறுவனத்தைச் சேர்ந்த பொறியாளர்களும் தொழிலாளர்களும் முன்னணி வகிப்பார்கள். அனில் அம்பானியை நாங்கள்தான் தேர்ந்தெடுத்தோம். ரிலையன்ஸ் தவிர வேறு 30 பங்குதாரர்கள் எங்களுக்கு இருக்கிறார்கள். தங்களின் சொந்தப் பாதுகாப்புக்கான போர் விமானங்கள் உயர்மட்டத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஒப்பந்தத்தை ஐ.ஏ.எஃப் ஆதரிக்கிறது” என்று விளக்கமளித்துள்ளார்.

ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிகல் லிமிடெட் நிறுவனத்துடனான முந்தைய ஒப்பந்தம் குறித்த கேள்விக்கு, ”126 போர் விமானங்களுக்கான ஒப்பந்தம் சீராக சென்றிருந்தால் ஹெ.ஏ.எல் மற்றும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் உடன் இணைந்து பணியாற்றுவதில் எங்களுக்கு எங்கள் தயக்கமும் இல்லை.

ஆனால் அந்த ஒப்பந்தம் சீராக செல்லாததால் அதனை 36 விமானங்களை பெறுவதற்கான ஒப்பந்தமாக இந்தியா மறு கட்டமைப்பு செய்தது. எனவே, ரிலையன்ஸ் உடன் இணைந்து பணியாற்ற நான் முடிவெடுத்தேன். வெளிநாட்டு நிறுவனத்தின் கூட்டு நிறுவனமாகப் பங்காற்ற தங்களுக்கும் விருப்பம் இல்லை என ஹெச்.ஏ.சில். நிறுவனமும் தெரிவித்தது. எனவே புதிய தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்வது என்பது எனது மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் முடிவு ஆகும்” என்று பதிலளித்தார்.

செவ்வாய், 13 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon