மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 4 ஜுன் 2020

நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை: அதிபர் வாதம்!

நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை: அதிபர் வாதம்!

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு இன்று (நவம்பர் 13) காலை மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் தீர்ப்பு அளிக்கப்படலாம் என்ற நிலையில் கொழும்பில் இருக்கும் நீதிமன்றத்தில் 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.

அதிபர் சிறிசேனாவின் முடிவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று தேர்தல் ஆணையர்களில் ஒருவரான ஹூலே உள்ளிட்ட 13 பேர் தொடுத்த வழக்கில் நேற்று தொடங்கிய விசாரணை நேற்று மாலை ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் இன்று காலை நீதிமன்றம் கூடியதும் அதிபர் சிறிசேனா நாடாளுமன்றத்தைக் கலைத்தது சரியானதே என்று 5 பேர் மனு தாக்கல் செய்தனர். இது நீதிமன்றத்தில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் பெரீஸ், பிரேம்நாத் சி தொலவெத்த, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயகார உள்ளிட்டோரால் அம்மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அதேநேரம் நேற்று தாக்கல் செய்யப்பட்ட 13 மனுக்களின் மீதான விசாரணை தொடங்கிய நிலையில் அதிபர் தரப்பில் அரசின் அட்டர்னி ஜெனரல் ஜெயந்த ஜெயசூரியா தனது வாதங்களை இன்று முன் வைத்தார்.

“நாடாளுமன்றத்தைக் கலைப்பது தொடர்பாக அதிபர் அரசமைப்பு சாசனத்துக்கு உட்பட்டேசெயல்பட்டிருக்கிறார். அதிபரின் அதிகாரங்களில் இது தெளிவாக இருக்கிறது. மேலும் நாடாளுமன்றக் கலைப்பை பற்றி விசாரிக்க நீதிமன்றம் ஒப்புக் கொண்டதே தவறு. இது நீதிமன்ற பரிபாலனத்துக்கு அப்பாற்பட்டது. எனவே அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரிப்பதற்கு நீதிமன்றத்துக்கு சட்ட ரீதியான அதிகாரம் இல்லை” என்று தனது தரப்பு வாதங்களை முன் வைத்தார் ஜெயந்த ஜெயசூரியா. அவரது வாதங்கள் இன்று தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

அட்டர்னி ஜெனரல் வாதத்துக்குப் பின் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்தவர்கள் தேவைப்பட்டால் வாதாடுவர். அதன் பிறகே இந்த முக்கியமான விவகாரத்தில் இலங்கை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன என்பது தெரியும்.

வெறும் இரண்டரை கோடி பேர் மக்கள் தொகை கொண்ட சின்னஞ்சிறு நாட்டின் நாடாளுமன்றம் என்னாகும் என்ற தீர்ப்புக்காக இந்தியா, சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் என உலகமே காத்திருக்கிறது.

செவ்வாய், 13 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon