மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 7 ஜுன் 2020

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு!

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது தாயார் சோனியா ஆகியோரின் வருமான வரி மதிப்பீடுகளை மறுபரிசீலனை செய்வது தொடர்பான வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

சுதந்திரப் போராட்ட காலத்தில் முன்னாள் பிரதமரான ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்ட நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை பதிப்பை நிறுத்தி கொள்வதாக அதனை நடத்தி வந்த அசோசியேட் ஜர்னல்ஸ் லிமிடெட் (ஏஜேஎல்) நிறுவனம் 2008ஆம் ஆண்டு அறிவித்தது. ஆனால் இந்த நிறுவனம், காங்கிரஸ் கட்சிக்கு 90.25 கோடி கடன் பாக்கி தரவேண்டி இருந்ததால் அக்கட்சி, நிறுவனத்தைக் கையகப்படுத்தியது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது தாயார் சோனியா காந்தி ஆகியோர் பங்குதாரர்களாக இருக்கும் யங் இந்தியா லிமிடெட் நிறுவனம் மூலமாக ரூ.50 லட்சம் முதலீட்டில் நேஷனல் ஹெரால்ட் நிறுவனத்தின் ரூ.2000 கோடி மதிப்புள்ள சொத்தை 2010ஆம் ஆண்டு தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாகவும் ஏஜேஎல் நிறுவனத்தின் பங்குதாரர்களின் ஒப்புதல் இல்லாமல், அதைக் கையகப்படுத்தும் உரிமை புதிய நிறுவனத்துக்கு எப்படி அளிக்கப்பட்டது எனவும் குற்றச்சாட்டுகள் அப்போது எழுந்தன.

இதற்கிடையே, இந்த விவகாரத்தில் சட்ட விரோதமான பண பரிமாற்றம், சொத்துகள் கையகப்படுத்தியதில் முறைகேடு, கட்சியின் பணத்தை தவறாக பயன்படுத்தியது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி 2012ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு 2011-12-ம் ஆண்டுக்கான வருமான வரி மறுமதிப்பீடு கணக்கை தாக்கல் செய்யும்படி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் செப்டம்பர் 1௦ஆம் தேதி மனு தாக்கல் செய்தனர். ஆனால் இவர்களின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்து, பிணை மட்டும் வழங்கி மேற்கொண்டு விசாரணையை நவம்பர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இன்று (நவம்பர் 13) இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சிக்ரி மற்றும் அப்துல் நசீர் தலைமையிலான அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கும் போது எங்கள் தரப்பின் வாதத்தையும் கேட்க வேண்டும் என வருமான வரி துறை சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்திருப்பதால் மனு மீதான இறுதிக்கட்ட விசாரணையை டிசம்பர் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூரில் நேற்று (நவம்பர் 12) நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இந்த விவகாரத்தை சுட்டிக்காட்டி பேசிய பிரதமர் மோடி, "நேஷனல் ஹெரால்ட் வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், அவரின் தாய் சோனியா காந்தியும் பிணையில் உள்ளனர். பிணையில் இருக்கும் இருவரும், நேர்மை குறித்த சான்றிதழை எனக்கு வழங்குகிறார்கள். அவர்கள் இருவரும் எனக்கு எப்படி நேர்மை சான்றிதழ் வழங்க முடியும். பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் அவர்களின் நேஷனல் ஹெரால்ட் நிறுவனமும் பிடிபட்டது. அதன்பின் நீங்கள் பிணை கேட்டீர்கள்" என குற்றஞ்சாட்டி இருந்து குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 13 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon