மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 7 ஜுன் 2020

பசுமை தீர்ப்பாய உத்தரவுக்குத் தடை!

பசுமை தீர்ப்பாய உத்தரவுக்குத் தடை!

கூவம், அடையாறு நதிகள் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய் ஆகிய கரையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான காலதாமதத்தை கண்டித்து, தமிழக அரசுக்குப் பசுமை தீர்ப்பாயம் விதித்த ரூ.2 கோடி அபராதத்திற்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

கூவம், அடையாறு நதிகள் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவற்றை முறையாகப் பராமரிப்பது தொடர்பாகப் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் ஜவஹர்லால் சண்முகம்.

இந்த வழக்கில் 26,300 ஆக்கிரமிப்புகள் உள்ள நிலையில், 408 ஆக்கிரமிப்புகள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளதாகவும், நீதிமன்ற வழக்குகள் காரணமாக மற்ற ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியவில்லை எனத் தமிழக பொதுப்பணித் துறை அறிக்கை தாக்கல் செய்தது.

ஆனால், அதனை ஏற்க மறுத்த தீர்ப்பாயம், இந்த வழக்கில் தமிழக பொதுப்பணித் துறை முறையாக ஆவணங்களைத் தாக்கல் செய்யவில்லை என்றும், ஆக்கிரமிப்பை அகற்றுவதில் மெத்தனப்போக்கைக் கையாண்டு வருவதாகக் கூறி ரூ.2 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டது.

கடந்த அக்டோபர் 31ஆம் தேதி, தீர்ப்பாய தலைவர் ஆதர்ஷ்குமார் தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவில், ரூ.2 கோடியை 15 நாட்களில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் செலுத்த வேண்டுமென உத்தரவிட்டது. இந்த ரூ.2 கோடி அபராதத்தை எதிர்த்து பொதுப்பணித் துறை செயலாளர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (நவம்பர் 13)விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆவணங்களைத் தாக்கல் செய்யவில்லை என்ற காரணத்திற்காகவும், கேட்ட விவரங்களை அளிக்கவில்லை என்ற காரணத்திற்காகவும், ரூ.2 கோடி அபராதம் விதித்திருப்பது தவறானது எனத் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும், அனைத்து விவரங்களையும் வழங்கத் தமிழக அரசு தயாராக இருப்பதாகவும், அதிகபட்சமாக விதிக்கப்பட்ட இந்த அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், தமிழக அரசின் கோரிக்கையில் அடிப்படை முகாந்திரம் இருப்பதாகக் கூறி, ரூ.2 கோடி அபராதத்துக்குத் தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், தமிழக அரசின் மேல்முறையீடு மனு குறித்து பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்த மனுதாரரான ஜவஹர்லால் சண்முகம் 4 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

செவ்வாய், 13 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon