மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 7 ஜுன் 2020

காட்டுத் தீ: வீடுகளை இழந்த ஹாலிவுட் நடிகர்கள்!

காட்டுத் தீ: வீடுகளை இழந்த ஹாலிவுட் நடிகர்கள்!

அமெரிக்காவில் சமீபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல ஹாலிவுட் நடிகர்களின் வீடுகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

அமெரிக்காவின் வடக்கு மற்றும் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள வனப் பகுதியில் கடந்த வியாழக்கிழமை திடீரென்று காட்டுத் தீ பற்றியது. இதையடுத்து அந்த பகுதியில் இருந்து சுமார் இரண்டு லட்சம் பேர் உடனடியாக வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டது. வென்சுரா பகுதியில் வசித்து வந்த 95ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். இந்த காட்டு தீயால் பலியானவர்களின் எண்ணிக்கை 42ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் மட்டும் 35ஆயிரம் ஏக்கர் பசுமை நிலங்கள் தீக்கிரையாகியுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை அன்று சாண்டோ மோனி கா மலைப் பகுதியை சூழ்ந்த காட்டுத் தீ தொடர்ந்து அங்கிருந்து பரவி பலிபு நோக்கி பரவியது. தீயை அணைக்க தீயணைப்புப் படையினர் மேற்கொண்ட முயற்சி பலன் அளிக்காததால் தீ, பெப்பர்டைன் பல்கலைக்கழகம் அமைந்துள்ள பகுதியை நெருங்கியது. அந்த பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த சுமார் 7ஆயிரத்து 700 மாணவர்கள் வேறு இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

இதில் பல ஹாலிவுட் பிரபலங்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். ஹாலிவுட்டின் ஆக்‌ஷன் ஹீரோ ஜெரார்டு பட்லர், தனது வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானதாக இன்ஸ்டகிராமில் குறிப்பிட்டுள்ளார். இவர் டிராக்குல்லா, ஷூட்டர்ஸ், த பாண்டம் ஆஃப் ஒபேரா, 300, 300 ரெஸ்ய் ஆஃப் அன் எம்பயர் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

பாடகியும் நடிகையுமான மிலே சைரஸின் வீடும் சாம்பலாகியுள்ளது. அவர், அதிர்ஷ்டவசமாக தானும் தனது செல்லப்பிராணிகளும் உயிர் தப்பியதாகத் தெரிவித்துள்ளார். இவர் பிக் பிஷ், போல்ட், த நைட் பிஃபோர் உட்பட பல படங்களில் நடித்தவர்.

மேலும், லேடி காகா, கிம் கார்தாஷியான், கான்யே வெஸ்ட் ஆகியோரின் வீடுகள் இந்தக் காட்டுத் தீ காரணமாக சேதமடைந்தன. அவர்கள் தனியார் தீயணைப்பு வீரர்களை அமர்த்தி தங்கள் வீடுகளின் தீயை அணைத்துள்ளனர்.

ஆஸ்கர் விருது பெற்ற தி ஷேப் ஆஃப் வாட்டர் படத்தின் இயக்குநரும், கதாசிரியருமான குயில்லெர்மோ டெல் டோரோ வின் வீடும் தீக்கிரையாகியுள்ளது. இவர் பசுபிக் ரிம், ஹெல்பாய், கிரிம்சன் பீக் என பல படங்களை இயக்கியுள்ளார்.

தி எக்ஸ்பேண்டபிள்ஸ் 2, எம்பயர் ஸ்டேட், இண்டிபண்டன்ஸ் டேம் ரிசர்ஜன்ஸ் படங்களில் நடித்திருக்கும் லயாம் ஹெம்ஸ்வொர்த்தின் வீடும் முற்றிலும் எரிந்துவிட்டது.

இவர்களை போல இன்னும் பல ஹாலிவுட் பிரபலங்களின் வீடுகளும் தீ விபத்தில் சேதமடைந்துள்ளன.

இதனைத் தொடர்ந்து, கட்டுக்கடங்காமல் எரிந்து வரும் காட்டுத் தீயை அணைக்க விமானங்கள் மூலம் ரசாயன பொடியை தூவும் பணிகளும் முடுக்கி விடப்பட்டதன் விளைவாக இப்போது ஓரளவு தீ கட்டுக்குள் வந்திருக்கிறது.

செவ்வாய், 13 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon