மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 7 ஜுன் 2020

ஆக்கிரமிப்பு வழக்கு: ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு!

ஆக்கிரமிப்பு வழக்கு: ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு!

திருத்துறைப்பூண்டி நகராட்சியில் 32 குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரித் தொடர்ந்த வழக்கில், மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியை சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.கே.அய்யப்பன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 32 குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 5 குளங்களைத் தனியார் மருத்துவமனைகள் ஆக்கிரமித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஓய்வு பெற்ற வருவாய் துறை ஊழியர் மூலம் போலி ரசீதுகளைத் தயார் செய்து ஆக்கிரமிப்பாளர்கள், மின்சாரம், குடிநீர் இணைப்பு பெற்றுள்ளனர் என்றும் இதுபோன்ற ஆக்கிரமிப்புகளால் சிறு அளவிலான மழை பெய்தால் கூடக் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுவதாகவும், விவசாயம் பாதிக்கப்படுவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார் ஆர்.கே.அய்யப்பன்.

மேலும், திருத்துறைப்பூண்டி நகராட்சியில் உள்ள 32 குளங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றத் திருவாரூர் மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர், திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.வேணுகோபால், ஆர்.பொங்கியபன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (நவம்பர் 13) விசாரணைக்கு வந்தது. அப்போது, மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர், நகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் இதுதொடர்பாக பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர் நீதிபதிகள்.

செவ்வாய், 13 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon