மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 7 ஜுன் 2020

சிறப்புக் கட்டுரை: இந்தியாவில் மீ டூ!

சிறப்புக் கட்டுரை: இந்தியாவில் மீ டூ!

கீர்த்தனா கே.டெல்லா

இந்தியாவில் நூற்றாண்டு அல்லது அதற்கு மேலாகவே பெண்களுக்கு எதிரான அனைத்து வன்முறைகளும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

வெவ்வேறு காலங்களில் நடைபெற்ற பல்வேறு பிரச்சினைகளைக் குறிப்பிடும் பரிணாம வளர்ச்சி பெற்ற இயக்கமாக இருக்கிறது மீ டூ. போர்க்காலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறையும், அமைதியான தற்போதைய காலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறையும் பிரிக்க முடியாத அளவில் இணைக்கப்பட்டுள்ளன. இது இரண்டு முனைகளிலும் ஒரே பாலினத்தின் மீது நிகழ்த்தப்படும் வன்முறையாகும்.

சமூக வலைதளப் பயன்பாடும் புதிய உலகளாவிய சமூகமும் இன்டர்நெட் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், தங்கள் வாழ்க்கையில் அனுபவித்த துன்பங்களைப் பகிர்ந்துகொள்ள பெண்களுக்கு ஒரு தளம் கிடைத்துள்ளது. இந்த வகையில் உருவானதுதான் மீ டூ இயக்கம். இது இந்தியா முழுவதும் பரவ ஆரம்பித்துவிட்டது. இந்த இயக்கம் உலகளாவிய சமூக இயக்கமாக இருக்க வேண்டிய அனைத்து அம்சங்களையும் பெற்றிருக்கிறது. இத்தகைய இயக்கத்துக்கான வரையறைகளாக ஜேம்ஸ் மற்றும் வான் செட்டர்ஸ் (2014) கூறும் அம்சங்கள் மீ டூ இயக்கத்தில் இருப்பதைக் காணலாம். அந்த அம்சங்கள்:

1. பாலியல் துன்புறுத்தலை எதிர்கொள்ளும் பெண்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் பெண்களுடன் ஒரு கூட்டு அடையாளத்தை ஏற்படுத்துதல்.

2. இது குறித்தான விழிப்புணர்வு இன்மையும் இதற்கு எதிராகச் செயலாற்றாத தன்மையும் குறித்து நிலவும் அறியாமையை மாற்றுவதற்கான முனைப்பு.

3. சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் மக்கள் அனைவரும் ஒன்றாகச் சேருதல்.

மீ டூ இயக்கத்தின் வளர்ச்சிக்கான தளமாக அமைந்தது ட்விட்டர். திரைப்படத் துறையில் பணிபுரிந்து வரும் பெரும்பாலான பெண்கள் அனைவரும் ஹார்வி வெய்ன்ஸ்டீனின் பாலியல் அத்துமீறல்களை வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்ள நடிகை அலிஸா மிலானோவின் ட்வீட் ஒரு தூண்டுதலாக அமைந்தது. இந்த ஹேஷ்டேக் ஆரம்பித்த 24 மணி நேரத்தில் 12 மில்லியனுக்கும் அதிகமானோர் பகிர்ந்திருந்தனர். இது இந்த நிகழ்ச்சிகளின் தீவிரத்தன்மை மற்றும் பரவலான பாதிப்பையும் வெளிப்படுத்துகிறது.

கவனம் செலுத்தப்படாத மீ டூ

மீ டூ என்ற வார்த்தை எங்கு யாரால், எதற்கு தொடங்கப்பட்டது என்பது குறித்துப் பல்வேறு தரப்பினரும் பல்வேறு கருத்துகளை தெரிவிக்கின்றனர். கறுப்பினப் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தலுக்குத்தான் இது தொடங்கப்பட்டது என்பது ஒரு தரப்பினரின் கருத்து. வெள்ளையினப் பெண்கள் அப்போது அதை ஏற்க மறுப்பு தெரிவித்துவிட்டு, தற்போது அதற்குக் குரல் கொடுப்பதாக பாவிக்கின்றனர் என்பது மற்றொரு தரப்பினர் கருத்து.

வெள்ளையினப் பெண்கள் பாதிக்கப்படும்போது எடுக்கப்படும் நடவடிக்கையும், கறுப்பினப் பெண்கள் பாதிக்கப்படும்போது எடுக்கப்படும் நடவடிக்கையும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அதாவது, இரு தரப்பினரின் பாதிப்பும் ஒன்றாகப் பார்க்கப்படுவதில்லை. கறுப்பினப் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் துன்புறுத்தல் பெரும்பாலும் கேட்கப்படுவதில்லை.

இந்தியாவில் மீ டூ

இந்தியாவில் மீ டூ வித்தியாசமான அனுபவத்தை ஏற்படுத்தியுள்ளது. 21ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து புதிய வகையான உரையாடல்கள் தொடங்குவதற்கு சமூக வலைதளம் ஒரு தளமாகவே அமைந்தது.

பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களே அவர்கள் மீதான பாலியல் துன்புறுத்தலுக்குக் காரணமாக இருக்கின்றனர் என்ற பழிச்சொல் அல்லது அவதூறான கருத்து, இந்தியாவில் அதிகாரவர்க்கத்தினரிடையே உள்ளது. அதனால்தான், 2011ஆம் ஆண்டு Slut Walk என்ற இயக்கமும், 2017ஆம் ஆண்டு Bekhauf Azadi என்ற இயக்கமும் தொடங்கப்பட்டது. சமூக வலைதளங்களில் ஆரம்பிக்கப்பட்ட இந்த இயக்கங்கள் குறிப்பிட்ட பெண்ணியவாதிகளுக்கு மட்டுமே பரவலாக தெரிந்தது. 2017ஆம் ஆண்டு calling out என்ற இயக்கமும் தொடங்கப்பட்டது.

பெண்ணியவாதப் பயணத்தில் உலகம் முழுவதும் மீ டூவின் தாக்கத்தை வைத்தே அதனின் செயல்பாட்டை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

வெவ்வேறு தலைமுறைகளைச் சார்ந்த பெண்ணியவாதிகளுக்கு இடையே பிளவுகள் காணப்படுகின்றன. மேற்கத்திய மற்றும் இந்தியாவிலுள்ள முதிய மற்றும் இளைய பெண்ணியவாதிகள் கையாளும் முறைகள் வேறுபட்டுக் காணப்படுகின்றன.

இயக்கங்கள் காலப்போக்கில் பரிணாமம் வளர்ச்சி அடையும்போது, புதிய பிரச்சினைகள் முனைப்புக் கொள்கின்றன. அவற்றை அணுகுவதற்குப் புதிய வழிமுறைகளும் உருவாகின்றன. பாலியல் வன்முறை என்பதற்கான விளக்கம் பற்றியே முதிய மற்றும் இளைய பெண்ணியவாதிகளுக்கு இடையே விவாதங்கள் எழுந்தன. பாலியல் வன்முறை என்றால் என்ன, அவற்றை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்த புரிதலும் கேள்விக்குறியாக உள்ளது.

பெண்ணியவாதிகளுக்கு இடையேயான பிளவு, அவர்களின் நிலைப்பாட்டுக்கு ஏற்ப அதிகரித்துகொண்டே செல்கிறது. இதில், குற்றம்சாட்டப்பட்டவர்களின் பட்டியலைப் பார்க்கும்போது ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த உயர் பொறுப்புகளில் இருக்கும் ஆண்கள் அதிகமாக இருப்பது தெரிகிறது. சாதி, பாலினப் பிரிவுகளுக்கு ஏற்ப இந்தப் பிரிவின் கட்டமைப்பு முடிவு செய்யப்படுகிறது.

பாலியல் வன்கொடுமை விவகாரங்களில் பல்கலைக்கழகங்களில் உயர் சாதி மாணவர்களுக்குக் கிடைக்கும் நீதி, தலித் மற்றும் ஆதிவாசி மாணவர்களுக்குக் கிடைப்பதில்லை. இவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளின் அளவும் வேறுபடுகிறது.

ஒரு தலித் பெண் முகநூல் பக்கத்தில் தனது மீ டூ போராட்டம் குறித்து விவரிக்கிறார். அதில், கல்வி நிறுவனங்களே ஆதிக்கச் சாதியினரால் கட்டுப்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்டிருக்கிறார். சாதிக்கும் மீ டூவுக்குமான தொடர்பைச் சரி செய்யாவிட்டால் தலித் பெண்களுக்கு மீ டூவால் எந்தப் பிரயோஜனமும் இல்லை.

பிரச்சினைகளுக்கேற்பப் பெண்ணியவாதிகளின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும், பாதிக்கப்பட்டவர்களின் அனுபவங்களையும் புரிந்துகொள்வது சற்று கடினம். அதேநேரத்தில் இவர்களுடன் துணைநின்று சாதி அடிப்படையிலான அமைப்புகளின் தலையீடு இல்லாமல் நீதி பெற்றுத் தந்து பாதுகாப்பான சூழலை அமைத்துத் தருவதும் அவசியமாகிறது.

மீ டூ இயக்கத்தின் தொடர்ச்சியும் விரிவாக்கமும் தேசிய அளவிலும், உலக அளவிலும் பெரிதாக இருக்கிறது. ஆனால், வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்குக் கிடைக்காத நீதியால் இந்த இயக்கத்திலுள்ள கோளாறுகளையும் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த இயக்கம் சமூகப் பிரிவுகளின் அடிப்படையில் வேறுபடுவதைப் புரிந்துகொள்ள வேண்டிய தேவையிருக்கிறது. அதைச் சரிசெய்யும் முயற்சியில் இந்த இயக்கம் இறங்கியுள்ளது. சொல்லப்போனால், இவ்விவகாரம் மீ டூ இயக்கத்தின் விவாதப் பொருளாகவே மாறியுள்ளது.

தமிழில்: சா.வினிதா

நன்றி: என்கேஜ்

செவ்வாய், 13 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon