மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 4 ஜுன் 2020

போராட்டம்: மின்வாரிய ஊழியர்கள் கைது!

போராட்டம்: மின்வாரிய ஊழியர்கள் கைது!

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை அண்ணா சாலையில் இன்று (நவம்பர் 13) மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களை கைது செய்துள்ளனர் போலீசார்.

தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் மொத்தம் 10,000க்கும் மேற்பட்டவர்கள் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களாகப் பணியாற்றி வருகின்றனர். பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை இவர்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர். 2007ஆம் ஆண்டு ஒப்பந்த பணியாளர்களாக இருந்த 21,000 பேர் நிரந்தர பணியாளர்களாக மாற்றப்பட்டனர்.

அதற்குப் பின்பு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் மின்வாரிய ஊழியர்களை அரசு இதுவரை பணி நிரந்தரம் செய்யவில்லை. எந்த அடிப்படை கோரிக்கைகளையும் நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள்.

இந்நிலையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள தாராபூர் டவர் அருகே 300க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். "சுமார் 10 ஆண்டுகளாகப் பணியாற்றும் எங்களை அரசு ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே ஏற்கவில்லை. அவ்வாறு ஏற்றிருந்தால் எங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.380 தினக்கூலி வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் எங்களுக்கு தினக்கூலி வழங்கப்படுவதில்லை.

மின்வாரியத்தில் 15,000 கள உதவியாளர் மற்றும் 10,000 வயர்மேன் காலிப் பணியிடங்கள் இருக்கின்றன. இவற்றில் தங்களை பணியமர்த்த வேண்டும்" என்ற கோரிக்கைகளை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முன்வைத்தனர். இதைதொடர்ந்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதற்காகப் போராட்டக்காரர்கள் அனைவரையும் கைது செய்தனர் போலீசார்.

செவ்வாய், 13 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon