மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 7 ஜுன் 2020

அமைச்சர் முன்பு அதிமுகவினர் மோதல்!

அமைச்சர் முன்பு அதிமுகவினர் மோதல்!

திண்டுக்கலில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் முன்னிலையில், அதிமுக நிர்வாகிகள் கைகலப்பில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இடைத் தேர்தல் நடைபெறவுள்ள 20 தொகுதிகளுக்கும் அதிமுகவின் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டமும் நடத்திவருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் இன்று (நவம்பர் 13) நடைபெற்றது.

வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், அதிமுக மாவட்டச் செயலாளர் மருதராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், திண்டுக்கல், நத்தம், பழனி உள்ளிட்ட 7 தொகுதிகளில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

கூட்டத்தில் மருதராஜா பேசிக்கொண்டிருந்தபோது, மேடைக்கு முன்புறம் வந்த தொப்பம்பட்டி ஒன்றியத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர், சத்துணவு அமைப்பாளர் பணியில் அதிமுகவினர் நியமிக்கப்படவில்லை என்றும், கூட்டுறவு சங்கத் தேர்தல் தொடர்பாகவும் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட ஆரம்பித்தனர்.

அவர்களை மேடையிலிருந்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும், நத்தம் விஸ்வநாதனும் சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் இம்முயற்சி தோல்வியில் முடிவடைந்த நிலையில், வாக்குவாதம் கைகலப்பானது. நிர்வாகிகள் இரு பிரிவாக பிரிந்து மோதலில் ஈடுபட்டனர், ஒருவருக்கொருவர் நாற்காலிகளை வீசியும் தாக்கிக் கொண்டனர். இதனையடுத்து சண்டையிட்டவர்களை சமாதானம் செய்து வெளியேற்றிய பிறகு, மீண்டும் ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்றது.

அப்போது பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “இடைத்தேர்தலில் கட்சியினர் ஒற்றுமையாக செயல்பட்டு வெற்றி பெற வேண்டும். எக்காரணம் கொண்டும் நம்மில் வேற்றுமையை ஏற்படுத்தி வெற்றி வாய்ப்பை தவற விடக்கூடாது” என்று வலியுறுத்தினார். அமைச்சர் முன்பே நடைபெற்ற இந்த மோதல் சம்பவம் அதிமுகவினரை அதிர்ச்சியடையவைத்துள்ளது.

செவ்வாய், 13 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon