மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 7 ஜுன் 2020

டசால்ட் விளக்கம்: காங்கிரஸ் மீண்டும் விமர்சனம்!

டசால்ட் விளக்கம்: காங்கிரஸ் மீண்டும் விமர்சனம்!

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக தான் எந்தப் பொய்யும் கூறவில்லை என டசால்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ. எரிக் விளக்கமளித்துள்ள நிலையில், காங்கிரஸ் மீண்டும் விமர்சித்துள்ளது.

ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனத்திற்கு முறைகேடாக ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை காப்பாற்ற பிரான்ஸின் டசால்ட் நிறுவனம் முயற்சிப்பதாகவும் ராகுல் விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், ஏ.என்.ஐ. ஊடகத்திற்கு இன்று (நவம்பர் 13) பேட்டியளித்திருந்த டசால்ட் நிறுவன சி.இ.ஓ. எரிக் ட்ராபியர், நான் பொய் கூறவில்லை. நான் கூறியவை அனைத்தும் உண்மையே. பொய் கூறுவதால் எனக்கு எந்தப் புகழும் கிடையாது. என்னுடைய சி இஓ பதவியில் நீங்கள் இருந்தாலும் பொய் கூற மாட்டீர்கள்” என்று தெரிவித்ததோடு, தாங்கள் இந்தியாவுடன் பணியாற்றி வருவதாகவும் எந்த கட்சிக்காகவும் பணியாற்றவில்லை என்றும் விளக்கமளித்திருந்தார். இந்நிலையில், எரிக்கின் பேட்டி உத்தரவின் பேரில் அளிக்கப்பட்ட ஒன்று என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா தனது ட்விட்டர் பக்கத்தில், “உத்தரவின் பேரில் அளிக்கப்பட்ட பேட்டியாலும் தயாரிக்கப்பட்ட பொய்களாலும் ரஃபேல் மோசடியை ஒடுக்க முடியாது.

சட்டத்தின் முதல் விதி: பரஸ்பர பயனாளிகள் மற்றும் கூட்டு குற்றம் சாட்டப்பட்டவர்களின் அறிக்கைகளுக்கு எந்த மதிப்பும் இல்லை.

இரண்டாவது விதி: பயனாளிகள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் வழக்கில் தாங்களே நீதிபதியாக முடியாது. உண்மை வெளியே வர வழி உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

மற்றொரு ட்விட்டில், “நாட்டிற்குக் கோட்பாட்டு விளக்கங்கள் தேவையில்லை, நியாயமான விசாரணையே தேவை. பாஜக அரசு மற்றும் டசால்ட் இடையேயான ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட நாடகங்கள் மூலம் அப்பட்டமான ஊழலை மறைக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 13 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon