மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 4 ஜுன் 2020

பாலாறு: திமுகவுக்கு ஜெயக்குமார் பதில்!

பாலாறு: திமுகவுக்கு ஜெயக்குமார் பதில்!

பாலாறு விவகாரம் தொடர்பாக திமுக பொருளாளர் துரைமுருகன் கருத்துக்கு மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திமுக தலைவர் ஸ்டாலின் சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவது குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் திமுகவினர் ஏன் எதுவும் கேட்கவில்லை” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த திமுக பொருளாளர் துரைமுருகன் பாலாறு பிரச்சினையில் சட்ட ரீதியாகவும் - பேச்சுவார்த்தை ரீதியாகவும் அடைந்த படுதோல்வியை மறைக்க, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவின் ஊதுகுழலாக மாறி அக்கட்சியின் அறிவிக்கப்படாத மாநிலத் தலைவராகியிருக்கிறார் என விமர்சித்திருந்தார்.

துரைமுருகனின் விமர்சனத்துக்குப் பதிலளித்துள்ள மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், ஆந்திர அரசு தடுப்பணைகள் கட்டியது குறித்து ஏன் பேசவில்லை என்ற முதல்வரின் கேள்விக்கு பதில் அளிக்காமல், பாலாறு பிரச்சனையில் திராவிட முன்னேற்றக் கழகம் முழு முனைப்புடன் செயல்பட்டது என்ற கருத்தை மக்களைக் குழப்புவதற்காக துரைமுருகன் கூறியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

“சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்தபோது இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கிருஷ்ணா நதியிலிருந்து வர வேண்டிய நீரை கேட்டிருக்கலாமே? அரசியல் பேசுவதில் இருந்த ஆர்வத்தில், தமிழ்நாட்டு மக்களின் நன்மையை எதிர்க்கட்சித் தலைவரும், பொருளாளரும் ஏன் மறந்தார்கள் ?” என்று ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

2006ஆம் ஆண்டில், தமிழகத்தில் திமுக அரசு அமைந்த பின், ஆந்திர அரசு தடுப்பணை கட்டும் பிரச்சினையை அவ்வப்போது எழுப்பி வந்தது. அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்போது ஆட்சிப் பொறுப்பிலிருந்த திமுக அரசுக்கு அவற்றைச் சுட்டிக்காட்டி, அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

“துரைமுருகன் தனது அறிக்கையில், 5.8.2008 அன்று, அன்றைய ஆந்திர முதலமைச்சர் மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியைச் சந்தித்து, பாலாற்றில் சட்டத்துக்குப் புறம்பாக தடுப்பணைகள் கட்டப்படாது என்ற உறுதிமொழியைப் பெற்று வந்தார்கள் என்கிறார்.

அந்த உறுதிமொழியின் அடிப்படையிலேயே, உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ஏன் திமுக ஆட்சி முடிவுக்குக் கொண்டு வரவில்லை? இதிலிருந்தே, அந்த உறுதிமொழி எந்தவிதமான சட்ட அங்கீகாரமும் இல்லாத ஒரு வெத்துவேட்டான உறுதிமொழி என்பது தெளிவாகிறது. எனவே, துரைமுருகனின் அறிக்கை வினோதமானதா அல்லது முதலமைச்சர் அவர்களின் பேட்டி வினோதமானதா என்பதை தமிழ்நாட்டு மக்கள் அறிவர்” என்று தெரிவித்துள்ளார் ஜெயக்குமார்.

திமுக 2006 - 2011 வரையிலும், மத்தியில் 2013 வரை ஆட்சியில் இருந்த வரையிலும் என்ன நடவடிக்கை எடுத்தது? திமுக நடவடிக்கை எடுத்திருந்தால் பாலாறு பிரச்சினை தொடர வாய்ப்பு இருந்திருக்காது.

சென்னையில் சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்தபோது பாலாறு பிரச்சனைக்கு ஸ்டாலின் தீர்வு கண்டிருக்கலாமே? பாலாறு பிரச்சனை குறித்து பேச துரைமுருகனுக்கு எந்தவித தகுதியும் இல்லை. ஆந்திரா தடுப்பணை கட்டியபோது அமைச்சராக இருந்த துரைமுருகனுக்குத் தெரியாதது விந்தையாக உள்ளது.

ஆந்திர முதலமைச்சர், திமுக தலைவரை சந்தித்த அன்றே, பாலாற்றின் குறுக்கே 41.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 21 தடுப்பணைகளைச் சீரமைக்கவும், உயர்த்தவும் ஆந்திர அரசு அரசாணை வெளியிட்டுள்ளது என்று ஜெயக்குமார் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் பாலாறு பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 13 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon