மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 4 ஜுன் 2020

பாஜகவில் முஸ்லீம்களுக்கு சீட் இல்லை!

பாஜகவில் முஸ்லீம்களுக்கு சீட் இல்லை!

முஸ்லீம்களுக்கு தேர்தலில் போட்டியிட சீட் வழங்கக்கூடாது என்பது பாஜகவின் கொள்கையாக இருக்கலாம் என அக்கட்சியில் இருந்து விலகியவரும், ராஜஸ்தான் எம்.எல்.ஏ.வுமான ரஹமான் கூறியுள்ளார்.

முஸ்லீம்களுக்கு பல்வேறு நல திட்டங்களை அளித்துவருவதாக பாஜக கூறினாலும், தேர்தல்களில் அக்கட்சி முஸ்லீம்களை தொடர்ந்து புறக்கணிப்பதாக விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. 403 தொகுதிகளை உடைய உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் ஒரு முஸ்லீம் வேட்பாளருக்குக் கூட வாய்ப்பு வழங்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது.

நவம்பர் 28ஆம் தேதி நடைபெறவுள்ள மத்திய பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சார்பில் ஒரே ஒரு முஸ்லீம் வேட்பாளர் (பாத்திமா சித்திக் – போபால் தொகுதி )மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு டிசம்பர் 7ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அமைச்சரும் 5 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவருமான சுரேந்திர கோயல் நேற்று பாஜகவில் இருந்து விலகினார்.

அவரது தொகுதியான ஜெய்தரனுக்கு வேட்பாளராக அவினாஷை கட்சித் தலைமை அறிவித்ததால் அவர் விலகியதாகவும் அதே தொகுதியில் தனித்து அவர் போட்டியிடக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், பாஜகவில் முஸ்லீம்கள் புறக்கணிக்கப்படுவதாக ராஜஸ்தான் எம்.எல்.ஏ. ஹபிபூர் ரஹமான் குற்றஞ்சாட்டியுள்ளார். கட்சித் தலைமை வெளியிட்ட 131 வேட்பாளர்கள் பெயர் கொண்ட பட்டியலில் ரஹமான் பெயர் இடம் பெறாத நிலையில், கட்சியில் இருந்து விலகுவதாக அவர் நேற்று அறிவித்தார். அவரது தொகுதியான நாகௌருக்கு மோகன் ரான் சௌத்ரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். முதல்வர் வசுந்தரா ராஜேவுக்கு நெருக்கமானவர் என்று கூறப்படும் யூனஸ் கானின் பெயரும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்திற்கு இன்று (நவம்பர் 13) பேட்டியளித்த ரஹமான், “பாஜகவில் இருந்து நேற்று விலகிவிட்டேன். முஸ்லீம் வேட்பாளர்களுக்கு போட்டியிட வாய்ப்பு அளிப்பதில்லை என்பது தற்போது கட்சியின் கொள்கையாக உள்ளது. அதை பற்றி நாம் என்ன கூறமுடியும். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத அளவுக்கு நான் எந்த தவறும் செய்யவில்லை. கட்சித் தொண்டர்களுடன் ஆலோசித்துவிட்டு எனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வேன்” என்று கூறியுள்ளார்.

செவ்வாய், 13 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon