மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 7 ஜுன் 2020

சிறப்புப் பார்வை: கண்களை செல்பி எடுத்தால் போதும்!

சிறப்புப் பார்வை: கண்களை செல்பி எடுத்தால் போதும்!

கண் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சென்றிருக்கிறீர்களா? போனவுடன் உங்கள் பெயரைப் பதிவு செய்துவிட்டுக் கண்ணில் மருந்து ஊற்றி உட்கார வைத்துவிடுவார்கள். நீங்கள் ஒரு மணிநேரமல்ல, பல மணிநேரம் அமர்ந்திருக்க வேண்டியிருக்கும். படிக்கவும் முடியாது அங்குள்ள டிவியையும் பார்க்க முடியாது. நேரத்தைக் கடத்துவது பெரும் பாடாக இருக்கும். இதில் தொலை தூரத்திலிருந்து வருபவர்கள் பாடு பெரும் திண்டாட்டம்தான். ஒரு நாள் பொழுது இதிலேயே கழிந்துவிடும். இனி அந்தக் கஷ்டமெல்லாம் படத்தேவையில்லை.

செயற்கை நுண்ணறிவின் முக்கியத்துவம்

செயற்கை நுண்ணறிவின் மூலம் நீரிழிவு நோயினால் வரக்கூடிய விழித்திரைக் கோளாறை முன்னதாகவே கண்டறிந்து பார்வை இழப்பைத் தடுப்பதற்கான தொழில்நுட்பத்தை மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையும் கூகிளும் மேற்கொண்ட ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். எடை பார்க்கும் மெஷினில் ஏறி நின்றவுடன் உங்களின் உடல் எடை பிஎம்ஐ (உயரத்திற்கேற்ற எடை), அதிர்ஷ்டம் போன்ற விவரங்களைத் தெரிந்துகொள்வது மாதிரி, இந்த தொழில்நுட்பமானது மிகச் சுலபமான முறையில் உங்கள் கண்ணில் உள்ள பிரச்சினையைக் கூறிவிடும். உங்கள் கண்களை செல்பி எடுத்தால் போதுமானது. நீரிழிவு நோய் சார் விழித்திரை படலத்தின் கோளாறைக் கண்டுபிடித்து அடுத்த கட்ட சிகிச்சையை மேற்கொண்டு பார்வை இழப்பைத் தடுத்துவிடலாம். இந்த அருமையான தொழில்நுட்பம் குறித்துச் சற்று விரிவாகக் காண்போம்.

புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் குறித்து அரவிந்த் கண் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கிம் ராமசாமி கூறுகையில், இது போன்ற மிஷின் உங்கள் கண்களின் விழித்திரையின் நிலை குறித்தும் அடுத்து நீங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் சில நொடிகளில் கூறிவிடும் என்று தெரிவித்துள்ளார். உங்கள் செல்போன்களின் மூலம் உங்கள் கண்களை செல்பி எடுத்தால் போதுமானது.

கூகுளிலுடன் இணைந்த ஆய்வு

இது தொடர்பாக, அவர் மேலும் கூறியதாவது:

2013இலிருந்தே செயற்கை நுண்ணறிவின் மூலம் நீரிழிவு சார் விழித்திரை கோளாறுகளை (Diabetic Retinopathy-DR) விரைவில் கண்டறியும் தொழில்நுட்பம் குறித்த ஆய்வில் அரவிந்த் மருத்துவமனையும் கூகுளிலும் ஈடுபட்டுவருகின்றன. நீரிழிவு சார் விழித்திரை கோளாறுதான் பார்வை இழப்புக்கு இரண்டாவது காரணமாக உள்ளது. நீண்டகாலமாக நீரிழிவு நோய் உள்ளவர்களின் மென்மையான உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் செல்லாதபடி குளுகோஸ் அடைத்துக்கொள்கிறது. இதில் கண்களுக்கு ரத்த ஓட்டம் செல்வதும் தடுக்கப்படுகிறது. முக்கியமாக நீரிழிவு நோயாளிகளுக்குக் கண் விழித்திரையில் புண்கள் ஏற்படுகின்றன அதற்கு சிகிச்சை அளிக்கப்படாதபோது அது பார்வை இழப்பில் முடிகிறது.

கடந்த ஏப்ரலில் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறையானது செயற்கை நுண்ணறிவை நீரிழிவு நோய் சார் விழித்திரை கோளாறை ஸ்கேன் செய்து கண்டறிவதற்கான முக்கியமான அறிவியல் கருவியாக அங்கீகரித்துள்ளது. இது தொடர்பான எங்களது ஆராய்ச்சித்தாளை சமர்ப்பிக்க உள்ளோம். அதற்கு சான்றிதழ் கிடைத்த பின்னர், எங்களது அன்றாட பணியில் அதை அமல்படுத்த உள்ளோம். செயற்கை நுண்ணறிவு அல்கோரிதத்திற்கான (தொழில்நுட்பத்தின் பெயர்)லைசன்ஸ் இந்த ஆண்டின் இறுதிக்குள் கிடைத்து விடும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.

நாள்தோறும் வெளிநோயாளிகளாக 600 பேர் வரை வருகிறார்கள். இதற்காக அவர்கள் நேரத்தையும் பணத்தையும் செலவழிக்கிறார்கள். மிகத் தொலைவிலிருந்து பயணம் செய்து வந்து காத்துக் கிடக்கிறார்கள். பலர் மருத்துவமனைக்கு வருவதே இல்லை. ஏனெனில் இந்தக் கோளாறு குறித்து அவர்கள் அறியாமையில் உள்ளனர்.

கண் பரிசோதனை கட்டாயம்

நமது நாட்டில் இது போன்ற பிரச்சினை உள்ள கண் நோயாளிகள் அதிகமானவர்கள் இருப்பதால் இந்தத் தொழில்நுட்பமானது விரைவாக நோயைக் கண்டுபிடித்து சிகிச்சையை மேற்கொள்ள உதவுகிறது. கண்ணின் பிம்பம் குறித்து பாசிட்டிவ் என ரிசல்ட் வந்தால் உடனடியாக சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். நெகட்டிவ் என ரிசல்ட் வந்தால் 12 மாதங்கள் கழித்து மறுபடியும் கண்களை இந்தத் தொழில்நுட்பத்தினால் ஸ்கேன் செய்வது பயனளிக்கும்.

பொதுவாக 40 வயதிற்கு மேல் உள்ளவர்கள் ஆண்டுக்கொரு முறை கண் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். அதிலும் நீரிழிவு நோயாளிகள் கட்டாயமாகக் கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று கண் மருத்துவர்கள் என்ற முறையில் பரிந்துரைக்கிறோம். என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி,71 மில்லியன் இந்தியா்கள் நீரிழிவு நோயுள்ளவர்களாக இருக்கின்றனர். இதில் 20 விழுக்காட்டினர் நீரிழிவு சார் விழித்திரை கோளாறு உள்ளவர்களாக இருக்கின்றனர்.

அரவிந்த் மருத்துவமனையுடன் சேர்ந்து இந்த ஆய்வை மேற்கொண்டுவரும் கூகுள் ஏற்கனவே ஒரு நபரின் வயது, பாலினம், இனம், அவரின் புகைப்பிடிக்கும் பழக்கம் இவற்றை அவரின் விழித்திரை படலத்தின் பிம்பத்தை வைத்தே கண்டறியும் அல்கோரிதத்தைக் கண்டுபிடித்துள்ளது. இதன் மூலம் ஒரு நபரின் மாரடைப்பிற்காக அபாயத்தையும் முன்கூட்டியே கண்டறியலாம். இது 97 விழுக்காடு துல்லியமானது. 87 விழுக்காடு நுட்பமான முறையில் நீரிழிவு சார் விழித்திரைக் கோளாறைக் கண்டறியும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சேது ராமலிங்கம்

(தி இந்துவில் An AI for an eye என்ற தலைப்பில் இன்று (நவ-13)வெளிவந்த கட்டுரையைத் தழுவி எழுதப்பட்டது.)

செவ்வாய், 13 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon