மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 7 ஜுன் 2020

இலங்கை: நாடாளுமன்ற கலைப்புக்கு நீதிமன்றம் தடை!

இலங்கை: நாடாளுமன்ற கலைப்புக்கு நீதிமன்றம் தடை!

இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேனா கலைத்தமைக்கு இன்று (நவம்பர் 13) இடைக்காலத் தடை விதித்திருக்கிறது அந்நாட்டின் உச்ச நீதிமன்றம்.

’இலங்கை உயர் நீதிமன்றம்’ எனப்படும் அந்நாட்டின் உச்சபட்ச நீதிமன்றத்தில் அதிபர் சிறிசேனாவின் நாடாளுமன்றக் கலைப்பை எதிர்த்து தேர்தல் ஆணையர் உள்ளிட்ட 13 பேர் தனித்தனியாக அடிப்படை உரிமை மீறல் வழக்குகளைத் தொடுத்திருந்தார்கள்.

நேற்று தொடங்கிய அந்த வழக்குகளின் விசாரணை இன்றும் தொடர்ந்தது. இன்று காலை இலங்கை அரசின் அட்டர்னி ஜெனரல் ஜெயந்த ஜெயசூரியா வாதாடியபோது, “அதிபரின் அதிகாரத்துக்குள் தலையிட நீதிமன்றத்துக்கு உரிமை இல்லை” என்று வாதாடினார்.

இதற்கு பதிலளித்து மனுதாரர்கள் தரப்பில் வாதங்கள் வைக்கப்பட்ட நிலையில் இன்று மாலை தலைமை நீதிபதி நளின் ஃபெரைரா, ப்ரியந்த ஜெயவர்தனா, பிரசன்ன ஜெயவர்தனா ஆகியோர் தீர்ப்பளித்தனர்.

”இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து அதிபர் சிறிசேனா வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்புக்கு டிசம்பர் 7 ஆம் தேதி வரை இடைக்காலத் தடை விதிக்கிறோம்” என்று தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர் நீதிபதிகள். இதன் மூலம் அதிபரின் தேர்தல் அறிவிப்புக்கும் தடை பொருந்தியுள்ளது. தீர்ப்பின் விரிவான அம்சங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே நவம்பர் 14 அதாவது நாளை இலங்கை நாடாளுமன்றம் கூடும் என்று அறிவிக்கப்பட்டிருந்த வேளையில் உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பால் நாளை நிச்சயமாக நாடாளுமன்றம் கூடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இதற்கிடையில் பிரதமராக நியமிக்கப்பட்ட ராஜபக்‌ஷே அதிபர் சிறிசேனாவின் கட்சியில் இருந்து வெளியேறி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்துள்ளார். அவருடைய மகன் நமல் ராஜபக்‌ஷேவும், சுதந்திரா கட்சியின் முன்னாள் எம்.பி.,க்கள் 50 பேரும் இந்த கட்சியில் இணைந்துள்ளனர்.

இதனால் சிறிசேனாவுக்கும் ராஜபக்‌ஷேவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் நாளை நாடாளுமன்றம் கூடுமா, கூடினால் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

செவ்வாய், 13 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon