மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 1 ஜுன் 2020

சினிமா பாரடைசோ: மாட்டு வண்டியும் எம்.ஜி.ஆர்., சிவாஜி அரசியலும்!

சினிமா பாரடைசோ: மாட்டு வண்டியும் எம்.ஜி.ஆர்., சிவாஜி அரசியலும்!

தேவிபாரதி

தமிழ் சினிமாவின் வாயிலாகச் சமூகத்தை அணுகும் தொடர் - 2

நாங்கள் அப்போது வசித்துவந்த கஸ்பாபேட்டையில் திரையரங்கு வசதி எதுவுமில்லை. சினிமா பார்க்க வேண்டுமென்றால் அங்கிருந்து எட்டுக் கிலோமீட்டர் தொலைவிலிருந்த நகரமான ஈரோடுதான் போக வேண்டும்.

பழனி நெடுஞ்சாலையில் அமைந்திருந்த எங்களுடைய கிராமத்திலிருந்து ஏழெட்டுக் கிலோமீட்டர் தொலைவில் இருந்தது ஈரோடு. பெரியார் பிறந்த மண். அன்றைய போக்குவரத்துச் சூழலில் அது வெகு தொலைவு. பழனி நெடுஞ்சாலையில் அமைந்திருந்ததால் பேருந்துகளில் பயணம் செய்யும் பாக்கியம் எங்கள் கிராமத்துவாசிகளுக்கு இருந்தது. அப்போதைய பேருந்துகளுக்கு மூக்கு பஸ் என்னும் செல்லப்பெயர் இருந்தது. எஞ்சின் பகுதி முன்புறம் வெளியே நீட்டிக்கொண்டிருந்ததால் அவை அப்படி அழைக்கப்பட்டிருக்க வேண்டும். மூக்கில்லாத பஸ்கள் இருந்தனவா எனத் தெரியவில்லை.

அதிகாலையில் ஒரு நடை, மதியம் சாப்பாட்டு நேரத்தில் ஒரு நடை, பிறகு பொழுது சாயும் நேரம், ஆறரையிலிருந்து ஏழு மணிக்குள் ஒரு நடை என நாளுக்கு மூன்று முறை தெற்கு வடக்காகப் போய்வரும் பேருந்துகள் உள்ளொடுங்கியிருந்த மற்ற ஊர்க்காரர்களுக்கு அதிசயம். வெளியூர்களிலிருந்து பள்ளிக்கூடத்திற்காக எங்களுடைய ஊருக்கு வருபவர்கள் எவ்வளவு நேரமானாலும் நின்று ஒரு தடவையாவது அந்த அதிசயத்தைப் பார்க்காமல் போக மாட்டார்கள். ஊருக்கு வந்து சேருவதற்கு வெகு நேரம் முன்னதாகவே அவற்றின் ஹாரன் சத்தம் கேட்கத் தொடங்கிவிடும். ஏர் ஹாரன். 'பாம் பாம், பூம் பூம்’ எனப் பல லயங்கள் கொண்ட கலவரமூட்டும் ஓசையை எழுப்ப வல்லவை அவை. பயங்கரமான அந்த ஓசைகளே ஊராருக்கு நேரத்தை அறிந்துகொள்வதற்கு உதவியவை. தொனி பேதங்களைக் கொண்டே பஸ் அப்போது எந்த இடத்தில் வந்துகொண்டிருக்கிறது என்பதையும் எவ்வளவு நேரத்தில் ஊருக்கு வந்து சேரும் என்பதையும் கணித்துச் சொல்ல அவர்களுக்கு முடிந்திருந்தது.

நெடுஞ்சாலையில் பழனியை நோக்கிச் செல்லும் மூக்கு பஸ்களில் எதுவும் எங்கள் ஊரில் நிற்காது. 'ஸ்டாப்’ இல்லை. ஸ்டாப் இல்லாத இடங்களில் நிறுத்தலாமா, வேண்டாமா என்பதைத் தீர்மானிப்பது பேருந்து ஓட்டுநரின் தனிப்பட்ட உரிமையாக இருந்தது. கட்டாயம் பயணம் செய்தே ஆக வேண்டுமென்றால் பதற்றமான முகத்தோற்றங்களுடன் சாலையின் குறுக்கே நின்றுகொண்டு கையை வீசி ஆட்டினால் சில சமயங்களில் நிறுத்துவார் ஓட்டுநர். ஆனால் எல்லா சமயங்களிலும் அந்த உத்தி கைகொடுக்கும் எனச் சொல்ல முடியாது. பேரோசையுடன் ஹாரனை ஒலிக்கச் செய்து உயிர் பயத்தை ஏற்படுத்திவிட்டுக் கடந்து போய்விடுவார்கள்.

சில சமயங்களில் ஆள் பார்த்து நிறுத்துவார்கள். பஸ்ஸில் டிக்கெட் இருப்பு இருக்க வேண்டும். அப்படி இருந்தாலும்கூட ஓர் ஆள் இரண்டு ஆளுக்கெல்லாம் நிறுத்த மாட்டார்கள். நாலைந்து பேராவது இருக்க வேண்டும். பேராசை கொண்ட மூக்கு பஸ் ஓட்டுநர்களை ஏமாற்றுவது எப்படி என்பது ஊர்க்காரர்களுக்குத் தெரியும். நாலைந்து பேர் கூட்டமாகப் போய் நிற்பார்கள். இருந்த சத்திரம் சாவடிகளில் தாயக்கட்டம் விளையாடிக்கொண்டிருப்பவர்களைக் கூப்பிட்டு 'அப்படிச் சும்மா’ வந்து சாலையில் நிற்கச் சொல்வார்கள். கூட்டத்தைக் கண்டதும் இன்றைக்கு நல்ல வேட்டை என நாக்கைச் சப்புக்கட்டிக்கொண்டு பேருந்தை ஓரம் கட்டி நிறுத்துவார் ஓட்டுநர்.

நடத்துநரையும் உற்சாகம் தொற்றிக்கொள்ளும். படியருகே வந்து வெளியில் தலையை நீட்டிக் காத்திருப்பவர்களைப் பார்த்து, 'ம்...ம்...சீக்கிரம் சீக்கிரம் சீக்கிரம்’ எனச் செல்லமான அதட்டலுடன் அழைப்பார். மற்றவர்கள் வெகு ஆர்வமாகப் பஸ்ஸை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, ஒரு ஆள் மட்டும் அவர்களிடம் பிரிவு சொல்லிக்கொண்டு பேருந்தில் ஏறிவிடுவார்.

அது போன்ற நேரங்களில் ஓட்டுநருக்கும் நடத்துநருக்கும் உண்டாகும் ஆத்திரத்தின் தீவிரத்தை வர்ணிக்கவே முடியாது. வாய்க்கு வந்தபடி திட்டுவார்கள். கறுவிக்கொண்டே வண்டியைக் கிளப்புவார்கள். தயவு தாட்சண்யம் பார்க்காமல் கீழே இறக்கிவிட்டு விடுவதும்கூட உண்டு.

பயணி அதையெல்லாம் காதிலேயே போட்டுக்கொள்ள மாட்டார். தான் செவிடு என்பது போன்ற பாவனையுடன் ஓரமாகப் போய் அப்பாவி மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு உட்கார்ந்துவிடுவார். வேறு வழியில்லாமல் பயணச் சீட்டைக் கிழித்துக் கொடுத்துவிட்டுப் போய்விடுவார் நடத்துநர்.

அப்போதைய நடத்துநர்கள் உண்மையாகவே வானளாவிய அதிகாரம் கொண்டவர்களாக இருந்தார்கள். தடை செய்யப்பட்ட பொருட்களைப் பேருந்துகளில் எடுத்துவரக் கூடாது என்பதில் கறாராக இருப்பார்கள். அப்படித் தடை செய்யப்பட்ட பொருள்களில் ஒன்று கோழி.

அன்றைய கிராமத்து மக்கள் மேற்கொண்ட பயணங்கள் மிக எளியவை. கல்யாணம் காட்சிகளுக்காகவும் இருபது, முப்பது மைல் தொலைவிலிருக்கும் உறவினர்கள் வீடுகளுக்குச் செல்வார்கள், வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்காகவும் கிடா வெட்டுக்காகவும் கோயில் குளங்களுக்குப் போவார்கள். ஓரிருவர் மருத்துவ சிகிச்சைக்காக தாராபுரத்திற்குத் தெற்கே உள்ள அம்பிளிக்கை போவார்கள். எப்போதாவது பழனிக்குச் சென்றவர்களும் உண்டு. மகள், மகன், மாமன், மைத்துனர் வீடுகளுக்குப் போகும்போது சீடை, முறுக்கு, கச்சாயம், ஒப்புட்டு முதலான பலகாரங்களையும் சுட்ட பனங்கிழங்குகளையும் சாக்குப் பையில் போட்டு எடுத்துச் செல்வதில் எந்தச் சிக்கலும் இல்லை.

கோழியைக் கொண்டு போனால்தான் சிக்கல். பேருந்தில் அதைக் கொண்டுசெல்வது ஒரு வகையான சாகசம். நீண்ட துணிப் பையின் அடிப்பாகத்தில் கோழியை வைத்து அதன் மீது ஈரத்துணியைச் சுற்றி, கொஞ்சம் காய்கறிகளைப் பரப்பி வைத்துக்கொண்டு பேருந்தில் ஏறி கடைசி இருக்கையில் போய் ஜன்னலோரமாக உட்கார்ந்துகொள்ள வேண்டும். ஈரத் துணியைச் சுற்றி வைத்தால் கோழி சத்தமெழுப்பால் பதுங்கிக்கொண்டுவிடும் என்பது நம்பிக்கை. பல சமயங்களில் அந்த நம்பிக்கை கை கொடுத்திருக்கிறது. சில கோழிகள் ஈரத் துணிகளுக்குக் கட்டுப்படாமல் கத்திச் சத்தமெழுப்பிவிடும். சத்தத்தைக் கேட்ட உடனேயே பேருந்து நிறுத்தப்பட்டுவிடும். நடத்துநரும் ஓட்டுநரும் கூட்டுச் சேர்ந்துகொண்டு பயணிகளின் உடைமைகளைச் சோதிப்பார்கள். கோழி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட பயணியை அத்துவானக் காடு என்றுகூடப் பார்க்காமல் இறக்கிவிட்டுவிடுவார் நடத்துநர்.

அதற்காகவெல்லாம் கோழி கொண்டுபோவதை யாரும் நிறுத்தியதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. ஓட்டுநரையும் நடத்துநரையும் தங்களுடைய கோழியையும் சபித்துக்கொண்டே மூட்டை முடிச்சுகளோடு பத்திருபது கிலோமீட்டர்வரை நடந்தே போய்ச் சேர்ந்துவிடுவார்கள்.

அதிகாரச் செருக்குக் கொண்ட மூக்கு பஸ் நடத்துநர்களையும் ஓட்டுநர்களையும் நம்பி சினிமாவுக்கெல்லாம் போக முடியாது. படம் முடிந்து வருவதற்குள் கடைசி பஸ் கிளம்பி வெகு தூரம் போயிருக்கும். பிறகு கைகளை வீசிக்கொண்டு நடந்து கோழி கூப்பிடும் நேரத்தில் வீட்டை அடைவார்கள். அப்போதைய திரைப்படப் பார்வையாளர்கள் இதுபோன்ற பல சாகசங்களை மேற்கொள்வதற்குத் தயங்கியதே இல்லை.

சினிமா வேறு எதையும்விட அதிக முக்கியமானதாக இருந்த காலம் அது.

மூக்கு பஸ்களை நம்பாமல் வண்டி கட்டிக்கொண்டு போவார்கள். அப்போதைய இந்திய தேசிய காங்கிரசின் தேர்தல் சின்னமாக இருந்த இரட்டைக் காளை மாட்டு வண்டி.

இரட்டை மாட்டு வண்டி கட்டிக்கொண்டு சினிமாவுக்குப் போன நிகழ்ச்சிகள் திருவிழாக்களின் கொண்டாட்டங்களுக்கு நிகரானவை. ஊரிலிருந்து நான்கைந்து வண்டிகள் ஒரே சமயத்தில் புறப்படும். அவற்றில் ஏதாவதொன்றில் இடம்பிடிப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.

ஊரில் எல்லோரிடமும் வண்டியும் காளை மாடுகளும் இருக்காது. கொஞ்சம் செல்வாக்கான பெரிய விவசாயிகளே சொந்தமாக வண்டி, மாடுகளை வைத்திருப்பார்கள். அவர்கள் சினிமாவுக்குப் போகும் நாளாகப் பார்த்து அவர்களுடன், அவர்கள் அழைத்துப் போகும் ஊர்களுக்குப் போய் அவர்களுக்கு விருப்பமான திரைப்படங்களைத்தான் மற்றவர்களும் பார்த்துவிட்டுத் திரும்ப வேண்டும்.

இரட்டைக் காளை மாட்டு வண்டிகளில் சினிமாவுக்குச் சென்றவர்களில் பெரும்பாலோனோர் சிவாஜி கணேசனின் ரசிகர்களாகவே இருந்தார்கள். அவரது ரசிகர்களாக இருப்பது ஒருவகையான உயர்குடிப் பண்புகளின் அடையாளமாகக் கருதப்பட்டது.

அவர்கள் சிவாஜி ஏற்று நடித்த கோட், சூட், டை உடுத்திய உயர்குடிப் பண்புகளைக் கொண்ட பாத்திரங்களுடன் தங்களை எளிதாக அடையாளப்படுத்திக்கொண்டார்கள். இரட்டைக் காளைமாடு சின்னத்திற்கு வாக்களித்த காங்கிரஸ்காரர்களான கிராமப்புற உயர்குடியினருக்கு சிவாஜியின் படங்களைப் பார்ப்பது ஒருவகையான அரசியல் செயல்பாடாகவும் இருந்தது.

எம்.ஜி.ஆரின் திரைப்படங்களைப் பார்ப்பதும்கூட ஒருவகையான அரசியல் செயல்பாடாகவே இருந்தது. 1960கள் அரசியல் ரீதியில் திமுக செல்வாக்குப் பெற்று வளர்ந்துகொண்டிருந்த காலம். எம்.ஜி.ஆர். திமுகவின் அடையாளமாகக் கருதப்பட்டார். அவரது படங்கள் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த நிலவுடமையாளர்கள், பண்ணையாளர்கள், பெரு முதலாளிகளைக் கடுமையாக விமர்சிப்பவையாக இருந்தன. அவர்களை எதிர்த்துப் போராடும் நாயகனான எம்.ஜி.ஆர்., விவசாயியாகவோ வண்டியிழுக்கும் கூலித் தொழிலாளியாகவோ தனது திரைப்படங்களில் தோன்றினார். அவர்களால் சுரண்டப்படும், வஞ்சிக்கப்படும் அடித்தட்டு மக்களுக்கு ஆதரவாக இருந்தார். அவர்களுக்காகப் போராடினார், சண்டை போட்டார், அவர்களின் உரிமையை நிலைநாட்டுவதற்கான வசனங்களைப் பேசினார், அவர்களது துயரங்களைப் பேசும் தத்துவப் பாடல்கள் அவரது படங்களில் இடம்பெற்றிருந்தன.

அடித்தட்டு மக்கள் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர்களாக இருந்தார்கள். அவர்களிடம் வண்டிகளோ, காளை மாடுகளோ இல்லை. நுழைவுச் சீட்டுக்கான சில்லறைக் காசுகளுக்கேகூடத் திணறிக்கொண்டிருந்த அடித்தட்டு மக்கள் பல மைல் தூரங்கள் வரை நடந்து சென்று அவர் நடித்த திரைப்படங்களைப் பார்த்துவிட்டு வந்தார்கள்.

எம்.ஜி.ஆர். ரசிகர்களான அடித்தட்டு மக்களுக்காகவே கிராமங்களில் டென்ட் கொட்டகைகள் உருவாகியிருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.

(தொடரும்)

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள், கட்டுரைகள் எழுதிவரும் தேவிபாரதி, மார்க்சிய, மார்க்சிய லெனினிய இயக்கங்களில் சிறிது காலம் செயல்பட்டவர். 1994இல் இளம் நாடக ஆசிரியருக்கான மத்திய சங்கீத நாடக அகாடமியின் பரிசு பெற்றார். இவரது சிறுகதைகளில் சில ஆங்கிலத்திலும் இந்தி, மலையாளம் உள்ளிட்ட சில இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘வீடென்ப’ என்னும் தலைப்பிலான இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட பத்துச் சிறுகதைகள் என். கல்யாணராமன் மொழிபெயர்ப்பில் Horper Perinial வெளியீடாக Farewell Mahatma என்னும் தலைப்பில் வெளிவந்தது. காலச்சுவடின் பொறுப்பாசிரியராக ஆறு ஆண்டுகள் பணியாற்றினார். மின்னஞ்சல் முகவரி: [email protected])

பகுதி 1

புதன், 14 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon