மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 1 ஜுன் 2020

ரஜினி: அதிமுகவில் இரு வேறு குரல்கள்!

ரஜினி: அதிமுகவில் இரு வேறு குரல்கள்!

ரஜினியின் கருத்து குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்திருந்த நிலையில், அரசியலுக்கு இன்னும் வராத ரஜினியை விமர்சிப்பது தேவையற்றது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.

சில தினங்களுக்கு முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் எழுவர் விடுதலைக் குறித்தும் பாஜக குறித்தும் பேசியிருந்தார். அவரது கருத்து சர்ச்சையானதைத் தொடர்ந்து அது தொடர்பாக நேற்று விளக்கமும் அளித்திருந்தார். எனினும் அரசியல் கட்சிகள் ரஜினியை தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “நேற்று ஒன்று பேசிவிட்டு இன்று அதை மாற்றிப் பேசுகிறார் ரஜினி. எனவே, யார் எதை எப்படிச் சொன்னாலும் மக்கள்தான் எஜமானர்கள். அவர் சினிமாவில் வேண்டுமென்றால் பெரிய ஹீரோவாக இருக்கலாம். ஆனால், அரசியலில் அவர் ஹீரோவா ஜீரோவா என்பதை மக்கள் இதிலிருந்து முடிவெடுத்துக்கொள்வார்கள்” என்று கருத்து தெரிவித்திருந்தார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமாரிடம், மோடி பலசாலி என்று ரஜினி கூறியுள்ளாரே, என்ற கேள்வி எழுப்பப்பட்டபோது, யார் பலமானவர்களா, பலவீனமானவர்களா, என்பதைத் தேர்தலின் போது மக்கள் முடிவு செய்வார்கள்” என்று கூறியிருந்தார்.

அதிமுகவை சேர்ந்த அமைச்சர் ரஜினியைத் தொடர்ந்து விமர்சித்துவரும் நிலையில், ரஜினியை விமர்சிப்பது தேவையற்றது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார். கரூர் தென்னிலையில் இன்று (நவம்பர் 14) செய்தியாளர்களைச் சந்தித்த தம்பிதுரையிடம் ரஜினி குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, அரசியலுக்கு வராத ரஜினி குறித்து விமர்சிப்பது தேவையற்றது என்று பதிலளித்தார்.

மேலும் பேசிய அவர், “பாஜக மதவாத கட்சி என்று சொல்கிற இடதுசாரிகளும், திமுகவும் இணைந்துதான் அன்று பாஜகவைக் காப்பாற்றினார்கள். இன்று மோடியை வீழ்த்துவோம் என்று சொல்வது அரசியல்.

திமுக இந்தியாவைக் காப்பாற்றும் என்பது கேள்விக்குறியாகும். இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற முடியாத கட்சி திமுக.

இலங்கையில் 1½ லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டபோது திமுக மத்திய ஆட்சியில் அங்கம் வகித்தது. ஆனால் அவர்களால் இலங்கை தமிழர்களை காப்பாற்ற முடியவில்லை. இப்போது. கம்யூனிஸ்டுகளுடன் சேர்ந்து இந்தியாவை வலிமையாக்குவோம் என்று கூறுவது அரசியலுக்காக, தேர்தலுக்காக, பிரசாரத்துக்காகத்தான்” என்று கூறினார்.

புதன், 14 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon