மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 26 மே 2020

தீபிகா - ரன்வீர்: பிக் பட்ஜெட் திருமணம்!

தீபிகா - ரன்வீர்: பிக் பட்ஜெட் திருமணம்!

பாலிவுட்டின் முன்னணி ஜோடியான ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனும் காதலித்து வரும் தகவல் திரையுலகில் வலம் வந்து கொண்டிருந்தது. இதுதொடர்பான எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அவர்கள் தரப்பிலிருந்து வெளிவரவில்லை. பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் உட்பட பல வெற்றிப் படங்களில் இணைந்து நடித்த இவர்கள், விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியானது.

இவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக, நவம்பர் 14 மற்றும் 15 ஆகிய இரு தினங்களில் தங்களின் திருமணம் நடைபெறவுள்ளதாகக் கூறி கடந்த மாதம் தங்கள் திருமணப் பத்திரிகையை வெளியிட்டனர். காதலிப்பதைக்கூட உறுதிப்படுத்தாத இவர்கள் திடீரென திருமணப் பத்திரிகையை வெளியிட்டது அவர்களின் ரசிகர்களுக்கும் இன்பஅதிர்ச்சியைக் கொடுத்தது.

இதனையடுத்து இன்றும், நாளையும் இவர்களது திருமண வைபோகம் இத்தாலியில் நடைபெற்று வருகிறது. காதல் நகரமான இத்தாலியில் பனிபடர் ஆல்ப்ஸ் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள, உலகின் மிகப்பிரசித்தபெற்ற ‘ லேக் கோமோ’ என்ற பிரபல ஏரியில்தான் இவர்கள் திருமணம் நடைபெறுகிறது.

பாலிவுட் வரலாற்றிலேயே அதிக பட்ஜெட் கொண்ட திருமணமாக அமைந்திருக்கும் இதில், தீபிகாவின் தாலி மட்டும் 20 லட்சம் ரூபாய். மேலும், இவர்களின் திருமணம், இரண்டு வெவ்வேறு பாரம்பரிய முறைப்படி நடக்கவிருக்கிறது. கர்நாடகாவைச் சேர்ந்த தீபிகாவின் குடும்ப வழக்கப்படி கொங்கணி முறை திருமணமும், மும்பையைச் சேர்ந்த ரன்வீரின் குடும்ப வழக்கப்படி சிந்தி முறை திருமணமும் செய்ய ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

திருமணத்துக்கு உறவினர்கள், நண்பர்கள் உட்பட மொத்தம் 30 பேரைதான் அழைத்திருக்கிறார்கள். அதில் பாலிவுட்டிலிருந்து ஷாரூக்கான், இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, பிரபல நடன இயக்குநர் ஃபரா கான் உள்ளிட்டோரை மட்டுமே திருமணத்துக்கு அழைத்திருக்கிறார்கள். மற்றவர்கள், நவம்பர் 21ஆம் தேதி பெங்களூரிலும், 28ஆம் தேதி மும்பையிலும் நடைபெறவுள்ள வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள்.

மேலும், விருந்தினர்கள் தங்களுக்கு பொருட்களைத் தரவேண்டாமென்றும், அவற்றை மன அழுத்தத்தில் இருந்து மீள உதவும், LIVE LOVE LAUGH என்னும் தொண்டு நிறுவனத்திற்கு தந்துதவ வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர் இந்தத் தம்பதியினர்.

இதற்கு முன், ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனி, பாடகர் டேவிட் பவ்வி, சின்னத்திரை நாயகி கிம் கார்தர்ஷியன் போன்றோரின் திருமணமும் இந்த ஏரியில்தான் நடைபெற்றன. விரைவில் திருமணம் நடக்கவிருக்கும் அம்பானியின் மகள் இஷாவின் நிச்சயதார்த்தமும் இந்த ஏரியில்தான் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

புதன், 14 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon