மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 1 ஜுன் 2020

டிஜிட்டல் திண்ணை: கொடநாடு எஸ்டேட்டுக்குப் புது மேனேஜர்!

டிஜிட்டல் திண்ணை: கொடநாடு எஸ்டேட்டுக்குப் புது மேனேஜர்!

மொபைல் டேட்டா ஆன் செய்துவிட்டுக் காத்திருந்தோம். வாட்ஸ் அப் மெசெஜ் வந்து விழுந்தது.

“கொடநாட்டில் இருக்கேன்... க்ளைமெட் செம!” என்றுதான் அந்த மெசேஜ் இருந்தது. சற்று நேரத்துக்குப் பிறகு அடுத்த மெசேஜ் வந்தது. 2017 மே மாதம் 19ஆம் தேதி டிஜிட்டல் திண்ணையில் கொடநாடு எஸ்டேட் பற்றி நாம் எழுதியிருந்தோம்.

அதில், ’ஜெயலலிதா இருந்த வரை இரும்புக் கோட்டையாக இருந்த கொடநாடு எஸ்டேட் இப்போது மர்மக் கோட்டையாக மாறிவிட்டது. கொடநாட்டைப் பொறுத்தவரை ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலாவின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. ஜெயலலிதா சிறைக்குச் சென்ற பிறகு, அதை கவனித்துக் கொள்ளும் முழு பொறுப்பும் நடராஜன் கைக்கு வந்தது. நடராஜன் என்பவர் சசிகலாவால் நியமிக்கப்பட்ட எஸ்டேட் மேனேஜர். இப்போது நடராஜன் சொல்வதுதான் அங்கே சட்டமாகி இருக்கிறது.’ என்று அதில் குறிப்பிட்டிருந்தோம். ஒரு வருடம் ஆகியும் நடராஜன் கையில் இருந்த அத்தனையும் இப்போது கை மாறி இருக்கிறது.

கொடநாடு எஸ்டேட்டில் இப்போது TN 43 J என தொடங்கும் ஒரு புது கார் வலம் வரத் தொடங்கி இருக்கிறது. இவ்வளவு நாளாக அப்படி ஒரு கார் கொடநாடு எஸ்டேட்டில் இல்லை. அந்த புது காரில் சென்னையில் இருந்து வந்த ஒருவர்தான் இப்போது வலம் வருகிறாராம். அவருடைய பெயர் சதீஷ் என்பதை தவிர வேறு எதுவுமே கொடநாடு ஊழியர்களுக்கு தெரியவில்லை. அண்மையில் பரோலில் வந்து மீண்டும் சிறை சென்றார் இளவரசி. அதன் பின்னர் கடந்த வாரத்தில் இளவரசியின் மகன் விவேக்தான் அந்த சதீஷ் என்ற நபரை கொடநாட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார்.

‘இனிமேல் கொடநாடு எஸ்டேட்டை இவருதான் பார்த்துக்குவாரு. உங்களுக்கு சம்பளத்தில் இருந்து, கணக்கு வழக்கு எல்லாமே இவருதான் கவனிச்சுக்குவாரு. நடராஜன் இவருக்கு உதவியா இருப்பாரு. இனி உங்களுக்கு என்ன வேணும்னாலும் இவருகிட்ட கேட்கலாம். இங்கே பங்களாவுல வேலை செய்யுற சிலர் தொடர்ந்து ஏதோ பிரச்னை பண்ணிட்டு இருக்கீங்கன்னு எனக்கு சொல்லிட்டே இருக்காங்க. உங்களுக்கு விருப்பம் இருந்தால் தொடர்ந்து வேலை செய்யலாம். இல்லைன்னா கிளம்பிடுங்க. கோஷ்டி சேர்க்கிறதோ கொடி பிடிக்கிறதோ இங்கே வேண்டாம். அதுக்கான இடமும் இது இல்லை.

அம்மா இருந்தபோது இருந்தவங்க என்பதால்தான் நான் யாரையும் அனுப்ப வேண்டாம்னு சொல்லி இருந்தேன். ஆனால் அந்த காரணத்தையே வெச்சுக்கிட்டு நீங்க பிரச்சினை பண்றதை ஏத்துக்க முடியாது. இது எல்லாமே சின்னம்மாவை கேட்டு எடுத்த முடிவுதான். இப்போ உங்களுக்கு வந்திருக்கும் புது மேனேஜரும் சின்னம்மாவுக்கு தெரிஞ்சவருதான். நீங்க இப்படியெல்லாம் பண்றதை சின்னம்மா விரும்பலை. அவங்க சொல்லித்தான் நான் இங்கே வந்திருக்கேன்...’ என்று சொல்லியிருக்கிறார் விவேக்.

அதற்கு ஊழியர் ஒருவர், ‘அம்மா இருக்கும்போதும் எங்களுக்குக் கொடுத்த சம்பளத்தில் நிறைய புடிச்சிட்டுதான் கொடுத்தாங்க. இப்பவும் அப்படித்தான். இந்த வருஷம் தீபாவளிக்கு கூட போனஸ் கொடுக்கலை. அப்புறம் எப்படி கேள்வி கேட்காமல் இருக்க முடியும்?’ என்று கேட்டாராம். ‘இனி அப்படியான பிரச்சினை வராது’ என் உறுதி கொடுத்திருக்கிறாராம் விவேக்.” என்று முடிந்தது அந்த மெசேஜ்.

தொடர்ந்து ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் ஒன்றையும் அப்டேட் செய்தது.

“அதிமுகவின் அதிகாரப்பூர்வ சேனலான நியூஸ் ஜெ. இன்று தொடங்கப்பட்டு விட்டது. முதல்வரும் துணை முதல்வரும் இணைந்து சேனல் ஒளிபரப்பைத் தொடங்கி வைத்திருக்கிறார்கள். ‘சேனல் வேற... கட்சி வேற. சேனலுக்குள்ள கட்சி ஆட்கள் யாரும் வந்து தலையிடக் கூடாது. அப்படி யாராவது சேனலுக்குள்ள வந்து அதிகாரம் பண்ணினாங்கன்னா உடனே எனக்கு தகவல் சொல்லுங்க. அவங்க மேல உடனே நடவடிக்கை எடுக்கப்படும். கட்சி தொடர்பாக எந்த செய்தியாக இருந்தாலும் எங்ககிட்ட உறுதிப்படுத்தாமல் சேனலில் ஒளிபரப்ப வேண்டாம்’ என ஸ்ட்ரிக்ட்டாக சொல்லியிருக்கிறாராம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.” என்பதுதான் அந்த ஸ்டேட்டஸ். அதற்கு லைக் போட்டுவிட்டு ஆஃப்லைனில் போனது வாட்ஸ் அப்.

புதன், 14 நவ 2018

அடுத்ததுchevronRight icon