மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 18 ஜன 2021

சிறப்புக் கட்டுரை: பெண் தற்கொலைகளைக் கட்டுப்படுத்தும் கல்வியும் பொருளாதாரமும்!

சிறப்புக் கட்டுரை: பெண் தற்கொலைகளைக் கட்டுப்படுத்தும் கல்வியும் பொருளாதாரமும்!

ஸ்வகதா யாதவர்

இந்தியாவில் 1 லட்சத்துக்கு 15 பெண்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இது சர்வதேச சராசரியைக் காட்டிலும் 2.1 மடங்கு அதிகமாகும். சர்வதேச சராசரி 1 லட்சத்துக்கு 6 பெண்கள் என்ற விகிதத்தில்தான் உள்ளது. இந்த ஆண்டு செப்டம்பரில் மருத்துவ இதழான லேன்செட் Gender Differentials and State Variations In Suicide Deaths in India: The Global Burden of Disease Study 1990–2016 என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டது.

இந்த ஆய்வின்படி இந்தியாவில் பெண்கள் வயது தரநிலைகளின்படி தற்கொலை விகிதம் 27 விழுக்காடு சரிந்துள்ளது. ஆனால், ஆண்கள் வயது தரநிலைகளின்படி ஆண்கள் தற்கொலை விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை. “பெண்களின் கல்வி விகிதம் அதிகரித்திருப்பதும், திருமண வயது அதிகரித்திருப்பதும் தற்கொலை விகிதம் குறைந்ததற்குக் காரணமாக இருக்கலாம்” என்கிறார் ராஹி டண்டோனா. இந்த ஆய்வறிக்கையின் முன்னணி எழுத்தாளரான இவர் பப்ளிக் ஹெல்த் பவுண்டேஷனில் பொது சுகாதாரத் துறை பேராசிரியராக உள்ளார்.

உலகம் முழுக்க தற்கொலைகளிலிருந்து விடுவிக்கும் பெண்களின் பாதுகாப்புக்கான ஒரு காரணியாக திருமணம் இருந்து வருகிறது. ஆனால், இந்தியாவில் மட்டும் தற்கொலை செய்துகொண்ட பெண்களில் திருமணமான பெண்கள்தான் அதிகமாக உள்ளனர் என்பதையும் இந்த ஆய்வின் மூலம் அறிய முடிகிறது. பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணங்கள், சிறு வயது திருமணங்கள், இளம் வயதில் தாயாகுதல், சமூக கீழ்நிலை, வீட்டுக்குள்ளான வன்முறைகள், பெண்களுக்கான பொருளாதாரச் சுதந்திரமின்மை ஆகியவைதான் திருமணமான பெண்களின் தற்கொலைக்கு முக்கியக் காரணமாக உள்ளன.

சிறு வயது திருமணங்கள் மற்றும் சமுதாயக் கீழ்நிலை

சிறு வயதிலேயே இந்தியப் பெண்களுக்குத் திருமணம் செய்து வைக்கும் நிலைமை இப்போதும் இந்தியாவில் அதிகளவிலேயே காணப்படுகிறது. 18 வயதுக்குக் குறைவான 27 விழுக்காடு பெண் குழந்தைகளுக்கு இந்தியாவில் திருமணம் செய்து வைக்கப்படுகிறது. 15 வயது முதல் 19 வயதுக்குட்பட்ட 8 விழுக்காடு பெண் குழந்தைகள் 19 வயதுக்கு முன்பே கர்ப்பமடைகின்றனர் என்கிறது தேசிய குடும்ப சுகாதார அறிக்கை-4.

உலகம் முழுவதும் பெண்களின் தற்கொலைக்கும், வீட்டுக்குள் நடக்கும் வன்முறைகளுக்கும் நேரடித் தொடர்பு உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரையில் 15 வயது முதல் 49 வயதுக்குட்பட்ட பெண்களில் 29 விழுக்காட்டினர் திருமணம் சார்ந்த வன்முறைகளை எதிர்கொண்டுள்ளனர். 3 விழுக்காடு பெண்கள் கர்ப்பமடைந்த காலங்களில் வன்முறைகளை எதிர்கொண்டுள்ளனர் என்பதும் தேசிய குடும்ப சுகாதார அறிக்கை-4இன் மூலம் தெரிய வருகிறது.

இந்தியாவில் 15 முதல் 49 வயதுக்குட்பட்ட பெண்களில் 36 விழுக்காடு பெண்கள் மட்டுமே 10 வருடங்களுக்கு மேல் கல்வி கற்றுள்ளனர். இதுதான் சிறு வயதில் திருமணம் செய்துகொண்டு, இளம் வயதில் தாயாவதற்கு முக்கியக் காரணமாக உள்ளது. இந்தியப் பெண்கள் போதுமான அளவில் கல்வி கற்கவும் இல்லை; பொருளாதாரச் சுதந்திரமும் அவர்களுக்கு இல்லை.

”ஆண்களைப் போல, தற்கொலைகளிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் ஒரு காரணியாக அவர்களுக்குக் கல்வி இல்லை” என்கிறார் லக்ஷ்மி விஜயகுமார். இவர் சென்னையிலுள்ள ஸ்னேகா (SNEHA) தன்னார்வ சுகாதாரச் சேவைகள் அமைப்பைச் சேர்ந்தவர். இந்த ஆய்வில் இவரும் பங்கெடுத்துள்ளார்.

“ஆண்களைப் பொறுத்தவரையில் அவர்களின் தற்கொலைக்கு கடன் சுமை ஒரு முக்கியக் காரணியாக உள்ளது. அதுவும் குடும்பத்துக்காகவும், பெண் குழந்தைகளின் திருமணத்துக்காகவும் வாங்கப்பட்டதாக உள்ளது. குழந்தைத் திருமணங்களைத் தடுப்பதும், அவர்களுக்குக் கல்வி அளிப்பதும், வரதட்சணைக் கொடுமைகளை ஒழிப்பதும் பெண்கள் தற்கொலையைத் தடுப்பதற்கான வழிகளாக உள்ளன. பெண்கள் தற்கொலைக்கான மற்றொரு முக்கியக் காரணியாக ஆண்களின் குடிப்பழக்கம் உள்ளது. இதைப் பல ஆய்வுகளும் சுட்டிக்காட்டியுள்ளன” என்கிறார் லக்ஷ்மி.

அதேசமயத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் மற்றும் அந்தப் பெண்ணுக்கு நெருக்கமான கூட்டாளியின் வன்முறைகள் குறைந்துள்ளதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. பாலியல் தவறுகள் இல்லாத நிலையில், பெண்கள் அவர்களது வாழ்நாளில் தற்கொலை முயற்சியை மேற்கொள்வது 28 விழுக்காடு குறைகிறது. ஆண்களில் 7 விழுக்காடு குறைகிறது.

ஆண்களுக்கும் பெண்களுக்குமான வித்தியாசம்

“பெண்களின் தற்கொலை விகிதம் பல்வேறு காரணிகளால் குறைந்துள்ளது. ஆனால், ஆண்களின் தற்கொலை விகிதங்கள் கடந்த 30 ஆண்டுகளாக மாற்றம் காணவில்லை என்பதுதான் கவலைக்குரியது” என்கிறார் டண்டோனா.

பெண்களின் தற்கொலை விகிதம் 1990ஆம் ஆண்டில் 1 லட்சத்துக்கு 20 ஆக இருந்தது. இது 2016ஆம் ஆண்டில் 1 லட்சத்துக்கு 15 ஆகக் குறைந்துள்ளது. ஆனால், ஆண்களின் தற்கொலை விகிதம் 1990ஆம் ஆண்டில் 1 லட்சத்துக்கு 22 ஆக இருந்தது. இது 2016ஆம் ஆண்டில் 1 லட்சத்துக்கு 21 ஆக மட்டுமே குறைந்துள்ளது. ஆனால் சர்வதேச அளவில் பார்த்தால் ஆணுக்கும், பெண்ணுக்குமான தற்கொலை ஒப்பீடுகள் மிக மோசமான நிலையில் உள்ளன. சர்வதேச அளவில் பெண்களைக் காட்டிலும் 2 மடங்கு அதிகமாக ஆண்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆனால் இந்தியாவில் ஆண் - பெண் தற்கொலை வேறுபாடு 50 விழுக்காடாக மட்டுமே உள்ளது. தற்கொலை செய்து கொண்டவர்களில் 15 முதல் 39 வயதுக்குட்பட்ட ஆண்கள் 58 விழுக்காடும், பெண்கள் 71 விழுக்காடும் உள்ளனர்.

பதிவு செய்யப்படாத பெண்களின் தற்கொலை முயற்சிகள்

பெண்களின் உண்மையான தற்கொலை கணக்கில் வருவதில்லை. ஏனென்றால் திருமணம் ஆன ஏழு ஆண்டுகளுக்குள் ஒரு பெண் தற்கொலை செய்துகொண்டால் அந்தக் குடும்பமே தற்கொலைக்குப் பொறுப்பாகிறது. ஆண் - பெண் தற்கொலை வேறுபாடு தேசிய குற்ற ஆவணப் பணியகத்தின் தரவுகளில் 37 விழுக்காடாகவும், 2014-தற்கொலை இறப்பு ஆய்வில் 25 விழுக்காடாகவும் உள்ளது.

பெண்கள் விஷம் குடித்து செய்துகொண்ட பல தற்கொலை முயற்சிகள் விபத்தாக அல்லது தற்செயலாக நடந்ததாக மாற்றப்படுவதாக சங்கீதா ரெஜே கூறுகிறார். இவர் சுகாதார ஆலோசனை அமைப்பான CEHATஇன் ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இவர்தான் இந்தியாவில் பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறைகளுக்கு மருத்துவமனை ரீதியிலான மையங்களை முதலில் அமைத்தவர்.

“எப்போது பார்த்தாலும் 25 பெண்களாவது விஷம் அருந்தி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விஷம் அருந்திய பல பெண்களுடன் கூட்டம் நடத்திய பிறகு 2000ஆம் ஆண்டில் முதல் டிலசாவை (மருத்துவமனை ரீதியிலான மையங்கள்) தொடங்கினோம். மருத்துவமனைகளில் இந்தப் பெண்களுக்கு மருத்துவ வசதிகள் மட்டுமே அளிப்பார்கள். ஆனால் எதிர்காலத்தில் இதுபோன்ற முயற்சிகளில் அவர்கள் ஈடுபடாமல் இருக்க எந்த ஆதரவு முயற்சிகளையும் அளிக்க மாட்டார்கள். ஆனால், இங்கு உளவியல் நிபுணர்களைக் கொண்டு, அந்தப் பெண் வாழ்கின்ற சூழலில் கண்ட பிரச்சினையைச் சரிசெய்யவும் நாங்கள் நடவடிக்கைகள் மேற்கொள்கிறோம்” என்றார் அவர்.

இந்த ஆய்வின்படி இளம் பருவ பெண்களின் தற்கொலை விகிதம் அதிகரித்துள்ளது. தற்கொலை செய்துகொண்ட பெண்களில் 15 வயது முதல் 19 வயதுக்குட்பட்ட இளம்பருவ பெண்கள் 17 விழுக்காடு உள்ளனர். ”இதில் பெற்றோர்களின் தவறு குறித்து யாரும் பெரிதாகப் பேசுவதே இல்லை. ஆனால் பெற்றோரின் தவறுகள் மற்றும் கட்டுப்பாடுகள் இளம் பெண்களுக்கு அவர்களுக்கான சுய உரிமைகள் அல்லது சுயமாக முடிவெடுப்பதற்கான சுதந்திரம் வழங்குவதைத் தடுக்கிறது” என்கிறார் ரெஜே. பெற்றோர் அல்லது அவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ளவர்களால் நிகழும் வீட்டுக்குள்ளான வன்முறைகள் 30 விழுக்காடாக இருப்பதாகவும் தேசிய குடும்ப சுகாதார ஆய்வு கூறுகிறது.

மாநிலங்களுக்குள்ளான வேறுபாடுகள்

வளர்ந்த மற்றும் வளரும் மாநிலங்களைக் காட்டிலும் குறைவான அளவில்தான், குறைவான வளர்ச்சி கண்ட மாநிலங்களில் பெண் தற்கொலை விகிதம் உள்ளது.மொத்தமுள்ள 31 மாநிலங்களில் 25 மாநிலங்களில் 15 முதல் 29 வயதுக்குட்பட்ட பெண்களின் தற்கொலை விகிதம் அதிகமாக உள்ளது.

தமிழ்நாடு (29.8), கர்நாடகா (30.7), மேற்கு வங்கம் (23.6), திரிபுரா (30.3), ஆந்திரப் பிரதேசம் (25), தெலங்கானா (22.4) மற்றும் கேரளா (21) ஆகிய மாநிலங்களில் பெண்கள் தற்கொலை விகிதம் மிக அதிகமாக உள்ளது. மற்ற பகுதிகளைக் காட்டிலும் தென்னிந்தியாவில் ஆண் - பெண் தற்கொலை விகிதம் அதிகமாகவே உள்ளது.

”தற்கொலை என்பது மிகவும் சிக்கலானது. ஒற்றைக் காரணியைக் கொண்டு இதைக் குறைக்க முடியாது” என்கிறார் டண்டோனா. “தென் மாநிலங்கள் மிக அதிகமாக நகரமயமாகிவிட்டன. இதனால் இட நெருக்கடியும், சிறு குடும்பங்களின் அழுத்தங்களும் அதிகரித்துள்ளன. வாழ்க்கைக்கான செலவுகளும் அதிகரித்துள்ளன. இவையெல்லாம் இங்கு தற்கொலை அதிகமாக இருப்பதற்குக் காரணமாக உள்ளன. கிராமப்புறங்களில் உள்ள மேம்பாட்டுத் தட்டுப்பாடுகள் காரணமாகப் பலர் நகரங்களுக்குக் குடிபெயர்ந்து வருகின்றனர்.

1990 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் உத்தரகாண்டில் அதிகபட்சமாக 45 விழுக்காடும், சிக்கிமில் 43 விழுக்காடும், இமாசலப் பிரதேசத்தில் 40 விழுக்காடும், நாகாலாந்தில் 40 விழுக்காடும் பெண் தற்கொலைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் தற்கொலைகள் குறித்த ஆய்வுகள் தேவை

15 வயது முதல் 39 வயதுக்குட்பட்ட இளைய வயதினரின் மரணத்துக்கு முக்கியக் காரணமாக இருப்பது தற்கொலைகள்தான். ஆனால், இங்கு தற்கொலைகள் தொடர்பான ஆய்வுகள் மிகக் குறைவாகவே உள்ளன. மற்றவற்றைக் காட்டிலும் அதிகளவில் பொதுக் கவனத்தை ஈர்க்கும் விவசாயிகளின் தற்கொலையை எப்படி முன்கூட்டியே தடுக்க இயலும் என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

ஆண்கள் தற்கொலை விகிதத்தில் ஏன் கடந்த 30 ஆண்டுகளாக மாற்றம் ஏற்படவில்லை என்பதை ஆராய வேண்டும். ‘ஆண்கள் தற்கொலையில் அதிகம் பாதிக்கப்படக்கூடிய வயதினராக இளம் வயதினரே உள்ளனர். தற்கொலையிலிருந்து விடுவிக்கத் திருமணம் அவர்களுக்குப் பாதுகாப்பானதாக இருப்பதாகத் தெரியவில்லை’ என்றும் லேன்செட் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

ஆண்களுக்கு மன அழுத்தம் ஏற்படும்போதும், உணர்ச்சிகரமான பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போதும் அவர்களுக்கு உதவி தேவைப்படுகிறது. “மனிதன் தனது சொந்த வாழ்வை இடையூறு இல்லாமல் எடுத்துச் செல்ல ஏராளமான வழிகள் உள்ளன” என்கிறார் டண்டோனா.

2017ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட தேசிய மனநலச் சட்டம் மனநல சிகிச்சை வசதிகளை அதிகரித்து, தற்கொலைகள் விகிதத்தைக் குறைக்குமென்று லேன்செட் ஆய்வு எதிர்பார்க்கிறது. பூச்சிக்கொல்லிகள்தான் மிகப் பெரும்பான்மையாகத் தற்கொலை செய்துகொள்ளப் பயன்படுத்தும் பொருளாக உள்ளது. எனவே, பூச்சிக்கொல்லிகள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த வேண்டிய தேவை மிக அதிகமாக உள்ளது. ஆல்கஹால் விற்பனையை ஒழுங்குபடுத்துவதும் தற்கொலைகளைக் குறைக்கும்.

“மன அழுத்தம் உடையவர்கள் மற்றும் தனிமையில் இருப்பவர்களுக்குப் பொது மருத்துவர்களைக் கொண்டு பயிற்றுவிக்கலாம். பள்ளி அளவில் தற்கொலைகள் குறித்துப் பயிற்றுவித்தால் தனிப்பட்ட சச்சரவுகளுக்குத் தீர்வு காணலாம். இதன்மூலம் கோபம் உள்ளிட்ட உணர்ச்சிவயப்பட்ட நிலைகளை எளிமையாகக் கையாளலாம்” என்கிறார் விஜயகுமார்.

“தற்கொலைகளைத் தடுக்க ஒரு தேசிய நல முன்னுரிமைத் திட்டத்தை அறிவித்துச் செயல்பட வேண்டும்” என்கிறார் விக்ரம் படேல். இவர் ஹார்வர்டு ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் அமைப்பில் உலக சுகாதாரம் மற்றும் மக்கள்தொகை துறை பேராசிரியராக உள்ளார். 2014-இந்தியத் தற்கொலைகள் ஆய்வை எழுதியவர்களில் இவரும் ஒருவராவார். தற்கொலைகளைத் தடுக்க அமைச்சரவை ஆணையம் ஒன்றை அமைக்க முன்னுரிமை அளிக்க வேண்டுமென்றும், தற்கொலைகளைக் குறைக்க உத்திகளை மதிப்பீடு செய்து அதனைச் செயல்படுத்தி இறப்புகளைக் குறைக்க வேண்டுமென்றும் இவர் வலியுறுத்துகிறார்.

கடந்த 10 ஆண்டுகளில் சீனாவும், இலங்கையும் தற்கொலைகளைப் பெருமளவு கட்டுப்படுத்தியுள்ளன. இந்தியா அவர்களின் செயல்பாடுகளை உத்வேகமாகக் கொண்டு தற்கொலைகளைக் கட்டுப்படுத்தலாம் என்று படேல் கூறுகிறார்.

நன்றி: இந்தியா ஸ்பெண்ட்

கட்டுரையாளர்: இந்தியா ஸ்பெண்ட் ஊடகத்தின் முதன்மை நிருபர், டெல்லியைச் சேர்ந்தவர், பொது சுகாதாரக் கொள்கைகள் குறித்து எழுதும் சுகாதாரப் பத்திரிகையாளர்.

தமிழில்: ர.பிரகாசு

நேற்றைய கட்டுரை: ரிசர்வ் வங்கியுடன் அரசின் மோதல் தீருமா?

மின்னஞ்சல் முகவரி: [email protected]

புதன், 14 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon