மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 5 டிச 2020

கைதிகளுக்கு சிகிச்சை: உயர் நீதிமன்றம் உத்தரவு!

கைதிகளுக்கு சிகிச்சை: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சிறைகளில் உள்ள மனநல பாதிப்பு உள்ளிட்ட நோய்வாய்ப்பட்ட கைதிகளுக்கு சிகிச்சை வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் எனத் தமிழக சுகாதாரத் துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறைகளில் கைதிகள் மரணமடைவது தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டு தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என அனைத்து மாநில உயர் நீதிமன்றங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கில், அரசு தரப்பில் தாக்கல் செய்த அறிக்கையில் திருப்தி அடையாத உயர் நீதிமன்றம், சிறைகளில் ஆய்வுசெய்து அறிக்கை அளிக்க நீதிமன்றத்துக்கு உதவியாக மூத்த வழக்கறிஞர் வைகை என்பவரை நியமித்து உத்தரவிட்டது.

அவர் தாக்கல் செய்த அறிக்கையில், கைதிகளுக்கு மருத்துவ வசதிகள் பெறுவதில் சிக்கல் இருப்பதாகவும், காவல் துறையினர் பாதுகாப்புப் பணிக்காக காவலர்களை அனுப்புவதில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (நவம்பர் 13) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சிறைகளில் மனநலம் பாதிக்கப்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டதாகவும், மனித உரிமை ஆணைய உத்தரவின்படி அவர்களை விடுதலை செய்ய வேண்டும் அல்லது சிகிச்சை அளிக்க வேண்டும் என வழக்கறிஞர் வைகை வாதிட்டார்.

மேலும், சிறை விதிகளின்படி சிறைகளில் உள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட அளவுகளில் குழுக்கள் அமைக்க வேண்டும் என்றும் தமிழகத்தில் அதுபோன்று எந்தக் குழுக்களும் இல்லை என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், தமிழகச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள மனநலம் பாதிப்பு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்குவது குறித்து பரிசீலிக்கும்படி தமிழக சுகாதாரத் துறை செயலாளருக்கு உத்தரவிட்டார். இதுகுறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை டிசம்பர் 13ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

செவ்வாய், 13 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon