மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 1 ஜுன் 2020

பரியேறிய தனுஷ்

பரியேறிய தனுஷ்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான முதல் படம் பரியேறும் பெருமாள். பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்‌ஷன்ஸ் மூலம் தயாரித்த இந்தப் படம் தென்மாவட்டத்தில் நிகழும் சாதியக் கொடுமைகளைச் சமரசமின்றி பதிவு செய்தது. ரசிகர்களிடையேயும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்ற இத்திரைப்படம் ஐம்பது நாள்களைக் கடந்து தற்போதும் திரையரங்குகளில் ஓடிவருகிறது.

திரைத் துறையினர் பலரும் தொடர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்து வந்த நிலையில் தனுஷ் தற்போது படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்ததோடு முக்கிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

“இறுதியாக பரியேறும் பெருமாள் படத்தைப் பார்த்துவிட்டேன். அட்டகாசமாக உள்ளது. அசலான வாழ்க்கை முறையை மிகவும் யதார்த்தமாக கண்முன் பார்ப்பது போன்ற உணர்வைக் கொடுத்துள்ளது. ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துகள்” என்று தெரிவித்ததோடு தனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.

“மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்தில் நான் நடிக்கிறேன். வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அவரைப் போன்ற திறமையான இயக்குநருடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்.

வெற்றிமாறன், செல்வராகவன் போன்ற முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடித்துவருகிறார் தனுஷ். அதோடு கச்சிதமான திரைக்கதை கொண்டு சுவாரஸ்யமான திரைமொழியில் படங்களை இயக்கி கவனம்பெறும் இளம் இயக்குநர்களின் படங்களிலும் அவர் தொடர்ந்து ஒப்பந்தமாகி வருகிறார். அண்மையில் வெளியாகி கவனம் பெற்ற ராட்சசன் திரைப்படத்தை பாராட்டிய தனுஷ் அந்தப் படத்தின் இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார். தற்போது மாரி செல்வராஜுடன் அடுத்த படத்தில் நடிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மாரி செல்வராஜைப் பொறுத்தவரை அவரது இரண்டாவது படத்திலேயே தனுஷ் போன்ற முன்னணி நடிகர்கள் ஒப்பந்தமாகியிருப்பது அவரது திரைப்பயணத்திலும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

இது குறித்து இயக்குநர் ரஞ்சித், “மிக அற்புதமான செய்தி. அண்ணன் கலைப்புலி தாணு அவர்களின் அரவணைப்பில், தன் மிகச்சிறந்த நடிப்பில் சிறக்கும் தனுஷ் அவர்களை இயக்கும் பொறுப்பை ஏற்ற தம்பி மாரி செல்வராஜுக்கு என் இதயம் கனிந்த அன்பும்! வாழ்த்துகளும்! பெரும் மகிழ்ச்சி!” என்று பதிவிட்டுள்ளார். ரஞ்சித் இயக்கிய கபாலி படத்தைத் தாணுவும், காலா படத்தை தனுஷும் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 13 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon