மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 26 மே 2020

அப்போது சென்னையில் நிலம் என்று எதுவும் இருக்காது!

அப்போது சென்னையில் நிலம் என்று எதுவும் இருக்காது!

நரேஷ்

சிறப்புத் தொடர்: சென்னைக்குச் செய்ய வேண்டியவை - 19

சிங்காரச் சென்னை என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம்? சிங்காரம் என்ற சொல்லுக்கு 'குப்பையான', 'சுகாதாரமற்ற அசிங்கமான' என்று நிச்சயமாக அர்த்தம் கொள்ளப்படுவதில்லை. அப்படிப் பார்த்தால் சென்னையை அந்த அடைமொழியுடன் அழைப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. சிங்காரம் என்றால் அது சிங்கப்பூர்தான். மழைநீர் சேகரிப்பில் மட்டுமல்ல, நகரத்தைக் குப்பையற்றதாக, இயற்கையைச் சீரழிக்காத நகரமாகப் பாதுகாப்பதிலும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது சிங்கப்பூர்.

உதாரணமாக, சிங்கப்பூர் மாநகரில் அமைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளின் எண்ணிக்கை ஒன்பதாயிரம். 721.5 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இருக்கும் சிங்கப்பூர் மாநகரத்தில் உலவிக் கொண்டிருக்கும் ஒரு மனிதரின் கையில் குப்பை இருக்கிறதென்றால், அவர் 150 மீட்டர் நடந்தால் ஒரு குப்பைத் தொட்டியைக் கண்டடையலாம். அதாவது, ஒவ்வொரு சதுர கிலோமீட்டருக்கும் 13 குப்பைத்தொட்டி. அம்மாநகர மக்களும் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்படுகின்றனர். சிங்கப்பூரின் எந்த மூலையிலும் குப்பைக் கிடங்கையோ, நிரம்பி வழியும் தொட்டிகளையோ பார்க்க முடியாது. அப்படியிருக்கும்போது, வெறும் 426 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் விரிந்திருக்கும் சென்னை மாநகராட்சியில் இத்திட்டம் ஏன் சாத்தியப்படவில்லை?

குப்பைகளைச் சேகரிக்க மக்களுக்கு எட்டும் வகையில் குப்பைத் தொட்டிகளை வைப்பதும், அவற்றை முறையாக அப்புறப்படுத்துவதும் எவ்வளவு சுலபமான ஒரு செயல்திட்டம்! குப்பைகளைச் சேகரிக்க இதைவிட வேறொரு நவீன தொழில்நுட்பத்திற்கு என்ன தேவை இருக்கிறது? தெருவுக்கு ஒரு குப்பைத் தொட்டியைக்கூட ஒழுங்காகப் பராமரிக்காமல், சுகாதாரத் துறை சார்பாக சென்னை மாநகராட்சியில் குப்பைகளை அப்புறப்படுத்துவதற்கு மட்டும் 20 கோடி ரூபாய் கணக்கு காட்டுவதை எந்தக் கணக்கில் எடுத்துக்கொள்வது?

குப்பைகளைக் கையாள சிங்கப்பூர் செய்யும் சின்னச் சின்ன செலவற்ற செயல்கள்தான் நமக்கான முதன்மைப் பாடம். நம் நகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் தனித்தனியாக ஆங்காங்கே சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்துவதற்குப் பதிலாக ஒட்டுமொத்தமாக ஒரே இடத்தில் குவிக்கப்பட்டு சீரழிவை ஏற்படுத்துகின்றன. அவ்வளவுதான் வித்தியாசம்!

நம் வீதிகளிலிருந்து குப்பைகளை அப்புறப்படுத்துவதே மிகப்பெரிய வேலை என்று விளக்குபவர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி. நம்மால் உருவான குப்பை, குப்பை என்ற நிலையிலிருந்து மாறும் வரையிலும் அவற்றில் நம் கைரேகை இருக்கும். அவற்றால் ஏற்படும் அழிவில் நம் பங்கு இருக்கும்.

குப்பைகளைத் தீவாக மாற்றிய திறமைசாலிகள்!

வீடுகளிலிருந்து குப்பைகளைச் சிதறாமல் சேகரிப்பது பெரிய வேலை என்றால், சேகரிக்கப்படும் குப்பைகளை அப்புறப்படுத்துவது மிக முக்கியமான வேலை. குப்பைகளைக் கொண்டு போய், ஊருக்கு வெளியில் பல கிலோமீட்டர் பரப்பளவில் இருக்கும் ஒரு குப்பைக் கிடங்கிலோ, நீர்நிலைகளிலோ கொட்டிவிடும் நம் அரசாங்க நாயகர்களுக்கு, சிங்கப்பூர் சொல்ல விரும்பும் செய்தி, "நீங்கள் செய்வது வீண் வேலை என்பதுதான்". அவர்களின் அப்புறப்படுத்தல் நடவடிக்கை சுலபமானதும் சுகாதாரமானதும் ஆகும். அவர்களும் கடலில்தான் குப்பைகளைக் கொட்டுகின்றனர். ஆனால், சின்ன வித்தியாசம் - நம் குப்பைகள் கடலை அழிக்கின்றன. அவர்களது குப்பைகள் கடலை வளமாக்குகின்றன. எப்படி இது சாத்தியமானது?

அவர்கள் செய்ததெல்லாம் இதுதான். கடலின் கரை பகுதியின் அருகில் ஒரு பகுதியைத் தேர்ந்தெடுத்து, அவற்றைச் சுற்றி மண்ணால் தடுப்பை எழுப்பினர். அதாவது கடலுக்குள் ஒரு சிறு குளம். அக்குளத்திற்குள் சேகரிக்கப்பட்ட குப்பையின் 'Digest Form'-ஐ கொட்டுகிறார்கள். அதாவது குப்பைகளைச் சேகரித்துவந்து, பாதுகாப்பான முறையில் எரித்து, அந்த சாம்பலைக் கொட்டி ஒரு தீவை உருவாக்கி இருக்கின்றனர். ஆம், முழுக்க முழுக்க குப்பைகளால் ஆன ஓர் அழகிய தீவு! வெறும் குப்பைத் தொட்டிக்கு அருகில் சென்றாலே துர்நாற்றம் கமழும் நம்மூரில், குப்பையால் ஆனது தீவைப் பற்றிய பார்வை எப்படியிருக்கும் என்று தெரியும்.

ஆனால், ஆச்சரியம் என்னவென்றால், சிங்கப்பூரில் இருக்கும் இந்தக் குப்பைத் தீவில்தான் திருமணப் புகைப்படங்கள் எடுக்கப்படும். அது மக்களுக்கான ஒரு சுற்றுலாத்தலம்! அப்படியென்றால் அந்தத் தீவின் தன்மையையும் சுகாதாரத்தையும் கற்பனை செய்து பாருங்கள்! இதற்காக அவர்கள் பெரிய தொழில்நுட்பங்களையெல்லாம் பயன்படுத்தவில்லை. சேகரிக்கப்பட்ட குப்பைகளைச் செரித்துப் புதைக்கின்றனர். அவ்வளவுதான்! அதுவும் செரித்தல் - எனும் நிலையில் குப்பைகளை எரிக்கும்போது காற்று மாசுபாடு ஏற்படாமல் இருக்க, வெளியேறும் புகையை 'Filter' மூலம் கார்பனை வடிகட்டி காற்றை வெளியிடுகின்றனர். அந்த வடிகட்டப்பட்ட கார்பனை மறுபயன்பாடு செய்கின்றனர்!

இதனால் கடலுக்கு எதுவும் ஆபத்திருக்கிறதா என்றால், இல்லை. இத்தீவிலிருந்து வெறும் 30 மீட்டர் தொலைவில் ஒரு மீன் பண்ணை செழிப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. மீன்களுக்கோ, வேறு எந்த கடல்வாழ் உயிருக்கோ எந்த ஆபத்தும் இல்லை.

மேலும் ஆச்சரியமாக, செரிக்கப்பட்ட குப்பைகளை உணவாக்கி வாழும் பூச்சிகள், அவற்றை உண்ண வரும் பறவைகள், மிருகங்கள் என்று சூழலை வளமாகப் பாதுகாக்கிறது இந்த குப்பைத் தீவு.

குப்பைகளுக்கு இவ்வளவு முக்கியத்துவமா என்று தோன்றுகிறதா? நம் சென்னையில், ஒரு நாளைக்குச் சராசரியாக 4,500 டன்கள் திடக்கழிவுகள் உற்பத்தி ஆகின்றன. இந்தக் கழிவுகளை ஏறத்தாழ 469 ஏக்கர்களில் தொடர்ந்து கொட்டிக்கொண்டிருக்கிறோம். 35 ஆண்டுகளில், இந்நிலம் முற்றிலும் பாழாகிவிட்ட பிறகு, வேறு நிலத்திற்குச் செல்வோம். அப்போது நிலம் என்ற ஒன்றே இருக்காது.

குப்பைகளை வைத்து புதிதாக ஓர் உலகம் உருவாக்கப் போகிறோமா அல்லது குப்பைகளால் நிலத்தை அழித்து, அகதிகளாகப் போகிறோமா?

(தீர்வை நோக்கிய தேடல் தொடரும்..)

முந்தைய கட்டுரை: சென்னைக்காக அல்ல; உங்களுக்காக இதைச் செய்யுங்கள்!

வெள்ளி, 16 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon