மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 14 நவ 2018

சிறப்புக் கட்டுரை: மோடியா, லேடியா? - மீண்டும் ஒலிக்க வேண்டிய கோஷம்!

சிறப்புக் கட்டுரை: மோடியா, லேடியா? - மீண்டும் ஒலிக்க வேண்டிய கோஷம்!

தனியன்

நடந்து முடிந்திருக்கும் அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளிலிருந்து காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைமைகள் கற்க வேண்டிய முக்கியப் பாடங்கள் இரண்டு.

அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு ஈடுகொடுக்கும் விதமாக இன்றைய நிலையில் எதிர்த் தரப்பில் வசீகரம் மிக்க, அமெரிக்கா தழுவிய அளவிலான தேசிய ஆளுமை இல்லை. தேர்தலுக்கு முன்புவரை பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி ஆட்களிடம் அது குறித்த பெரும் கவலையும் ஆழமான வருத்தமும் உள்ளுக்குள் இருந்தது.

எதிர்க்கட்சிகளுக்கு இன்ப அதிர்ச்சி

ஆனால், தேர்தலில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளில் ஓர் அவையை எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் ஜனநாயகக் கட்சி அறுதிப் பெரும்பான்மையோடு கைப்பற்றி ட்ரம்புக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறது. வசீகரமான ஆளுமை மிக்க பராக் ஒபாமா அதிபராக இருந்தபோது அவர் கட்சியிடமிருந்து பறிபோன அமெரிக்க நாடாளுமன்றக் கீழவை இப்போது மீண்டும் ஜனநாயகக் கட்சியின் கைக்கு வந்திருப்பது அமெரிக்க அரசியலில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திவருகிறது.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ட்ரம்பின் குடியரசுக் கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை இருந்ததால் கடந்த இரண்டு ஆண்டுகளில் அவரை யாராலும் தட்டிக் கேட்க முடியவில்லை. அவர் நினைத்ததே சட்டம்; வைத்ததே திட்டம்; சொன்னதே ஆணை என்கிற ஆணவ ஆட்சியை நடத்தினார். இனி அது நடக்காது. ஜனநாயகக் கட்சி அவரது ஒவ்வொரு நடவடிக்கையையும் எதிர்க்கும். நாடாளுமன்றக் கீழவையின் பெரும்பான்மையைப் பயன்படுத்தி ட்ரம்பின் பதவியைப் பறிக்கும் முயற்சியிலும்கூட அந்தக் கட்சியால் ஈடுபட முடியும் என்கிறார்கள் திறனாய்வாளர்கள்.

இப்படியானதொரு தேர்தல் முடிவு வந்ததற்கான முக்கியக் காரணங்களாக இரண்டு அம்சங்களை முன்வைக்கிறார்கள் அரசியல் திறனாய்வாளர்கள். ஒன்று நாடு முழுமைக்குமான ஒற்றைத் தலைமையோ அவரது "ஆளுமையையோ" குறித்து அதிகம் கவலைப்படாமல் ஜனநாயகக் கட்சியின் தரப்பில் உள்ளூர் மட்டங்களில் - அதாவது தொகுதிகளில் - அந்தந்த ஊரின் முக்கியமான வாக்காளர் குழுக்கள் களத்தில் ஒன்றிணைந்து செயற்பட்டன.

குறிப்பாக அமெரிக்க வாக்காளர்களில் ஐம்பத்தி இரண்டு சதவிகிதத்துக்கும் அதிகமான பெண் வாக்காளர்களைக் குறிவைத்து அதிக அளவில் பெண் வேட்பாளர்களை நிறுத்தியது எதிர்க்கட்சி. இப்படிப் பெண்களை முதன்மைப்படுத்திய தேர்தல் அணுகுமுறை எதிர்க்கட்சிகளின் வெற்றிக்கான முக்கியக் காரணியாகப் பார்க்கப்படுகிறது.

இரண்டாவது, அந்த ஊரின் மருத்துவச் சேவையை ஓரளவு அனைவருக்கும் பயன்படக்கூடிய மருத்துவச் சேவையாக மாற்றும் வகையில் ஒபாமா கொண்டுவந்த ஒபாமா கேர் என்னும் குறைந்த செலவிலான மருத்துவக் காப்பீட்டுச் சேவைத் திட்டத்தை மாற்றுவதற்கு அதிபர் ட்ரம்ப் எடுத்த முயற்சியின் பாதிப்புகளை எதிர்க்கட்சிகள் இந்தத் தேர்தலில் முக்கிய விவாதப் பொருளாக்கியதும் இந்தத் தேர்தல் முடிவுகளுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

இருமுனை வியூகம்

ஐம்பது சதவிகிதத்துக்கும் அதிகம் இருக்கும் பெண்களைக் குறிவைத்துத் தேர்தல் வியூகம் அமைத்ததும் சாமானிய மக்களைப் பாதிக்கும் அடிப்படைப் பிரச்சினைகளை பிரச்சாரத்தின் முதன்மையான பிரச்சினையாக மாற்றியதும்தான் எதிர்க்கட்சிகளின் இந்தத் தேர்தல் வெற்றிக்கு முக்கியக் காரணம் என்பது விமர்சகர்களின் கருத்து.

இந்த அணுகுமுறையை காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைமைகள் தேசிய அளவிலும் மாநில அளவிலும் கைக்கொள்வது சரியாக இருக்கும் என்பதே அவர்களின் யோசனையாக இருக்கிறது.

குறிப்பாகப் பட்டப்படிப்பு படித்த பெண்கள்தான் அமெரிக்காவில் ட்ரம்புக்கு எதிரான வாக்காளர்களாகப் பெருமளவில் அணி திரண்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சென்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிகம் அலட்டிக்கொள்ளாத இந்தப் படித்த நகர்ப்புறப் பெண் வாக்காளர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிபர் ட்ரம்ப் நடந்துகொண்ட விதத்தைப் பார்த்து அவரது பெண் எதிர்ப்பு அரசியல் அணுகுமுறையால் கோபமடைந்து அவருக்கு எதிரான பெரும் சக்தியாக ஒன்று திரண்ட தொகுதிகளில் ட்ரம்ப் கட்சி மிக மோசமாகத் தோற்றிருக்கிறது. அதுவும் அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் அதிக வாக்குகள் வாங்கி வென்ற தொகுதிகளின் பெண்களே இந்தத் தேர்தலில் அவர் கட்சியின் வேட்பாளர்களைத் தோற்கடித்திருக்கிறார்கள்.

இந்தியப் பெண்களின் நிலை

ஏறக்குறைய இந்தியப் பெண்களின் நிலைமையும் அதுவாகவே இருப்பதாகத் தோன்றுகிறது. மோடியின் இந்துத்துவ அரசியலால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் இந்தியாவின் பெண்களாகவே இருக்கிறார்கள், இருப்பார்கள் என்பதை தனியாக விளக்கத் தேவையில்லை. இந்தியப் பெண்களின் சுயாதீனம், சுதந்திரம், பணியிட உரிமை, முன்னேற்றம், சுயமரியாதை எல்லாமே மோடியின் இந்துத்துவ அரசியலால் அதிகம் பாதிக்கப்படுகின்றன என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டியது காங்கிரஸ், திமுக உள்ளிட்ட இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைமைகளின் கடமை.

அதற்கு அவர்கள் தங்கள் தேர்தல் வியூகங்களில் பெண்களுக்குரிய இடத்தை, அவர்களுக்கான முக்கியத்துவத்தை, வேட்பாளர் எண்ணிக்கை முதல் தேர்தல் வாக்குறுதிகள் வரை அதிகப்படுத்தி செயலில் காட்ட வேண்டும்.

மோடி அரசு முன்வைக்கும் வலதுசாரி அதிதீவிர இந்துத்துவ அரசியல் என்பது கல்வி கற்றுச் சொந்தக் காலில் நிற்கத் துடிக்கும் இளம் தலைமுறை இந்திய பெண்களின் சுயாதீனத்தன்மைக்கும் சுதந்திரமான முன்னேற்றத்துக்கும் சுயமரியாதைக்கும் பெரிய தடை என்பதை விளக்க காங்கிரஸும் திமுகவும் பெரிதாக மெனக்கெடத் தேவையில்லை.

மோடி ஆட்சியில் பெண்கள் சந்திக்காத பிரச்சினை என்று ஒன்றில்லை. நேரடியாகப் பெண்கள் பாதிக்கப்படாத துறை எதுவும் பாக்கியில்லை.

சபரிமலை விவகாரம் முதல் சமையல் எரிவாயு, இமாலய விலையேற்றம் வரை; அனிதாக்களை பலி வாங்கிய நீட் தேர்வு திணிப்பு முதல் காதலர் தின எதிர்ப்பு என்கிற பெயரில் இளம் பெண்களுக்கு எதிராக ஆண்டுதோறும் கட்டவிழ்த்துவிடப்படும் காவிகளின் காலித்தனம் வரை; எட்டு வழிச் சாலை என்கிற பெயரில் வயதான ஏழைப் பெண்களைக் கைது செய்வது முதல் ரேஷன் பொருட்களில் நிலவும் நிரந்தரத் தட்டுப்பாடு வரை மோடி அரசின் நடவடிக்கைகள் எப்படியெல்லாம் பெண்களையும் அவர்களின் குடும்பங்களையும் ஏற்கெனவே பாதித்துக் கொண்டிருக்கின்றன என்பதையும் அடுத்த தேர்தலில் மோடி மீண்டும் வந்தால் இந்தப் பாதிப்புகள் இன்னும் மோசமடையும் என்பதையும் நினைவூட்டினாலே போதும்.

சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் மறைந்த தமிழ்நாட்டு முதல்வர் ஜெ.ஜெயலலிதா ‘மோடியா, லேடியா’ என்று ஒரு கோஷத்தை முன்வைத்தார். ஒட்டுமொத்த தமிழ்நாடும் மோடி வேண்டாம்; லேடியே வேண்டும் என்றது. அவரது கட்சி 40 இடங்களில் வென்றது.

ஜெயலலிதா தன்னைப் பிரதமராக்கிக் கொள்ளவைத்த தன்னல கோஷம் அது. அதில் எந்தப் பொதுநலனும் இல்லை. அதே கோஷத்தை இந்திய எதிர்க்கட்சிகள் அடுத்த தேர்தலில் இந்திய / தமிழகப் பெண்கள் அனைவருக்குமான பொது கோஷமாக மாற்ற வேண்டும். அப்படி மாற்றினால் மோடி கண்டிப்பாகத் தோற்பார்.

இந்திய லேடிகளைப் பெருமளவில் அணி திரட்டினால் மட்டுமே இந்திய எதிர்க்கட்சிகளால் மோடியைத் தோற்கடிக்க முடியும்.

இந்துத்துவ அரசியலுக்கும் இந்தியாவின் இளம் தலைமுறைப் பெண்களுக்குமான இடைவெளி மிக மிக அதிகம். காரணம், இரண்டும் நேர் எதிர் துருவங்கள் என்பதே யதார்த்தம். இரண்டுக்கும் இடையில் நிலவும் அந்த முரணை இந்திய எதிர்க்கட்சிகள் எப்படித் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ளப்போகின்றன, அதற்கு என்ன செய்யப்போகின்றன என்பதே இப்போதைய கேள்வி.

அமெரிக்க அரசியலின் ஆணாதிக்கத்தின் ஒட்டுமொத்த வடிவமாக வர்ணிக்கப்படும் ட்ரம்பைத் தோற்கடித்ததில் அந்நாட்டுப் பெண்களே பெரும் பங்காற்றியிருக்கிறார்கள். இந்திய அரசியல் நிலவரமும் ஏறக்குறைய அத்தகையதே.

மோடிக்கும் அதிதீவிர இந்துத்துவ அரசியலுக்கும் பெண்கள் என்றாலே ஆகாது. அப்படிப்பட்ட பெண்களே இந்த இருதரப்புக்கும் எதிரான அரசியல் சமரில் பிரதான ஆயுதமாக மாற வேண்டும் அடுத்த தேர்தலில்.

போர்க்களத்தில் சொந்த வலிமையை அதிகரித்துக்கொள்வதோடு எதிரியின் பலவீனத்தை அறிந்து தாக்குபவனே இறுதியில் வெல்வான் என்பது பொது விதி.

அமெரிக்க அரசியலில் வெள்ளை இனவாத ஆணாதிக்கத்தைத் தோற்கடித்துக்காட்டிய பெண்களே இந்தியாவின் பிராமணிய இந்துத்துவ ஆணாதிக்கத்தையும் தோற்கடிக்க வல்லவர்கள். இந்தியப் பெண்களை அதற்காக அணிதிரட்ட வேண்டியது எதிர்க்கட்சிகளின் கடமை.

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

2 நிமிட வாசிப்பு

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

புதன் 14 நவ 2018