மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 5 டிச 2020

ரஜினி சொன்னால் அர்த்தம் இருக்கும்!

ரஜினி சொன்னால் அர்த்தம் இருக்கும்!

ரஜினிகாந்த் எந்த விஷயத்தைச் சொன்னாலும் அதில் ஆழ்ந்த அர்த்தமிருக்கும் என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்திடம் பாஜகவுக்கு எதிரான மெகா கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “பாஜக ஆபத்தான கட்சி என்று அவர்கள் (எதிர்க்கட்சிகள்) நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அப்படியென்றால் கண்டிப்பாக அப்படித்தானே இருக்கும்” என்று பதில் கூறியிருந்தார். எழுவர் விடுதலைத் தொடர்பான கேள்விக்கு, எந்த ஏழு பேர் என்று பதில் கேள்வி எழுப்பினார். இதையடுத்து பாஜகவை ஆபத்தான கட்சி என ரஜினி கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இது தொடர்பாக தமிழிசை கூறும்போது, “செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளை ரஜினி சரியாக உள்வாங்காததால் இன்னொரு முறை கேட்டால் நன்றாக இருக்கும். மீண்டும் ஒருமுறை கேள்விகளைக் கேட்டால் ரஜினி வேறு பதிலை அளிப்பார்” என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “பாஜகவைத் தோற்கடிக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளன. அப்படியெனில் பாஜக ஆபத்தான கட்சியா என்றும் என்னிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். எதிர்க்கட்சிகள் அப்படி நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் என்னுடைய பதில். எதிர்க்கட்சிகள் அப்படி நினைக்கும்போது பாஜக அவர்களுக்கு ஆபத்தான கட்சிதானே” என்று விளக்கம் அளித்தார். தன்னுடைய கருத்து திரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக கன்னியாகுமரியில் நேற்று (நவம்பர் 13) செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், “எந்த விஷயத்தையும் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று பேசக்கூடியவர் அல்ல ரஜினிகாந்த். ஒரு விஷயத்தை அவர் சொல்கிறார் என்றால், அதில் ஆழ்ந்த அர்த்தம் இருக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அவர் சொல்லியுள்ள விஷயங்கள் ஆழ்ந்த பொருள் பொதிந்த ஒன்று. பத்து பேருக்கும் நன்றாகத் தெரியும். தங்களால் தனித்தனியாக அவரை வெல்ல முடியாது என்று. அதனால், 10 பேர் சேர்ந்து ஒருவரை எதிர்க்கிறார்கள். தற்போது அந்தப் பத்தை இருபது ஆக்க முயற்சி செய்வார்கள். எத்தனைப் பேர் வந்தாலும் அவர்களை அந்த ஒற்றை மனிதர் நிச்சயம் வெல்வார்” என்று தெரிவித்தார்.

மேலும், பாஜகவோடு உறவு வைத்து லாபம் அடைந்தவர்கள் பாஜகவை விமர்சிக்கிறார்கள். பாஜக ஆபத்தான கட்சி என்று ரஜினி சொல்லியிருக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்த பொன்.ராதாகிருஷ்ணன், “ஏழு பேர் விடுதலையில் ஆளுநர் எடுக்கும் முடிவே பாஜகவின் நிலைப்பாடு” என்றும் குறிப்பிட்டார்.

செவ்வாய், 13 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon