மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 4 ஜுன் 2020

மீச்சிறு காட்சி - 17: மினிமலிசம் ஒரு வாழ்வியல்!

மீச்சிறு காட்சி - 17: மினிமலிசம் ஒரு வாழ்வியல்!

சந்தோஷ் நாராயணன்

கலையோடு வாழ்வை இணைத்துப் பேசும் சிறப்புத் தொடர்

மினிமலிசம் என்பது வெறும் ஒரு கலைப் பாணி மட்டுமல்ல; அது ஒரு வகையான வாழ்வியல் முறை. ‘போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து’ என்று ஊரில் சொல்வார்கள் இல்லையா? இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் “எளிமை” என்றே சொல்ல வேண்டும். ஆம் ‘மினிமலிச லைஃப் ஸ்டைல்’ என்பதன் சாரம் “எளிமையே வலிமை”.

அறுபதுகளில் கலை உலகில் ஆரம்பித்த மினிமலிசம் என்கிற கோட்பாடு இன்று அதைத் தாண்டி ஒரு வாழ்வியல் முறையாகப் பரிணமிக்கக் காரணம். இன்றைய நுகர்வு உலகம். அதீத நுகர்வினால் வேட்டையாடப்படும் இயற்கை வளங்கள். அதற்காக இயந்திரத்தனமாக உழைக்கிற மனித உடல்கள். தொழிற்மயமாக்கலும் சந்தை மயமாக்கலும் உச்சக்கட்டத்தை அடைந்து விட்ட இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டு பூமி அதீத நுகர்வின் ஒரு வேட்டைக்காடு. இதற்கான எதிர்வினைகளும் மனித சமூகத்தில் எழுந்து வருவது இயல்பு. அதில் ஒன்றுதான் மினிமலிச வாழ்வியல்.

ஜோஷ்வா ஃபீல்ட்ஸ் மில்பர்ன் (Joshua Fields Millburn), ரயான் நிகோடமஸ் (Ryan Nicodemus) ஆகிய இருவரும் இன்று உலகம் திரும்பிப்பார்க்கும் மினிமலிச வாழ்வியலாளர்கள். அமெரிக்கர்களான இருவரும் கார்ப்பரேட் கம்பெனிகளில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டில் கட்டி எழுப்பப்பட்ட அமெரிக்கக் கனவு என்னும் நுகர்வு மாயையைத் தக்கவைக்க இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் போராடிக்கொண்டிருக்கும் வழக்கமான பிரஜைகளில் இருவர். மனிதனின் மகிழ்ச்சி என்பது ஆறு இலக்க சம்பளம், சொந்தமாக அபார்ட்மென்ட், கார், கணக்கில்லாமல் வாங்கி குவிக்கும் நுகர்வு சாதனங்களில் இருக்கிறது என்பதில் வழக்கம் போல நம்பிக்கை கொண்டிருந்தவர்கள்தான் இந்த இருவரும்.

ஆனால், இருவரும் ஒருகட்டத்தில் இந்த இரவு பகல் ரன்னிங் ரேஸிங்கில் இருந்து சலித்து விலகியபோது அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை. அப்போது அவர்கள் கண்டடைந்த வழி “மினிமலிசம்”.

தேவைக்கு மிஞ்சிய எதையும் சுமக்கத் தயாரில்லை என்று அவர்கள் முடிவெடுத்தபோது வாழ்க்கை இலகுவாக, மகிழ்ச்சியாக மாறியதைக் கண்டார்கள். இவர்கள் இருவரையும் இணைத்த புள்ளியாகிய மினிமலிசம் என்னும் பார்வையைப் பிறரோடும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்கிற பயணத்தில் இப்போது உலகம் சுற்றுகிறார்கள்.

“Less is more” என்பது மினிமலிசத்தின் தாரக மந்திரம் அல்லவா. மினிமலிச வாழ்வியல் முறை பற்றிச் சொல்லும்போது இவர்கள் கூட்டாகச் சொன்ன ஒரு விளக்கம் எனக்குச் சுவாரஸ்யமாகவும் முக்கியமாகவும் பட்டது. “மினிமலிசம் என்றாலே எல்லோரும் நினைக்கிறார்கள், நம்மிடம் இருக்கும் எல்லாவற்றையும் குறைத்துக்கொள்வது என்று. உடை, கருவிகள். நுகர்வுப் பொருட்கள் என்று எல்லாவற்றையும். Always make less. ஆனால், நாங்கள் சொல்கிறோம் மினிமலிச வாழ்வியல் உங்களுக்கு வாழ்க்கையில் பலவற்றைப் பெருக்கிக்கொள்ளும் வாய்ப்பைத் தருகிறது. நிறைய நேரம், நிறைய படைப்புத்திறன், நிறைய சுதந்திரம். தேவையற்றதும் ஆடம்பரமானதும் உங்கள் மீது திணிக்கப்படுபவையுமான பொருட்களைச் சேர்த்துக்கொண்டே இருக்கும் இந்த நுகர்வுக் கலாச்சார வாழ்க்கைக்காக உழைப்பதின் மூலமும் ஓடிக்கொண்டே இருப்பதன் மூலமும் நீங்கள் இழப்பது உங்கள் நேரத்தையும் சுதந்திரத்தையும் படைப்புத்திறனையும்தான். மினிமலிச வாழ்வியல் இவற்றை நிறையவே உங்களுக்குப் பெற்றுத்தரும்” என்று சொல்கிறார்கள்.

மனிதன் உற்பத்தியில் ஈடுபடும்போது உழைப்பைச் செலுத்த வேண்டியிருக்கிறது. உழைப்பில் ஒரு மகிழ்ச்சி உள்ளது. ஆனால், தொழில்மயமாக்கல் பெரிய பெரிய ஆலைகளை நிறுவியபோது மனிதர்கள் தங்கள் உழைப்பை இயந்திரமயமாகக் கொட்ட வேண்டியிருந்தது. அவனது உழைப்பில் கிடைக்க வேண்டிய மகிழ்ச்சி, இந்த இயந்திரத்தனமான உழைப்பில் கிடைக்காமல் போகிறது. அவன் உழைப்பு சுரண்டலுக்கு உள்ளாகிறது. இதன் மூலம் மனிதர்கள் தங்கள் உழைப்பிலிருந்து அந்நியமாகிறார்கள் என்கிறார் காரல் மார்க்ஸ்.

இன்று மனிதன் உழைப்பின் மூலம் கிடைக்கும் கூலி அதீத நுகர்வு காரணமாக மீண்டும் அவனிடமிருந்து திருடப்படுகிறது. இது ஒரு வகையான சுழல். இந்த வேடிக்கையான சுழலிலிருந்து ஜோஷ்வாவும், ரியானும் விலகி நிற்கிறார்கள்.

இவர்களது இந்த மினிமலிச வாழ்வியலை மையமாக வைத்து Minimalism: A Documentary About the Important Things என்னும் ஓர் ஆவணப்படம் எடுக்கப்பட்டு உலகம் முழுக்க வரவேற்பையும் பெற்றது. நெட்ஃப்ளிக்ஸ் அக்கவுன்ட் இருப்பவர்கள் இந்தப் படத்தைப் பார்க்கலாம்.

இருவரும் வேலையை விட்ட பிறகு புத்தகம் எழுதுதல், பயிற்சி வகுப்பு நடத்துதல் என்று ஜாலியாக ஊர் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், எல்லோருக்கும் இவ்வகையான ஒரு வாழ்வியல் சாத்தியமா? மாற்றங்கள் சாத்தியமா?

அதற்கான உதாரணமாக நாம் இந்தியாவிலிருந்தே ஒருவரைச் சுட்டிக்காட்ட முடியும். மினிமலிசம் என்கிற சொல் முளைக்கும் முன்பே இந்திய நிலத்தில் முளைத்தவர் அவர். எளிமையே வலிமை என்கிற சித்தாந்தத்தால் தன் வாழ்க்கையை மட்டுமல்ல ஒரு நாட்டின் அரசியல் விதியையே மாற்றி அமைத்தவர் அவர். ஆம், நீங்கள் யூகித்து விட்ட அந்த ‘மூத்த மினிமலிஸ்ட்’ பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.

(கட்டுரையாளர் சந்தோஷ் நாராயணன், ஓவியர், அட்டைப்பட வடிவமைப்பாளர், விளம்பர வடிவமைப்பாளர், எழுத்தாளர். இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

முந்தைய அத்தியாயங்கள்:

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

அத்தியாயம் 9

அத்தியாயம் 10

அத்தியாயம் 11

அத்தியாயம் 12

அத்தியாயம் 13

அத்தியாயம் 14

அத்தியாயம் 15

அத்தியாயம் 16

புதன், 14 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon