மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 26 மே 2020

நிதி சேவைக்கு தொழில்நுட்பம் அவசியம்: பிரதமர்!

நிதி சேவைக்கு தொழில்நுட்பம் அவசியம்: பிரதமர்!

டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலமாக இந்தியாவில் மக்கள் பலனடைந்து வருவதாகவும், நிதி சேவை மக்களை சென்றடைவதில் டிஜிட்டல் பெரும் பங்கு வகிக்கிறது என சிங்கப்பூரில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார்.

கிழக்கு ஆசிய 13வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று (நவம்பர் 13) சிங்கப்பூர் சென்றடைந்தார். இரு நாட்களில் மாநாட்டில் பங்கேற்கும் முக்கிய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார்.

இந்நிலையில் தனது முதல் நிகழ்ச்சியாகச் சிங்கப்பூர் ஃபின்டெக் மாநாட்டில் அவர் இன்று (நவம்பர் 14) கலந்துகொண்டார். அம்மாநாட்டில் அபிக்ஸ் (APIX) எனப்படும் நிதி நிறுவன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்திப் பேசிய மோடி, வங்கி கணக்குகள் இல்லாமல் பரிவர்த்தனை செய்துகொள்வதற்கு இந்தத் தொழில்நுட்பம் உதவும். மேலும் இதன் மூலமாக பண மோசடி மற்றும் இதர நிதி தொடர்பான குற்றங்கள் தடுக்கப்படும் என தெரிவித்தார்.

டிஜிட்டல் தொழில்நுட்பம் குறித்துப் பேசிய அவர், இந்தியாவில் 130 கோடி மக்களுக்குமான நிதி சேவையை நடைமுறைப் படுத்தியுள்ளோம். இதன் மூலமாகச் சிறிது காலத்திற்குள் 120 கோடி மக்களுக்கு பயோமெட்ரிக் அடையாளம் வழங்கப்பட்டு, வங்கி கணக்குகளும் தொடங்கப்பட்டிருக்கிறது. 2014ஆம் ஆண்டு நான் பொறுப்பேற்கும் முன்பு வரை 50 சதவீதத்திற்கும் குறைவான மக்களே வங்கியில் கணக்குகளை வைத்திருந்தனர். ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது. உலகின் மிக பெரிய சமூக உள்கட்டுமானம் வாயிலாக கோடிக்கணக்கான பயோமெட்ரிக் அடையாளங்கள் மூலம் கோடிக்கணக்கான வங்கி கணக்கு மற்றும் கைப்பேசிகளை இந்திய மக்கள் பெற்றுள்ளனர்.

மேலும், டிஜிட்டல் வளர்ச்சிக்குப் பின்னர் ரூ பே, பீம் மூலமாக பண பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. தற்போது இந்தியாவில் 128 வங்கிகள் யூபிஐ மூலம் இணைக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மாதங்களில் யூபிஐ மூலம் நடந்த பண பரிமாற்றம் 1500 மடங்கு அதிகரித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் பரிவர்த்தனையின் எண்ணிக்கை 30 சதவீதத்திற்கும் அதிகமாக வளர்ந்து வருகிறது எனக் கூறினார்.

தொழில்நுட்பத்தின் வாயிலாக புதிய வரலாற்றுப் பரிணாமத்திற்கான முக்கிய கட்டத்தில் இருக்கிறோம். முன்பெல்லாம் கணினியில் சேமித்துக் கொண்டிருந்தோம். ஆனால் தற்போது இணையத்தில் சேமிக்கும் வசதிகளுடன் வந்துவிட்டது. இணையதளத்தில் பயணித்த நாம் சமூக ஊடகத்திற்குள் வந்துவிட்டோம். நாம் தொழில்நுட்பத்தில் குறைந்த காலத்திற்குள் நீண்ட தூரம் பயணித்து வந்துவிட்டோம்” என்று பேசினார்.

புதன், 14 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon