மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 1 ஜுன் 2020

புத்தகத்தை அழிக்க உத்தரவு!

புத்தகத்தை அழிக்க உத்தரவு!

தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக எழுதப்பட்ட ’தமிழ் ஈழம் சிவக்கிறது’ என்கிற புத்தகத்தைத் திருப்பி வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

தமிழ் ஈழத்துக்கு ஆதரவாகப் புத்தகம் வெளியிட்டதாக, 2002ஆம் ஆண்டு தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கைது செய்யப்பட்டார். அவர் வெளியிட்ட புத்தகங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இது சம்பந்தமான வழக்கை, 2006ஆம் ஆண்டு தமிழக அரசு வாபஸ் பெற்றதையடுத்து, இந்த வழக்கில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட புத்தகங்களை திரும்பத் தரக் கோரி பழ.நெடுமாறன் தாக்கல் செய்த மனுவை சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பழ.நெடுமாறன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி எம்.வி.முரளிதரன் விசாரித்தார்.

வெளிநாடுகளுக்கு இந்த புத்தகங்களை ஏற்றுமதி செய்ய வேண்டும் எனவும், வழக்கு வாபஸ் பெறப்பட்ட பின்னரும் இந்த புத்தகங்களைக் காவல் துறையினர் பாதுகாப்பில் வைத்திருப்பதால் எந்த பயனும் இல்லை எனவும், பழ.நெடுமாறன் தரப்பில் வாதிடப்பட்டது.

“இந்திய ராணுவத்துக்கு எதிராகவும், படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் பற்றியும், இந்த புத்தகத்தில் குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த புத்தகங்களைப் புழக்கத்துக்கு அனுமதித்தால் பொது அமைதி பாதிக்கப்படும் எனக் கூறிய கீழமை நீதிபதி, புத்தகங்களை திருப்பி வழங்க மறுத்து உத்தரவிட்டுள்ளார்” என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பழ.நெடுமாறன் மனு மீதான உத்தரவைத் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

இன்று (நவம்பர் 14) நீதிபதி முரளிதரன் முன்னிலையில், இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது, தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக ’தமிழ் ஈழம் சிவக்கிறது’ என்ற பெயரில் தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் எழுதிய புத்தகத்தைத் திருப்பி வழங்க மறுப்பு தெரிவித்தும், பறிமுதல் செய்யப்பட்ட புத்தகங்களை திருப்பித் தரக் கோரி பழ.நெடுமாறன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார். சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி புத்தகங்களை அழிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

புதன், 14 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon