மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 1 ஜுன் 2020

கஜா: தப்புமா கடலூர் மாவட்டம்?

கஜா: தப்புமா கடலூர் மாவட்டம்?

கஜா புயல் கடலூர் நாகை மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் ஆகிய மாவட்டங்களை பாதிக்கவுள்ள நிலையில், கஜா புயலிடமிருந்து காப்பாற்றப் படுவோமா என்ற கேள்வி கடலூர் மாவட்ட மக்களிடம் எழுந்துள்ளது.

ஏற்கனவே சுனாமிப் பேரலையினாலும் தானே, நிஷா புயல்களாலும் பெரும் பாதிப்புக்குள்ளான கடலூர் மாவட்டம் தற்போது கஜா புயலை சந்திக்கவுள்ளது. கஜா புயலில் கடலூர் மாவட்டத்தை பாதுகாக்க பல இயற்கை பேரிடர் காலங்களில் அனுபவம் பெற்ற வேளாண்துறை செயலரும், கடலூர் மாவட்டத்தின் சிறப்பு மேற்பார்வையாளருமான ககன் தீப்சிங் பேடி ஐ.ஏ.எஸ், இன்று (நவம்பர் 14) கடலூர் வந்துள்ளார்.

சிறப்பு மேற்பார்வையாளர் ஆலோசனைகள்படி, நேற்று நவம்பர் 13ஆம் தேதி கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் மாவட்ட அனைத்து அதிகாரிகளுடன் ஆலோசனைகள் கூட்டம் நடத்தினார். கூட்டத்தில் திட்ட அதிகாரி மகேந்திரன், சப் கலெக்டர்கள், பிடிஓக்கள்,தாசில்தார்கள், காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன், தீ அணைப்புத்துறை மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டார்கள். கூட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பற்றி பேசினார்கள்.

மாவட்டத்தில் 13 ஒன்றியங்களில் 4ஒன்றியங்கள் கடற்கரையோரம் உள்ளன. 49

கிராமங்கள் உள்ளன. பாதிப்புக்குள்ளாகக் கூடிய 274 பகுதிகள் கண்டறியப்பட்டு 19 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 28 புயல் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாநிலப்பேரிடர் மீட்புக்குழுவில் பயிற்சி பெற்ற 117 காவலர்கள், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் 75பேர் தயார் நிலையில் உள்ளனர். மக்களுக்கு மட்டுமல்லாமல் கால்நடைகளுக்கும் பாதுகாப்பு மையங்கள், அவற்றுக்கான தீனிகளும் ஏற்பாடு செய்யபட்டுள்ளன. அரிசி, கோதுமை,சர்க்கரை, பால் பவுடர், 276 ஜேசிபிக்கள், 196 ஜெனரேட்டர்கள், 219 மரம் அறுக்கும் மிஷின்கள்,மணல் மூட்டைகள் என பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மீனவர்கள் பகுதிக்கு நேரடியாகச் செல்லும் ககன் தீப்சிங்பேடிக்கு அவர்களின் ஆதரவு பெருகி வருகிறது. மீனவர்கள் அனைவரும் நீங்கள் அழைக்கும் நேரத்துக்குப் படகுகளோடு வந்து மீட்புப் பணியில் ஈடுபட தயாராகவிருக்கிறோம் என்று நம்பிக்கை அளித்துள்ளனர்.

ககன் தீப் சிங் பேடி அவர்களை மின்னம்பலம் சார்பாக தொடர்புகொண்டு கேட்டோம், ”இயற்கைப் பேரிடரிலிருந்து மக்களையும் உடைமைகளையும் பாதுகாக்க அரசியின் ஆதரவோடும்,அதிகாரிகள், அரசு ஊழியர்கள்,காவல்துறை, தீ அணைப்புத் துறையினர் உறுதுணையோடு கூட்டாகக் களத்தில் நிற்கிறோம். நிச்சயம் பெரும் சேதம் இல்லாத அளவுக்கு மாவட்டத்தை பாதுகாப்போம் என்ற நம்பிக்கையை அவர் அளித்தார். அந்த நம்பிக்கையோடு விடைபெற்றோம்.

இதற்கிடையே கஜா புயலை முன்னிட்டு நாளை(நவம்பர் 15) நாகை கடலூர் மாவட்டங்களிலுள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கஜா புயலின் வேகம் மணிக்கு 6 கி.மீட்டராக குறைந்துள்ளது. இதனால், நாளை மாலைதான் புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

புதன், 14 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon